யூதமக்களின் வாழ்க்கையை உலகப்போர் பின்னணியில் அங்கதமாக விவரிக்கும் நாவல்! ஷோஷா - ஐசக் சிங்கர்
ஷோஷா
ஐசக் பாஷாவிஸ்
சிங்கர்
தமிழில் கமலக்கண்ணன்
போலந்து நாட்டைச்
சேர்ந்த எழுத்தாளர் ஐசக் பாஷாவிஸ் சிங்கர் இத்திய மொழியில் எழுதிய நாவல். தமிழில் கமலக்கண்ணன்
வெகு சிரத்தையெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்.
போலந்து நாட்டில்
உள்ள யூதக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரோன் கிரடிங்கர். இவர்கள் யூத மத ராபி குடும்பம்.
இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆரோன், இன்னொரு மதம் சார்ந்த பஷிலி – செல்டிக் ஆகியோரின்
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறான். பஷிலியின் பெண்தான் ஷோஷா. இவள் புத்திசாலி
கிடையாது. ஆனால் ஆரோன் சொல்லும் கதைகளையெல்லாம் பொறுமையாக கேட்பவள். ஆரோனுக்கு மிக
நெருக்கமான அவனை கிண்டல் செய்யாத தோழி, அவள் மட்டுமே.
ஆரோன் தனது
அப்பா படிக்க கூடாது என்று சொல்லும் நூல்களை படித்துத்தான் தனது இலக்கிய வாழ்வை தொடங்குகிறான்.
அவர்களது குடும்பம் பிழைக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. ஆரோனின் தம்பி யூத மத
வழக்கப்படி ராபி ஆகிறான். ஆனால் ஆரோன் இலக்கியவாதியாக எழுத்தாளனாகிறான்.
தமிழ் எழுத்தாளர்கள்
தமிழ்நாட்டில் எழுதிய நூல்களின் ராயல்டிக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும் நிலை. போலந்திலும்
கூட அப்படித்தான். ஆனாலும் கூட ஆரோன் நாளிதழ்களுக்கு
கட்டுரை, கதை எழுதிக் கொடுத்து நூல்களை பதிப்பகங்களுக்கு கொடுத்தும் அவ்வப்போது கிடைக்கும்
பணத்தை வைத்து சமாளிக்கிறான். நாவலில் நகைச்சுவையான சித்திரிப்பு என்றால் அது, பேராசிரியர்
பிடில்சன் எப்படி உலக தத்துவம், இலக்கியம் பற்றி பேசிவிட்டு ஐந்து சிலோட்டி கடன் கேட்கிறார்
என்பதுதான். இவர் கதையில் வரும்போது அந்தப்பகுதி தீவிரமாகுவதோடு, கூடவே அவல நகைச்சுவையான
தன்மையில் உருமாறுகிறது.
ஆரோன் எழுத்தாளர்
சங்கத்தில் நிறைய ஆட்களை சந்திக்கிறான். அந்த அனுபவங்கள், அடுத்து பல்வேறு தத்துவங்களை
கற்று சுற்றி வரும் ஹைமில், அவன் மனைவி சிலியா, வாடகை வீட்டின் பணியாள் டெக்லா, இடதுசாரி
லட்சியவாதி டோரா, அமெரிக்க நாடக நடிகை பெட்டி, அவள் கணவர் சாம் என நாவலில் குறிப்பிட்ட
பாத்திரங்கள்தான் அதிகம் வலம் வருகின்றன.
இதில் பேராசிரியர்
பிடில்சன், சிலியா, இடதுசாரி டோரா பேசும் உரையாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
நாவல் நெடுக
சிங்கர், யூத மத வழக்கங்களை விவரித்துக்கொண்டே வருகிறார். கூடவே அவர்களிடம் உள்ள மூடநம்பிக்கைகள்
ஆகியவற்றையும் பேசுகிறார். சிலியா, டோரா, பெட்டி ஆகிய பெண்களிடம் ஆரோன் கிரடிங்கர்
உடலுறவு கொள்கிறான். ஆனால் கூட அவன் பாதுகாப்பு உணர்வு கொள்வது உடல், மன வளர்ச்சி குன்றிய
ஷோஷாவுடன்தான். அதற்கான காரணங்களை வாசகர்கள் நூலை வாசித்து அதன் காரணங்களை மனதால்தான்
அறிந்துணர வேண்டும்.
ஷோஷா, ஆரோனுடன்
தனது இறந்துபோன தங்கை, தீய கனவுகளைப் பற்றி பேசுவது சுவாரசியமான பகுதி. தன் மேல் நம்பிக்கை
கொள்ளும் ஒருவரைப் பற்றியவுடன் கொடி எப்படி கொம்பை பற்றி மேலேழுமோ அப்படி ஷோஷா தன்னை
ஒழுங்கு செய்துகொள்கிறாள். திருமணமான பிறகு தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறாள் என்பதை
ஆரோன் பார்வையில் சிங்கர் கூறியுள்ளது சிறிய பத்திதான். ஆனால் வாசிக்க நன்றாக உள்ளது.
இத்தனைக்கும்
அந்த நேரம் அவர்களது வாழ்க்கை ஒன்றும் சிறப்பாக உள்ளது. யூதர்களை விரோதிகளாக கருதும்
அடிக்க நினைக்கும் கும்பல் பெருகி வருகின்றன. சாப்பிடுவதற்கான பொருட்களை குறைவு. அதை
வாங்குவதற்கு பணம் இல்லாத நிலை. ஆரோனுக்கு நாளிதழுக்கு எழுதும் தொடர் வழியாகத்தான்
பணம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் ஆரோன், ஷோஷாவுடன் குடும்பம் நடத்துகிறான்.
நாவலில் வரும் ஆரோன் கிரடிங்கர் புனிதமான ஆள் அல்ல.
சரி, ,தவறு என பலவும் நிரம்பிய சாதாரண ஆள்தான். அதனால்தான் அந்த பாத்திரம் வாசிப்பவர்களை
ஈர்க்கிறது. நம்பகத்தன்மை கூடுகிறது. அமெரிக்காவில் வாழும் ஆரோன், நாளிதழ்களுக்கு இத்திய
மொழியில் கதை, கட்டுரைகளை எழுதி வாழ்கிறார். வாழ்கிறார் என்றால் நன்றாகவே செல்வாக்காக
வாழ்கிறார். அவரது வாழ்க்கை ஹைமிலை மீண்டும் பார்க்கும்போதுதான், நடந்த துயரமான சம்பவங்களை
வாசகர்கள் அறிகிறோம்.
ஆரோன் காப்பாற்றப்படுவது
கூட பெட்டியின் காதலால்தான். ஆரோனின் வாழ்க்கை சிதைந்து போவதும் காதலால்தான். அது ஷோஷாவின்
மீது கொண்ட வினோத அன்பு, அவன் வாழ்க்கையை மாற்றிப்போடுகிறது. அவன் அந்த உறவின் எதிர்காலத்தை
உணர்ந்தே அதை தொடர்கிறான்.
ஆன்மத் தோழி
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக