தோற்றுப்போவதற்கு செத்துவிடலாம் என நினைத்து போராடும் வக்கீலின் சதுரங்க ஆட்டம் - முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் - அபினவ் சுந்தர்

 













முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ்

மலையாளம்

வினித் சீனிவாசன்

இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக் 

சுகபோகங்களில் ஆசை கொண்ட வக்கீலின் அனைத்துக்கும் ஆசைப்படும் வாழ்க்கைக் கதை.

முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நினைத்தது போல வாழ்க்கையில் பிரேக் கிடைக்கவில்லை. பணம், புகழ் என ஏதும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் சுய முன்னேற்ற நூல்களில் உள்ள அனைத்தையும் மாற்றுக்கருத்து  இல்லாமல் பின்பற்றுகிறவன்தான் முகுந்தன் உண்ணி. இப்படி இருப்பவனின் வாழ்க்கை ஒருநாள் மாறுகிறது. அவனது அம்மா, வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்றால் திகைப்புக்கு உள்ளாகி கீழே விழுகிறாள். இதனால், கால் எலும்பு விரிசல் காண்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய நினைக்கிறான். ஆனால், கையில் பணம் இல்லை. அப்போது அவன் வேலை செய்த வக்கீலின் நிறுவனத்திலிருந்தும் கூட  வெளியேறிவிட்டிருக்கிற சூழல். கட்டணத்தை குறைக்க, மருத்துவமனையின் பில்லிங்கில் உள்ள பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் எதிரில் உள்ள கவுண்டரில் பணத்தை ஒருவர் கற்றை கற்றையாக அள்ளி எடுத்து கட்டுகிறார். அதைப் பார்த்து அதன் பின்னால் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறான். அதே வழியைப் பின்பற்றி காசு சம்பாதிக்க நினைக்கிறான். அங்குதான் அவனுக்கு போட்டியாக வக்கீல் வேணு வருகிறார். அவரை எதிர்கொண்டு வீழ்த்தி

 

பணம் சம்பாதிப்பதில் சாம, பேத, தண்ட வழிகளை எப்படி பயன்படுத்தி வெல்கிறான் என்பதே கதை.

காப்பீடு சார்ந்த உலகில் நடைபெறும் மோசடிகளை காட்சிபடுத்தியிருக்கிறார்கள். வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோரோடு காப்பீட்டு துறையினரும் ஒன்று சேர்ந்து விபத்துகளை பதிவு செய்து லாபம் பார்க்கிறார்கள். இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது என்பதை விளக்கமாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.

படத்தை நேர்மை எருமை என புலம்பாமல் பார்த்தால் நல்லது. அறச்சீற்றம் கொள்பவர்கள் படம் பார்க்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் நெஞ்சு வெடித்துவிட வாய்ப்புள்ளது. படத்தில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் அதிகாரம், பணம் ஆகியவற்றுக்கு அடிபணிந்து தங்களது வாழ்க்கையை நடத்திக்கொள்பவர்கள்தான். உதவி கமிஷனர், முகுந்தன் உண்ணியின் முன்னாள் காதலி ஜோதி, நண்பன் ராபி ஆகியோர்தான் இதில் நேர்மை எருமை என பேசிக்கொண்டு முகுந்தனை பகைத்துக் கொண்டு  வாழ்க்கையை நாசம் செய்துகொள்பவர்கள்.

 உலகில் நல்லது கெட்டது என தனியாக ஏதுமில்லை. அனைத்துமே நம் மனதில் உள்ளதுதான். இதில் முகுந்தன் உண்ணியைப் பொறுத்தவரை அதிகாரமும், பணமும் தனக்கு வேண்டும் என நினைக்கிறான். அதைப் பெற தான் பெற்ற சட்ட அறிவு, புத்தி சாதுர்யம் என அனைத்தையும் பயன்படுத்துகிறான். நட்பு, பகை என்பதெல்லாம் முகுந்தனின் உலகத்திலேயே கிடையாது. எதிராக நின்றால் அடித்து நொறுக்கி கீழே முடக்குவதுதான் ஒரே பதிலடி.

படத்தின் ஒளிப்பதிவு, இசை, கதை சொன்ன விதம் என அனைத்தும் எடுத்துக்கொண்ட கதைக்கு பொருத்தம். வினித் சீனிவாசனின் நடிப்பும், தோற்றமும் படத்தை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஏறத்தாழ முகுந்தனின் இயல்பை ஒத்த பெண் பாத்திரமாக ரிஷப்சனிஸ்ட் மீனாட்சி வருகிறார். இவர் இறுதியாக சொல்லும் வசனம்தான் படத்தின் அடிப்படையான இயல்பைக் குறிக்கிறது. அதை நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

படத்தில்  முகுந்தன் உண்ணியை சைக்கோபாத் என்று கூட சிலர் கூறலாம். அவர் பிறரைப் போலவே சுயநலமானவர். தன்னுடைய, தன்னை நம்பியுள்ளவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் இருக்கவேண்டுமென நினைக்கிறார். அதற்காக முன்னேறும் வழிகளை தேடுகிறார். அதில் போட்டிகளை சமாளித்து வெற்றியும் பெறுகிறார். அவர் மட்டுமல்ல, அவருடைய மனைவியாக வரும் ரிஷப்சனிஸ்ட், போலீஸ்காரர், வக்காலத்து வாங்கும் ஆட்கள் ஏன் விபத்துக்குள்ளானவர்கள் கூட ஊழல் கறை படிந்தவர்களாக, தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என பார்ப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். படத்தில் காட்சியாக காணும் முகுந்தன் உண்ணியின் உணர்ச்சிகள், உடல்மொழி என்பது எளிதாக பிறர் அடையாளம் காணும்படி இருக்காது. இதற்கு மாற்றாக அவரது மனதில் உள்ள எண்ணங்களை குரல் வழியாக வெளிப்படுத்தும் டெக்னிக் நன்றாக இருக்கிறது. படத்தில் அவல நகைச்சுவை என்பது முகுந்தன் உண்ணியின் குரல் மூலம்தான் வெளிப்படுகிறது. ஒருகட்டத்தில் அவரது குரலும் கூட படத்தில் பாத்திரம் போலவே மாறிவிடுகிறது.

இதில் பலவீனமான இடம் என்று நினைப்பது, வக்கீல் வேணுவின் பின்னணி பற்றி அவர் ஆராயாமல் இருப்பதைத்தான். எப்படி வேணு பிறர் அறியாதபடி நேர்த்தியாக தவறு செய்கிறார் என மெல்ல குற்ற வலையமைப்பை புரிந்துகொள்பவர், தானும் அதே போல வலையமைப்பை மெல்ல உருவாக்குகிறார். வேணுவின் தொழிலை, தொழில் கூட்டாளிகளை அறிபவர் அவர்களை மெல்ல வளைக்கிறார். இதில் முகுந்தன் கவனிக்க தவறுவது, வேணுவின் குடும்ப உறவுகளைத்தான். அதையும் படத்தில் முகுந்தனுக்கு எதிரான சவாலான சிக்கல்களில் ஒன்றாக நிறுத்திவிடுகிறார் இயக்குநர் அபினவ்.

கோல்ட் படத்தில் அல்போன்ஸ் புத்திரன் தவறவிட்டதும் இந்த நெகட்டிவான இடம்தான் என்று தோன்றுகிறது. தங்கம் யாருக்கும் பித்து ஏற்றும் ஒன்று. ஆனால் அதை ஸ்பீக்கர் வடிவில் மறைத்து வைத்து அதை பார்த்து நாயகன் ஜோஷி எடுத்தவுடன் கொண்டாட்டமாக ஒரு பாடலை ஒலிக்க விடுகிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு நல்லவனாக முதல்வர் நிதிக்கு பணம் அனுப்புவது.. வலுக்கட்டாயமாக ஒருவனை நல்லவனாக்குவது போலத்தான் ஆகிறது.

இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக் தனது படத்தை தெளிவாக எடுத்திருக்கிறார். படம் முகுந்தன் உண்ணி வெற்றி பெறுவதை மட்டும் காட்டாமல் அவர் செய்யும் சொதப்பல்களால் எப்படி அவரே மாட்டிக்கொள்கிறார் என்பதையும் காட்டுகிறது.

வீட்டுக்குள் வரும் பாம்பால் அம்மா கீழே விழுகிறார். முகுந்தன் அந்த பாம்பை தனியாக அறைக்குள் எடுத்துச் சென்று அதை அடைத்து வைக்கிறார். பின்னாளில் மெல்ல அதற்கு முட்டையை உணவாக வைக்கிறார். இதற்குப் பிறகுதான் அவர் மெல்ல போலியான காப்பீட்டு உலகிற்குள் சென்று வெல்லத் தொடங்குகிறார். ஏறத்தாழ அவரது மனநிலையை குறிக்கும் காட்சி என்று கூட பாம்பை அடைத்து வைக்கும் காட்சியைக் கூறலாம்.

தோற்பதற்குப் பதில்  செத்துவிடலாம் என நினைக்கும் மனநிலை முகுந்தன் உண்ணியை  பிறர் செய்யத் தயங்கும் விஷயங்களை செய்ய வைக்கிறது. படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பார்க்கலாம். ரசிக்கலாம்.

சுயநலமே பிரதானம்

கோமாளிமேடை டீம்

 


கருத்துகள்