க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

 













மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்

 

ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான்.

தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவிர மூடிக்கொள்ள வேண்டும். இது அங்கு முக்கியமான விதி.

ஆறு ஆன்மிகத்தலங்களும் வெவ்வேறு நேரத்தில் இயங்குபவை. சில நாட்களில் விடுமுறையாகவும் இருக்கும். எனவே, இதை அறிந்து வழித்தடம் அறிந்து சென்றால்தான் உங்கள் பயணம் சிறந்த அனுபவமாக இருக்கும்.

கிரேட் மெட்டியோரோன், என்ற ஆன்மிகத்தலம் முதலில் பார்க்கவேண்டியது. இங்கு தோட்டம், அருங்காட்சியகம் எல்லாம் உண்டு. துறவிகள் தங்கள் உணவைத் தயாரித்துக்கொள்ளும் சமையல் அறை முதற்கொண்டு பார்வையிடலாம். ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசமாக இருப்பது மண்டையோடுகள், எலும்புகள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதுதான். அவையெல்லாம் மடத்தில் வாழ்ந்த துறவிகளின் உடல்கள்தான். இப்படி பராமரித்து வருவது  அவர்களின் மரபு.

வர்லாம் எனும் இடத்திற்கு அடுத்து செல்லலாம். இங்கு, மலை உச்சியில் நின்று இயற்கை அழகை ரசிக்கலாம். அந்தளவு உயரம். அடுத்து அகியா டிரியாடா எனும் இடத்திற்கு மலையேற்றம் செல்லலாம். இந்த இடத்தை ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி என்ற படத்தில் வில்லனின் காரியாலயமாக காட்டியிருப்பார்கள். பயப்படாதீர்கள். அது சினிமா. நீங்கள் இப்போது நடப்பது நிஜம். அகியோஸ் டெஃபனோஸ், ரூசானோவ், நிக்கோலாஸ் அனாபாசாஸ் என சில இடங்களை பார்க்கலாம். இங்கு இருந்து பார்த்தால் கைவிடப்பட்டு இடிந்துபோன ஆன்மிக தலங்களைக் கூட பார்க்கலாம். இறுதியாக நாளின் முடிவில் மலை மீது இருந்தால் அமைதியாக கீழே  உட்கார்ந்து சூரியன்மறையும் காட்சியை பாருங்கள். சாலையில் சென்றாலும் கூட சூரியன் மறையும் காட்சியை ரசிப்பதற்கான இடங்கள் உண்டு. வாழ்க்கையே இயற்கை அழகை ரசிப்பதற்குத் தானே?

வேர்ல்ட்ஸ் கிரேட்டஸ்ட் ஹெரிடேஜ் சைட்ஸ் நூல்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்