அப்பாவின் பேராசையை ஒழித்து நல்லவராக்கும் தோமா! - சவுண்ட் தோமா - திலீப், நமீதா பிரமோத்

 


சவுண்ட் தோமா - திலீப்புடன்(தோமா) சாய்குமார்(பௌலோ)




சவுண்ட் தோமா  - ஶ்ரீலஷ்மியுடன் தோமா







சவுண்ட் தோமா

திலீப், நமீதா பிரமோத், முகேஷ், சுரேஷ்  வெஞ்சரமூடு

 

வட்டிக்கு பணம் கொடுக்கும், ஊரில் நிறைய தொழில்களை நடத்தும் தொழிலதிபருக்கு மூன்றாவதாக மகன் பிறக்கிறான். பிரசவத்தில் அம்மா, காலமாகிறார். மகனுக்கு தொண்டையில் பிரச்னை உள்ளது. அதற்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், மனைவி இறந்துவிட்டாள். அந்த இழப்போடு ஏராளமான பணத்தை இப்போது  பிறந்த குழந்தைக்கு செலவிடவேண்டுமா என தந்தை நினைக்கிறார். இதனால் அந்த குழந்தைக்கு உதடு பிளவுபட்டு, வளரும்போது குரல் சரியாக வருவதில்லை. குட்டி என்றால் குண்ணி என சத்தம் வருகிறது. குட்டன் பிள்ளை என அவர் சொன்னால் குண்டன் பிள்ளை என்றுதான் சத்தம் வெளியே கேட்கிறது. இதனால் அவருக்கு ஊரில் சவுண்ட் தோமா என பெயரே உருவாகிறது. வட்டிக்கடைக்காரருக்கு மூன்று மகன்கள் (மத்தாய், ஜாய் குட்டி, தோமா) உள்ளனர். அவர்களால் தனக்கு என்ன பிரயோஜனம் என்று பார்த்துத்தான் செலவு செய்கிறார். உண்மையான பாசத்தை அவர் உணர்ந்தாரா, தோமா  தனது வாழ்க்கையை எப்படி நடத்தினான், அவனது மூத்தவர்களின் வாழ்க்கை என்னவானது என்பதே கதை.

திலீப்பின் அனைத்து படங்களிலும் உள்ள பொதுவான அம்சம், படம் தொடங்கி இருபது நிமிடங்கள் கழித்துத்தான் வருவார். பிறகு நமது மனதை விட்டு போகவே மாட்டார். அந்தளவு சிறப்பாக நடிக்கும் நடிகர். இந்தப்படத்தில் உதடு பிளவுபட்டவராக அதனால் சந்திக்கும் பிரச்னைகளையும் நகைச்சுவையாக, வலியுடன் காட்சி, வசனம் வழி கூறி நடித்திருக்கிறார்.  அப்பாவே பிள்ளையை எதற்கும் உதவாதவன் என்று கூறினாலும் அதையும் காதில் கேட்டு சிரித்துக்கொண்டே உரையாடுவது, படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. இதெல்லாம் கடந்து, கிளைமேக்ஸ் காட்சியும் அப்பாவின் மீது அவர் கொண்டுள்ள பாசத்தையும் வெளிப்படுத்தும் காட்சி பிரமாதமானது. உண்மையில் கண்கலங்க வைப்பது. உண்மையில் படத்தில் நடிப்பதை விட வசனங்களை டப்பிங்கில் சரியாக பேசுவதுதான் கடினமான காரியம். ஒருமாதிரி மூக்கால் பேசவேண்டும்.  

யார் மீது அன்பு வைக்கிறோமோ அவர் அதை புரிந்துகொள்ளாதபோது ஏற்படும் வலியை தோமாவாக அவர் வெளிப்படுத்துவது பிரமாதம். இரு பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற்றிய நேரத்தில், தோமாவை அறுவை சிகிச்சை செய்து குரலை மாற்றிவிட தந்தை பௌலோ நினைக்கிறார். அப்படி நினைத்து மருத்துவமனை சென்று, மருத்துவரிடம் பேசும்போது அவர் சொல்வதைக் கேட்டு தோமா சட்டென சோகமாகி, நொடியில் தன்னை மாற்றிக்கொண்டு தந்தையிடம் பேசும் காட்சி சிறப்பாக உள்ளது.  நகைச்சுவையாக தொடங்கும் படம் இறுதியில் பார்வையாளர்களை நெகிழ்ச்சியாக்கி, மீண்டும் சிரிப்போடு முடிகிறது.

வட்டிக்கடைக்காரர், பெரும் செல்வந்தர். ஆனால் யாருக்கும் ஒரு ரூபாய் கூட தானமாக, கடனாக கூட தரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் ஆள். உண்மையில் படத்தின் நாயகனே வட்டிக்கடைக்காரர் பௌலோதான். இவரது, மனைவியின் அண்ணன் பிறருக்கு உதவும்படியான செயல்களை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு மக்களிடையே புகழ் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், தனக்கு அப்படி ஏதும் இல்லை என பொருமுகிறார். ‘’மனைவியின் பெயரில் தர்மங்களை செய்கிறான். அப்படியென்றால் அவளின் கணவன் நான்தானே, ஆனால் எனது பெயர் எதிலும் இல்லை ‘’ இவரின் கஞ்சத்தனமும், பிறருக்கு காக்காசு ஈயாத காரணத்தால் இரண்டாவது மகனுக்கு பெண்பார்க்க முயல்கையில் யாருமே பெண் தரமாட்டேன் என்கிறார்கள்.

