சூரமொக்கை செக்ஸ் காமெடி - வரலாறு முக்கியம் - சந்தோஷ் ராஜன்- ஜீவா, காஷ்மீரா, விடிவி கணேஷ்

 














வரலாறு முக்கியம்

இயக்கம், பாடல்கள்  சந்தோஷ் ராஜன் 

இசை ஷான் ரஹ்மான் 



மில்லினிய கால இளைஞனின் காதல் லட்சியப் பயணமும், அதற்கு ஏணியாக இருந்து உதவும் அரசியல்வாதியும்….

படத்தின் கதை என்பது இந்தளவுதான். சந்தோஷ் ராஜன் படத்தை செக்ஸ் காமெடியாக எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் படம் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் வந்திருக்கிறது. படத்தை ஒருவர் பார்க்க இரண்டு காரணங்கள இருக்கலாம். ஒன்று, ஜீவா. அடுத்து இசை அமைப்பாளர் ஷான் ரஹ்மான். பாடல்களை இயக்குநரே எழுதியிருக்கிறார்.

வேலை இல்லாம் சுற்றும் கார்த்திக், தங்கள் வீட்டுக்கு அருகில் குடிவரும் மலையாள குடும்பத்தின் இளைய பெண்ணை  - ஜமுனா (பிரக்யா நாக்ரா) காதலிக்கிறார். பிறகுதான் தெரிகிறது. எடுப்பான மார்புடன் ஒட்டி உரசி உசுப்பேற்றினாலும் கூட தங்கையை விட அக்கா அழகாக, இன்னும் அம்சமாக இருக்கிறார் என. உடனே தனது முதல் காதலை தூக்கிப்போட்டுவிட்டு, யமுனா என்ற அந்த பெண்ணைத் துரத்தி டார்ச்சர் செய்கிறார். அந்தப் பெண்ணின் உடல் அழகுதான் காதலுக்கு காரணம், அதுதான் தன்னை தாக்கி காயப்படுத்துகிறது என்கிறார். அந்த லூசுப் பெண்ணும் அதை ஏதோ மத்திய அரசு கொடுக்கும் வீரதீர  விருதுப் பாராட்டு போல ஏற்றுக்கொண்டு காதலிக்கிறார்.

படத்தின் காட்சிகளை நீங்கள் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கலாம் அல்லது சிறுநீர் கழித்துவிட்டு,சோளப்பொரி தின்றுவிட்டு பிறகு வந்து அமர்ந்து கூட பார்க்கலாம். ஏனெனில் படத்தில் எடுத்துக்கொண்ட கதையே செக்ஸ் காமெடி என்ற வகையில், எந்த முரணையும் நாயகன் கார்த்திக் எதிர்கொள்வதில்லை. பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் எந்த நெகிழ்ச்சியான, நாம் மனதோடு இணைந்து செல்லும் காட்சியும் கூட இல்லை. படத்தில் நாயகனை, நாயகனின் வேலையில்லாம் தொண்டு சுற்றும் விஷயத்தைக் கூட கிண்டல் செய்கிறார்கள். அப்படி கிண்டல் செய்யும் படம் பார்வையாளர்களுக்கு என்ன விஷயம் சொல்லுகிறது என்றால், நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட். படத்தில் அண்மையில் மறைந்த ஈ.ராமதாஸ், நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படத்திற்கு மலர்வளையம் வைப்போம். 

தங்கையை கிண்டல் செய்யும் கல்லூரி மாணவர்களை அடித்து உதைப்பவர், அதே காரியத்தை தான் காதலிப்பதாக சொல்லும் யமுனாவுக்குச் செய்கிறார். ஏறத்தாழ காதல் மிரட்டல்தான். அந்தப் பெண்ணும் அதை ஏற்கிறார் என்பது இன்னும் மோசம்….

காதலை  சொல்லுவதையே உன் உடல் அழகுதான் என்னை ஈர்த்தது என சொல்லுபவனை இரவில் தனது வீட்டுக்கு அழைக்கிறாள் யமுனா. அரசியல்வாதி யோசனையோடு காரசேவும், காண்டம் பாக்கெட்டுமாக அங்கே செல்கிறார் கார்த்திக். இந்த காட்சி எப்படி முடியும் என நினைக்கிறீர்கள்? காதல் பிரிவு… ஷான் ரஹ்மான் இசையில் ஒரு சோகப்பாடல்…..

நாயகன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் காப்பாற்றிவிடலாம் என நினைக்கும் காவிய பெண்களை திரும்ப மீட்டெடுக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். யமுனா இரவில் கார்த்தியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். நீ என்னை உடம்பாத்தான் பார்க்கிறே இல்லே, மனசைப் பாக்குல என்கிறார். அதைத்தான்  கார்த்திக் முதலிலேயே தெளிவாக சொல்லிவிட்டானே…..

விடிவி கணேஷின் வரலாறு முக்கியம் என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கும். படம் முடிந்தபிறகும் கூட அவரின் குரல் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அன்னக்கிளி காமெடி, படம் பார்த்ததிற்கு சற்று தேறுகிறது. ஷாரா நன்றாக நடித்திருக்கிறார். இதில் எதற்கு ஜீவா நடித்தார், என்ன இருக்கிறதென நினைத்து சொந்தப்படமாக எடுத்தார் என்று தெரியவில்லை.  

இவரின் காதல் கல்யாணமாக மாறியதா இல்லை என்பதே இறுதிக்காட்சி. இந்தப் படத்தில்  எதற்கு தொடக்க காட்சி 2050 என காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தின் இறுதியிலும் கூட மனைவியின் தங்கையோடு தொடர்பு வைத்திருப்பதாக கார்த்திக் சொல்ல படம் முடிகிறது. விகடனின் ஆர்.சரண், சூரமொக்கை என்ற வார்த்தையை பயன்படுத்துவார். இந்த படத்திற்கு அது சிறப்பாக பொருந்தும். 

தாங்க முடியாத காமநெடி

கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்