தான் வளர்த்த நாய் மூலம் பால்ய கால காதலியை பழிவாங்கும் நாயகன் - ரிங் மாஸ்டர் - ரஃபி

 









ரிங் மாஸ்டர் - திலீப், கீர்த்திசுரேஷ், ஹனிரோஸ்

ரிங் மாஸ்டர்



 ரிங் மாஸ்டர்

இயக்கம் – ரஃபி

திலீப், ஹனிரோஸ், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் வெஞ்சரமூடு


சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்பட்ட அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையான பிரின்ஸ், நாய் மருத்துவமனையில் தனது நண்பர் முத்துவுடன் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று வேலை தேடிக்கொள்ள நினைப்பவருக்கு  கிடைப்பதோ, பணக்கார வீடுகளில் நாய் பராமரிப்பு வேலைதான். அந்த வேலையின் மூலமே அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத வாய்ப்புகள் கிடைக்கின்றன அப்போது, கடந்தகாலத்தில் பிரின்ஸைப் பயன்படுத்திக்கொண்டு காதலிப்பதாக நடித்து சினிமாவில் உயர்ந்த பால்ய கால தோழியையும் சந்திக்கிறார். இருவருக்குள்ளும் உறவு உருவானதா, பிரின்ஸ் வன்மம் கூடி பழிவாங்கினாரா என்பதே கதை.

 படம் முழுக்க  காமெடிதான். எனவே அதிகம் லாஜிக் பார்த்தால் ஜனப் பிரியனின் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போய்விடும். எனவே, ஜாலியாக ரசியுங்கள்.

லிசா என்ற நாயைப் பார்த்துக்கொள்ளும் வேலை பிரின்சுக்கு கிடைக்கிறது. அதை சரியாக செய்தால், அந்த நாயின் உரிமையாளர் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நாய் பராமரிப்பு வேலையில் ஒரே கண்டிஷன், லிசா கர்ப்பம் தரிக்க கூடாது. அப்படி தரித்தால் அவள் இறந்துவிடுவாள். இது பிரின்சுக்கு தெரியாது. எனவே, சற்று அசிரத்தையாக இருக்க லிசா , ஒரே ஒரு குட்டியைப் போட்டுவிட்டு இறந்துபோகிறாள். அந்த குட்டிக்கு தனது பால்ய கால தோழியின் பெயரை வைத்து வளர்க்கிறார்.

பிரின்சின் நண்பர் முத்து விலங்கு நல மருத்துவர். அவர் யூட்யூப் சானலில் தனது மருத்துவமனைக்கான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். வீடியோ எடுக்கும் இளைஞர் அஜூ வர்க்கீஸ், படம் ஒன்றை எடுக்க நினைக்கிறார். அதில் பிரின்சும் அவரது நாய் டயானாவும் நடிக்கவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. அதற்கு தலைசாய்க்க, பல்வேறு பொருளாதார பிரச்னைகளுடன் படம் தயாரிக்கப்படுகிறது. வெளியாகி வெற்றியடைகிறது.  பிரச்னை அதுவல்ல.

அடுத்து ஒப்பந்தமாகும் படத்தில் முன்னாள் காதலி டயானாவுடன் பிரின்ஸ் வளர்க்கும் நாயும் சேர்ந்து நடிக்கும்படி சூழ்நிலை உருவாகிறது. பிரின்ஸ் வளர்க்கும் நாயின் பெயரும் டயானா, லேடி சூப்பர்ஸ்டாரின் பெயரும் டயானா என்பதால் நாயகிக்கு ஈகோ பிரச்னையாகிறது. இந்த சூழலைப் பயன்படுத்தி பிரின்ஸ், தனது பால்யகால சகியை பழிவாங்குகிறார். இதற்கு பதிலடியாக டயானா, பிரின்சிடம் உள்ள நாயை அதன் அசல் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு வழக்கு தொடரத் தூண்டுகிறாள். இதற்குப் பிறகு என்னவானது என்பதுதான் படத்தின் இறுதிப்பகுதி.

படத்தில் பிரின்சாக திலீப் சிறப்பாக நடித்துள்ளார். நாயிடம் கடி வாங்குவது, நாயை பிடிக்கும் கூண்டில் மாட்டிக்கொள்வது, நாய்க்குட்டியை பாசமாக வளர்ப்பது, அதனுடன் நேரத்தை செலவழிப்பது, அதன் வழியாக கார்த்திகா என்ற பார்வையற்ற பெண்ணைச் சந்திப்பது என வரும் காட்சிகள் எல்லாம் நகைச்சுவை, நெகிழ்ச்சியை என கலவையான உணர்வை உருவாக்குகிறார்.

ஹனிரோசுக்கு எதிர்மறையான பாத்திரம். அதில் அவர் முடிந்தவரை நன்றாக நடித்திருக்கிறார். படக்காட்சியில் பிச்சை எடுப்பவரான தனது தந்தையை எதிர்கொண்டு கண்ணீர் நீர் திரையிட மனம் குன்றிப்போய் சுற்றும் முற்றும் பார்க்கும் காட்சி அவரின் நடிப்புக்கு உதாரணம்.

கார்த்திகா பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். படம் முழுக்க பார்வையற்றவராக வருபவர் இறுதியில்தான் கண் பார்வை பெறுகிறார். படத்தில், பிற பாத்திரங்களை விட நாய்களுடன் திலீப் பேசும் வசனங்கள்தான் அதிகம். தனது கடந்தகால கதையைக் கூட நாய்களுக்குத் தான் கூறுகிறார்.

பிரின்ஸ், பால்ய கால தோழியான டயானாவை மணக்க நினைக்கிறான். ஆனால் அவளோ, சினிமாவில் சாதிக்க பிரின்ஸ் தடையாக இருப்பார் என அவரைத் தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுவாள். டயானாவுக்காக பிரின்சை விலக்கிவிடச் சொல்லும் தயாரிப்பாளர், தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்வார்.  பிரின்ஸ், பின்னாளில் இதையெல்லாம் சரி செய்து பிரச்னைகளை தீர்க்க, அப்போது டயானா யாருமின்றி தனியாக நிற்பாள்.

ஒருவாய் சோறிட்ட நன்றிக்காக நாய் காட்டும் நன்றியுணர்வு மனிதர்களுக்கு இல்லாதபோது உறவுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. பிரின்ஸைப் பொறுத்தவரை தன் நண்பர் முத்து, கார்த்திகா, இயக்குநர் கனவுடன் உள்ள அஜூ வர்க்கீஸ், அதிகம் பேசாத அப்பா என அனைவருக்குமே உதவுகிறார். அதன் வழியாகவே அவருக்கு உறவுகள் கிடைக்கின்றன. கிடைத்த உறவுகள் வலுவாகின்றன. பிரின்சின் நட்பை நம்பியே  கார்த்திகா தனது வீட்டை விற்று படத்திற்கு பணம் கொடுக்கிறாள். அதற்கு பதிலாக பிரின்ஸ் அவளுக்கு கண் பரிசோதனை செய்து அவளுக்கு சிகிச்சை செய்து கண் பார்வையை வரச் செய்கிறார்.

விலங்குகள் மீதான நேசம் பிரின்ஸிற்கு அவர் நினைத்த பல்வேறு விஷயங்களைப் பெற்றுத் தருகிறது. காதலி, நண்பர்கள் என தனி உலகமே உருவாகிறது.

கோமாளிமேடை டீம் 


Initial release: 12 April 2014
Director: Raffi
Music director: Gopi Sundar
Distributed by: Vaishaka Cynyma
Box office: ₹25 cr

கருத்துகள்