இதற்காக, தோமா சமூக விவாகம் என ஒரு ஐடியாவை  அப்பாவுக்குச் சொல்லுகிறான். அதாவது, அந்த ஊரில் உள்ள ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் செய்விப்பது. மொத்தம் ஐந்து பெண்கள். இதன் வழியாக பௌலோவுக்கு சமூகத்தில் நல்லபெயர் கிடைக்கும் என திட்டமிடுகிறார்கள், ஆனால் நிகழ்ச்சியில் ஒரு மாப்பிள்ளை கடிதம் எழுதிவிட்டு ஓடிவிட, அங்கு கூடிய மக்கள் கூட்டம் பௌலோவின் இரண்டாவது மகனை கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தி மிரட்டி ஏழை பெண்ணுக்கு மணம் செய்து வைக்கிறது.

இதனால் மனம் நொந்துபோகும் பௌலோ, அந்த மேடையில் கோபத்தைக் காட்டுகிறார். அவரது வேலையாளும் சமூக விவாகத்தின் உண்மையான நோக்கத்தை வெளிப்படையாக சொல்லிவிடுகிறான். இதனால் ஒட்டுமொத்த ஊர் மக்களும் பௌலோவை திட்டுகிறார்கள். மகன் ஆதரவற்ற பெண்ணை மணந்துகொண்டான் என பௌலோவுக்கு வருத்தம், வன்மம் ஏற்பட இரண்டாவது மகனையும் எட்டி உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

இப்போது தோமா மட்டுமே வீட்டில் அப்பா பௌலோவோடு இருக்கிறான். இந்த நேரத்தில் பௌலோ கொடுத்த கடனைக் கொடுக்காத காரணத்தால் காவல்துறையால் கைது செய்யப்ப்பட்ட வணிகர் ஒருவரின் மகன் இன்ஸ்பெக்டராக, பிலபரம்பில் குடும்பம் உள்ள குட்டநாடுக்கு வருகிறார். ஊராருடன் பௌலோவுக்கு பகை, கடந்த காலத்தில் உருவான எதிரியின் மகன் என சிக்கல்கள் எழ, பௌலோவும் தோமாவும் அதை எப்படி சமாளித்தார்கள், பௌலோ தனது பிடிவாதத்தை தளர்த்தி மகன்களுக்கு உதவினாரா, தனது பணத்தை சமூக சேவைகளுக்கு கொடுத்து உதவினாரா என்பதே இறுதிக்காட்சி.

ஊராருக்கு பௌலோ மீது, பிலபரம்பில் குடும்பத்தின் மீது அசூயை இருந்தாலும், தோமாவை பெரிதாக குறை ஏதும் சொல்வதில்லை. பௌலோ, அவனை குழந்தையாக இருக்கும்போதே குணப்படுத்த வாய்ப்பிருந்தும் காசு செலவாகும் என்பதால் கைவிட்டுவிடுகிறார் என்பதை அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஊரில் அவன் செய்யும் விஷயங்களை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. அவனுக்கு சங்கரன் பாகவதரின் பெண் ஶ்ரீலஷ்மியை பிடித்திருக்கிறது. இதனால், அவளை பார்க்கும் இடங்களில் எல்லாம் சென்று தனது காந்தர்வ குரலால் பேசி வசீகரிக்க முயல்கிறான். ஆனால் அவள் சங்கீதம் பாடத் தெரிந்தவரைத்தான் அப்பா எனக்கு கட்டிவைப்பார் என சொல்லிவிடுகிறாள். பெண்களை விடாப்பிடியாக வற்புறுத்தும் காட்சியாக தோன்றினாலும் இக்காட்சிகளை நகைச்சுவையாக எடுத்துகொள்ளும்படி வைத்திருக்கிறார்கள்.

அப்பா, மகனுக்குள்ள பாசம் என்பதை முடிந்தளவு சிறப்பாக வெளிக்காட்ட முயல்கிறார்கள். கிறிஸ்தவராக இருந்து தான் காதலித்த பெண்ணுக்காக முஸ்லீம் மதத்திற்கு மத்தாய் மாறுகிறார்.பிலபரம்பில் பௌலோவன் மூத்த மகனான இவர், தோமாவின் குறைகளைக் கடந்து இதயத்தைப் புரிந்துகொண்டவராக இருக்கிறார். தோமாவுக்காக பாகவதரிடம் பேசும் காட்சி இதற்கு உதாரணம். அப்பா, மகன் பாசம், சமூகத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் என நிறைய விஷயங்களைப் பேசியுள்ள படம்.  

கோமாளிமேடை டீம்

--------------------------------------------

Release date: 5 April 2013 (Kerala)
Director: Vysakh
Producer: Anoop
Music director: Gopi Sundar, Gopi Sunder
Distributed by: Kalasangham Films

கருத்துகள்