பிணை கொடுப்பதற்காக உளவியலாளர்கள் கொடுக்கும் அறிக்கை!

 












பிணை கொடுப்பதற்கான அமைப்பு வெளிநாட்டில் உண்டு. இந்த அமைப்பு குற்றவாளி யார், எப்படிப்பட்டவர், செய்த குற்றத்தின் இயல்பு ஆகியவற்றை அறிந்துதான் மனுவை பரிசீலிக்கிறது.. இந்தவகையில் உளவியலாளர் என்ன அறிக்கை கொடுக்கிறாரோ அதுவும் முக்கியம். இதில் குற்றவாளி பிரச்னையானவர் இல்லை என கொடுத்து வெளியில் சென்று குற்றம் செய்தால் உளவியலாளர் மட்டுமல்ல பிணை கொடுத்த அமைப்பும் மாட்டிக்கொள்ளும்.

கார்ல் வெய்ன் பன்டிசன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்த காரணத்தால் பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளானார். ஆனால் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு கார்லுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆறே வாரம், போக்குவரத்து சிக்னல் ஒன்றில் காவலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

மோசமான குற்றச்செயல் செய்த நபருக்கு எதற்கு முன்கூட்டியே பிணை கொடுக்கிறார்கள்? கார்ல் என்ற நபருக்கு இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல. 1961ஆம் ஆண்டு தொடங்கி 1984ஆம் ஆண்டு வரையில் பண்ட்சன் நிறைய பிணை விதிகளை மீறித்தான் சென்றுகொண்டிருந்தார். பத்தாண்டுகள் தண்டனை கொடுத்த வழக்கில் கூட பத்து மாதங்களில் பிணை வழங்கப்பட்டு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். கார்லின் காதலி, கார்ல் ஜாலியானவர், அடிக்கடி நகைச்சுவையைச் சொல்லிக் கொண்டிருப்பார் என்று கூறினார். இதை விமர்சித்தவர், காதலுக்கு கண்கள் இருக்காது சரிதான். ஆனால் தொடர் குற்றங்களைச் செய்தவருக்கு பிணை வாரியம் எப்படி பிணை வழங்கலாம் என்ற நியாயமான கேள்வியை எழுப்பினார். வாரியம் அதன் அமைப்பில் சிக்கலான பிரச்னையைக் கொண்டிருந்தது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதில் இணைந்திருந்தனர். எனவே, அவர்களுக்கு குற்றம், மருத்துவ அறிக்கை, உளவியலாளர்கள் கருத்து பற்றியெல்லாம் பெரிய அறிவு கிடையாது. எனவே, தட்டினால் திறக்கப்படும் என்பது போல விண்ணப்பித்தவர்களுக்கு பிணை வழங்கினர்..

உளவியலாளர்கள் கூட சிலசமயங்களில் மன அழுத்தம் காரணமாக வேலை நெருக்கடி காரணமாக கைதிகள் பற்றி பதினைந்து நிமிடங்களில் முடிவெடுத்து அறிக்கையை எழுதுகிறார்கள். இந்த வகையில் கெய்ன் என்ற கொள்ளைக்காரர் ஒருவருக்கு பிணை  அறிக்கையில் உளவியலாளர் சமூகத்தோடு இணைந்து வாழாத மனிதர் என எழுதினார். இதனால் பிணை வாரியம் கெய்னின் பிணை மனுவை நிராகரித்தது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கைதி தற்கொலை செய்துகொண்டார். 

இதில் யார் செய்தது தவறு? பிணை வாரியம் எடுத்த முடிவில் பிழையா, குற்ற வழக்குகளின் அடிப்படையில் பதினைந்து நிமிட அறிக்கை தயாரித்த உளவியலாளர் தவறு செய்தாரா?

 அந்த நேரத்தில் நாளிதழ் ஒன்றில் ராபர்ட் ஹரே உளவியல் கட்டுரை எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு தொலைபேசியில் பெண்மணி ஒருவர் அழைத்தார். அவர், சைக்கோபதி செக்லிஸ்ட் அறிகுறிகளைப் பார்க்கும்போது, எனது பையன் சைக்கோபாத் போல தெரிகிறது என்றார். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறான் என்று கூடுதல் தகவல் சொன்னார்.  சிறையில் உள்ளவரை வெளியே எடுப்பது கடினம். அதற்கு உளவியல் சோதனைகளை அரசு அமைப்புகள்தான் செய்யும் என ராபர்ட் சொன்னார். அதற்கு அந்த பெண்மணி, அவன் சிறையில் இருந்து வெளியே வரவேண்டும். அங்கேயே இருக்கட்டும். அவனால் எங்களுக்கு நிறைய பிரச்னைகள். சிறுவயதில் அவனது தங்கையிடம் தவறாக நடந்துகொண்டான். இப்போது கூட சிறை சென்றிருப்பது, அப்பாவின் நிறுவனத்தில் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காகத்தான் என்று சொன்னார்.

டாக்டர் டெத் என மேற்குலகில் அழைக்கப்பட்டவர், ஜேம்ஸ் கிரிக்சன். இவர்தான் சைக்கோபதி குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை கொடுக்கப்படுவதற்கான விதிமுறைகளை உருவாக்கியவர். பெரும்பாலும் ஜூரிகளைக் கூட ஒப்புக்கொள்ள வைக்கும் அளவுக்கு விதிமுறைகளை உருவாக்கிய உளவியல் மருத்துவர் இவரே.

ஒருவர் வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கத்தோடு ஒருவரைத் தாக்கி கொல்வது

எதிர்காலத்தில் ஒருவரை தாக்குவதற்கான, வன்முறையில ஈடுபடுவதற்கான காரணங்கள் இருப்பது

ஒருவரின் மரணத்திற்கு தேவையான தூண்டுதல் இல்லாமல் இருப்பது.

கிரிக்சன், இரண்டு நாட்களில் மூன்று குற்றவாளிகளுக்கான தண்டனையில் பங்கேற்றார். அதன் இறுதி முடிவாக, மூன்றிலும் ஜூரிகள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்தனர்.

ஆரோன் லீ ஃபுல்லர் என்பவரின் வழக்கைப் பார்ப்போம். இதில் தனது கருத்தை டாக்டர் டெத் தெளிவாக தெரிவித்திருக்கிறார். வழக்கு குறிப்புப்படி, வயதான பெண்ணின் வீட்டிற்கு சென்று கொள்ளையடித்த ஆரோன், பாலியல் ரீதியாகவும் முதிய பெண்மணியை தாக்கியிருக்கிறார். பிறகு கொன்றார். இதுபற்றிய விசாரணையில் டாக்டர் டெத்தின் கருத்தைக் கேட்டனர். அதற்கு அவர், இதில் எந்த கேள்வியும், சந்தேகமும் கிடையாது. நீங்கள் கூறும் குற்றவாளி தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட்டவர். எதிர்காலத்திலும் நிறைய குற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. சமூகத்திற்கு இதுபோன்ற நபர்களின் இருப்பு அபாயமாகவே அமையும். 

பொது சமூகம், சிறையில் உள்ள கைதிகளுக்கும் கூட ஆபத்து ஏற்படுமா என்ற கேள்விக்கு,

நிச்சயமாக. அவர் பொது சமூகத்தில் செய்த குற்றச்செயல்களை சிறைக்குள்ளும் செய்ய அதிக வாய்ப்புள்ளது.  என்ற உறுதியாக தெரிவித்தார் டாக்டர் டெத் எனும் கிரிக்சன். கைதிகள் மறுவாழ்வு, பிணை என எந்த மாற்று சிந்தனைகளுக்கும் இடமே கிடையாது. வழக்கில் கிரிக்சன் வந்தால் குற்றவாளிகள் அங்கே இங்கே நகரவே முடியாது. நேராக மரணதண்டனைக்கு சென்றுவிடுவார்கள். கருத்து சொன்ன எழுபது வழக்குகளில் 69 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கச் செய்தார். பொதுவாக உளவியல் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டு மட்டுமே தண்டனைகளை கொடுத்துவிட மாட்டார்கள். ஆனால் டாக்டர் டெத் தனது வசீகரமான வாதங்கள், கருத்துகளால் ஜூரிகளை அதற்கு மேல் யோசிக்க என்ன இருக்கிறது என நினைக்க வைத்தார்.

 டாக்டர் டெத், உளவியல் ரீதியான ஆய்வை திறம்பன செய்திருந்தால் மரண தண்டனை பெற்றவர்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக கூட வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. அறிவியல் அடிப்படையிலான ஆய்வு, குற்றவியல் துறைக்கும் உதவியாக இருக்கும். ஆனால் கிரிக்சன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உள்மனதில் தீர்மானித்தார். எனவே, தண்டனைகளை வழங்குமாறு தனது கருத்தை வடிவமைத்துக் கொண்டார்.

ஒரு வழக்கில் ராபர்ட் ஹரே, குற்றவாளி தரப்பு வழக்கறிஞருக்கு சைக்கோபதி செக்லிஸ்டைப் பற்றிய தனது கருத்தை வெளியிட்டார். இதன்படி, அரசு தரப்பைச் சேர்ந்த உளவியலாளர் சைக்கோபதி செக்லிஸ்டில் உள்ள பல்வேறு விதிகளை ஆராயவில்லை. அவர் குற்றவாளிக்கு தண்டனை அளிக்கவும். தனது கருத்தை வலுவாக்கவுமே பயன்படுத்தினார். உளவியல் மருத்துவரின் முடிவு, கருத்து, அறிக்கை ஆகியவற்றை அரசு தரப்பு வழக்குரைஞர் முக்கியமான ஆதாரமாக கொள்வார். எனவே, குற்றவாளி சைக்கோபாத் இல்லையென நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு, சிறை தண்டனை விதித்தது. சைக்கோபதி செக்லிஸ்ட் என்பது ஒரு கருவிதான். இதை உளவியலாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அது சர்வரோக நிவாரணி கிடையாது. ஆனால் பலரும் மனதில் முன்முடிவுகளை எடுத்துவிட்டு அதற்கு சைக்கோபதி செக்லிஸ்டில் வலுவான ஆதாரங்களைத் தேடுகிறார்கள்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்