கொலம்பியாவின் குழந்தை வல்லுறவு கொலையாளி

 









கிராவிடோ, லூயிஸ் ஆல்ஃபிரடோ

போதைப்பொருட்கள் பரவலாக விற்கும் நாடான கொலம்பியாவில் வன்முறை சம்பவங்களுக்கும் குறைவில்லை. மக்களைக் கொல்வது, அரசியல்வாதிகளைக் கொல்வது என்பது மழை பெய்வது, வெயில் காய்வது போல தினசரி நடக்கும்  நாடு. 1990களில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்தது. யார் இதை செய்கிறார் என தொடக்கத்தில் பலருக்கும் தெரியவில்லை.

கடத்தப்பட்டவர்களில் அதிகம் ஆண் பிள்ளைகள்தான். பெண் பிள்ளைகள் குறைவு. கொலம்பியாவின் போகோட்டாவிலுள்ள மிகுவாலிடோ என்ற மாவட்டத்தில்  காணாமல் போன பிள்ளைகளை தேடத் தொடங்கினர். 1995ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி, 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் தேடுதல் வேட்டை தொடங்கியது. பனிரெண்டு ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை என பதிமூன்று  பிணங்கள்  தோண்டியெடுக்கப்பட்டன. இதில், பிணங்களுக்கு தலைகள் இல்லை. எட்டிலிருந்து பதிமூன்று வயது வரையிலான குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர். இறந்தவர்களின் உடல்களில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. இறந்தவர்களை யார் என காவல்துறையால் அடையாளம் கண்டறிய முடியவில்லை.

1998ஆம் ஆண்டு, குழந்தைகளை கொலை  செய்த குற்றவாளியென பெட்ரோ பாப்லோ ராமிரெஸை காவல்துறை கைது செய்தது. குற்றவாளியை பிடித்துவிட்டோம் என பெருமை பீற்றிக்கொண்டாலும் அவர் சிறையில் இருந்தபோதும் குழந்தைகள் கொலைசெய்யப்படுவது குறையவும் இல்லை நிற்கவும் இல்லை. கொலைகள் நிற்காமல் தொடரவே ராமிரெஸ் விடுதலை செய்யப்பட்டார்.

1999ஆம்  ஆண்டு காவல்துறை தலைவர், நிருபர்களிடம் வெளிப்படையாகவே ‘’நடைபெறும் கொலைகளைப் பார்த்து எங்களுக்கு பயமாக இருக்கிறது. சீரியல் கொலைகாரர் அல்லது ஒரு குழு கொலைகளை செய்து வருகிறது’’ என கூறிவிட்டார். 1994ஆம் ஆண்டு தொடங்கி 55 பிணங்களை காவல்துறை கண்டறிந்தது. இந்த கொலையான உடல்களில் உள்ள ஒற்றுமை, அனைத்து உடல்களிலும் உறுப்புகள் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தன. கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல்கள் இருந்தன. உடல் உறுப்புகள் காணாமல் போயிருந்தன. இறந்துபோனவர்கள் பெரும்பாலானோர், வீடற்றவர்களின் குழந்தைகள். இதனால், உடல் உறுப்புகள் திருடி விற்கும் நெட்வொர்க்கோ என மக்கள் பலரும் பீதியடைந்து பேசத் தொடங்கினர்.

 கொலைகளுக்குக் காரணமான குற்றவாளி லூயிஸ், 1999ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். வல்லுறவு  வழக்கில் கைதானவர், நாடு முழுக்க தீவிரமாக குழந்தை கொலையாளிளைத் தேடியபோது சிறையில்தான் இருந்தார்.

1957ஆம் ஆண்டு  ஜெனோவாவில் பெற்றோருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்தார். குடிநோயாளியான தந்தையால் தினசரி கடுமையாக அடித்து உதைக்கப்பட்டார். வீட்டுக்கு அருகில் உள்ளவர்களால் வல்லுறவுக்கு உள்ளானார். ஐந்தாவதோடு படிப்பை நிறுத்தியவர், அப்படியே ஊரில் சுற்றத்  தொடங்கினார். 16 வயதில் குடிநோயாளியாக மாறியவர், தற்கொலை செய்துகொள்ள நினைத்தார்.

அப்போது தெருவில் பொருட்களை சில்லறை விற்பனை செய்பவராகவும், குழந்தைகளின் கல்வி பற்றி பேசுபவராகவும் வேலை செய்தார். இதன் மூலமே பல்வேறு பள்ளிகளில் கௌரவப் பேச்சாளராக அழைக்கப்பட்டார். அங்குதான் பிள்ளைகள் மீது லூயிஸூக்கு ஆர்வம்  பிறந்திருக்க வேண்டும்.

 1992ஆம்  ஆண்டு தொடங்கி, கொலைகளைச் செய்யத் தொடங்கியதாக கூறுகிறார். அவர் வைத்திருக்கும் டைரியில், 140 பேர்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. 1999ஆம் ஆண்டு மட்டும் கொலம்பியாவில் 25 ஆயிரம் கொலைகள் நடைபெற்றன.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, நீர் கொடுப்பதாக கூறி கூட்டிச்சென்று அவர்களை வல்லுறவு செய்து கொன்றார் லூயிஸ். ‘’என்னை பனிரெண்டு வயதில் கட்டி வைத்து வல்லுறவு செய்தனர். அப்போதிருந்து என் மனதில் தாழ்வுணர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  ’’ என விசாரணையில் காரணம் சொன்னார். 140 என்ற கொலைகளின் எண்ணிக்கை பின்னாளில் 180க்கும் அதிகமாக சென்றது.  60 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதுதான் அந்த நாட்டில் அதிகாரப்பூர்வமான நெடுந்தண்டனை. ஆனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய தண்டனை என்பதால் நீதிபதிகள், வட்டியும் முதலுமாக சேர்த்து 835 ஆண்டுகள் தண்டனையை விதித்தனர்.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்