பழிக்குப்பழி வாங்கத் துடிக்கும் மாபிஃயா குழுக்களின் அதிகார, ரத்தவெறி! - காப்பா - ஷாஜி கைலாஷ்









காப்பா - ஷாஜி கைலாஷ்






 



காப்பா

இயக்கம் ஷாஜி கைலாஷ்

பிரிதிவிராஜ், அபர்ணா, அன்னா பென், ஆசிஃப் அலி


திருவனந்தபுரத்தில் வாழும் கொட்டா மது, பினு என இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையும், வாக்குவாதங்களும்தான் படம்.

மாஃபியா குழுக்களுக்கு இடையிலான சண்டை, அதில் பறிபோகும் உயிர்கள், வன்மம் ஆகியவற்றை நிதானமாக விவரிக்கிற படம்.

படத்தை ஆசிஃப் அலிதான் பெரும்பாலான காட்சிகளில் நகர்த்துகிறார். அவர் தனது மனைவி பினுவை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் வீட்டிற்கு முன் போலீஸ்காரர் ஒருவர் வந்து காத்து நிற்கிறார். அவர் ஆனந்த் (ஆசிஃப் அலி), பினு (அன்னா பென்) ஆகியோரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது பினுவின் பெயரின் பின்னே உள்ள திரிவிக்ரமன் என்ற பின்னொட்டு அவரை திடுக்கிடச் செய்கிறது. அவர் ஆனந்தை தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்காக அவனிடம் 50 ஆயிரம் ரூபாய் காசும் வாங்கிக்கொள்கிறார்.

ஆனந்தைப் பொறுத்தவரை அவன் பினுவை மணந்துகொண்டதால், அவளை எப்படியேனும் பழிக்குப்பழி வன்மத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறான்.. ஆனால் அவனே எதிர்பார்க்காதபடி விவகாரத்தில் மாட்டிக்கொள்கிறான். அவனை மாட்டிவிடுவது யார், கொட்டா மதுவைக் கொல்ல திட்டமிடுவது எந்த குழு என படம் நிதானமாக நகர்ந்து விளக்குகிறது.

ஆசிஃப் அலி வந்து சிறிது நேரம் கழித்தே பிரிதிவிராஜ் வருகிறார். படத்தில் அவரது முந்தைய காலகட்ட காட்சிகள் முன் பின்னே வருகின்றன. பிறரைக் கொல்லத் துணிந்தாலும் கொட்டா மதுவுக்கு மனதில் சில லட்சியங்கள், கொள்கைகள் உள்ளன. சிறுவன் ஒருவன் மூலம் செய்த கொலை, அவனை காயப்படுத்திக்கொண்டே இருக்கிறது. குற்றவுணர்ச்சியை அவனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இதன் வழியேதான் அவனது வாழ்க்கை முடிவுக்கும் வருகிறது. கொட்டா மது உருவாவதை காவல்துறை, அரசியல்வாதிகள் ஆதரவு தந்து செய்கிறார்கள். அதனால்தான் மது பெரிய மாஃபியா ஆளாக மாறுகிறான். இடதுசாரி கட்சியில் வேட்பாளராக நின்று வெல்லவும் நினைக்கிறான்.

இவனுக்கு எதிரிகள் நிறையப் பேர் காவல்துறையில், ஊடகத்தில், தொழிலில் உண்டு. அதில் மூவர் ஒன்றாக சேர்கிறார்கள்.

எதிரிகள் என தெரிந்தபிறகு அவர்களை முற்றாக அழிக்காமல் இருக்கும் தவறை கொட்டா மது செய்கிறான். இதனால் அவன் எதிர்கொள்ளும் பேரிழப்பு, தனது உயிரை விடுவதுதான்.

படத்தில் கொட்டா மதுவாக பிரிதிவிராஜ், அவன் மனைவி பிரிமிளாவாக அபர்ணா ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் திலீஷ் போத்தன், பத்திரிகையாளர் லத்தீபாக நிதானமாக வன்மத்தைக் காட்டுகிறார். 

 இதற்கடுத்து, குற்றச்செயல் செய்த குடும்பத்தில் உள்ள பினுவை மணம் செய்து அவளது உயிரைக் காப்பாற்ற இறைஞ்சும் காட்சியில் ஆனந்த் பாத்திரத்தில் ஆசிஃப் அலி நன்றாக நடித்திருக்கிறார். பினு பாத்திரத்தில் நடித்துள்ள அன்னா பென்னுக்கு அடுத்த பாகத்தில் நடிக்க காட்சிகள் கிடைக்கலாம். இந்த படத்தில் உணர்ச்சிகளை அடக்கியபடி இருக்கும் காட்சிகளே மிகுதி. ஆனந்த், அப்பாவி என்று காட்டுவது சரி. ஆனால் அவன் கொட்டா மதுவை சந்தித்தபோது கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை எளிதாக கவனித்திருக்க வாய்ப்புண்டு. அதை தனது மனைவி அணிந்திருப்பதை எப்படி பார்க்காமல் இருக்கிறார்? கருப்பு நிற மோதிரம் கைக்கு கை மாறுவதை காட்டியிருக்கிறார்கள். பினுவின் கையில் மோதிரம் இருப்பதுதான் இறுதி ட்விஸ்ட். அதை பிரமிளா ஏற்கெனவே அறிந்திருக்கிறார் என்பதே அவரது புத்திசாலித்தனத்தை சொல்லுகிறது.  

அன்னாபென் பாத்திரத்தை மலையாளிகள் இணையத்தில் மீம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, படத்தில் அவரின் பாத்திரம் வலுவாக இல்லையென்று… படத்தில் அதற்கான இடம் இல்லை. ஏனெனில் அவர் தன் கணவனுக்கு தெரியாமல் தனது திட்டங்களை பத்திரிகையாளர் லத்தீப், காவல்துறையில் பிரஜித், இன்னொரு தொழிலதிபர் மூலம் செய்து வருகிறார். நேரடியாக தனது திட்டங்களை செயல்படுத்தும்போதுதான் அன்னாபென் அவரின் பினு பாத்திரத்திற்கு தாக்குப்பிடிக்கிறாரா என்று சொல்ல முடியும். அபர்ணாவும் இந்த வகையில் கணவர் இறந்தபிறகு, வன்மத்தோடு குழுவை வழிநடத்த முயல்வதோடு திரைப்படம் நிறைவடைகிறது. அடுத்த பாகத்தில்தான் இருவரும் எப்படி நடிக்கிறார்கள் என்பதேயே பார்க்க முடியும்.

ஷாஜி கைலாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப்படம் நிதானமாக நகர்ந்தாலும் சொல்லவேண்டிய விஷயத்தை சரியாக சொல்லிவிடுகிறது. தொடர்வரிசை படங்களாக வந்தால்தான் படத்தை ப் பற்றி முழுமையாக அறிய முடியும்.

படத்தின் கதை ஜி.ஆர். இந்துகோபன்.

அவர் எழுதிய சண்முகி என்ற நாவலை தழுவி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வன்மம் தீராது.

கோமாளிமேடை டீம் 



கருத்துகள்