காதலைப் புரிந்துகொள்வது எப்படி? - ஜே.கிருஷ்ணமூர்த்தி

 










தென் தேர் இஸ் லவ் இலவச நூலில் இருந்து…

ஜே கிருஷ்ணமூர்த்தி

தமிழாக்கம்



ஒரு உறவில் பாதுகாப்பைத் தேவையாக நினைக்குப்போது அது பயத்தையும் சோகத்தையும் உருவாக்குகிறது. பாதுகாப்பைத் தேடும்போது அது, பாதுகாப்பின்மையை அழைத்து வருகிறது. உங்கள் உறவுகள் எதிலாவது பாதுகாப்பைத் தேடியுள்ளீர்களா? நம்மில் பெரும்பாலானோர்  காதலிக்க, காதலிக்கப்பட என்ற வகையில் ஒருவகை பாதுகாப்பை விரும்புகிறவர்கள். உண்மையில் ஒருவருக்கொருவர் காதலிக்கிற சூழ்நிலையில் அந்த காதல் இருவருக்குமான பாதுகாப்பைக் கொண்டிருக்கிறதா? இந்த பாதுகாப்பு என்பது, குறிப்பிட்ட வழிமுறையைக் கொண்டுள்ளதா?

நாம் காதலிக்கப்படுவதில்லை. காரணம், நமக்கு எப்படி காதலிப்பது என்று தெரியாது. காதல் என்பது என்ன? இதைப்போல உலகம் முழுவதும் களங்கப்படுத்தப்பட்ட தவறாக பொருள் கொள்ளப்பட்ட வார்த்தை வேறு ஏதும் இருக்க முடியாது. நீடித்த காதல், அழியாத காதல் என்பதை மாத இதழ், நாளிதழ், மிஷனரிகள் வரையில் பேசியுள்ளனர். ‘’நான் எனது நாட்டை, அரசரை, நூலை, மலையை, மனைவியை, மகிழ்ச்சியை, கடவுளைக் காதலிக்கிறேன்.’’ இப்படி பலமுறை பலரும் சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் காதல் என்பது ஒரு சிந்தனையா? அப்படியென்றால் அதை நீங்கள் பராமரித்து, ஊட்டச்சத்து அளித்து, வளர்க்க வேண்டும். முடிந்தால், அதை உங்கள் விருப்பம் போல வளைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் கடவுளைக் காதலிக்கிறேன் என்று கூறுகிறீர்கள்? அதன் அர்த்தம் என்ன? நீங்கள் உங்கள் கற்பனைப்படி, உடை அணிவித்து புனிதப்படுத்தி கடவுளைக் காண்கிறீர்கள். எனவே இந்த முறையில் யோசித்து, கடவுளை நான் காதலிக்கிறேன் என்கிறீர்கள். இது உண்மையில் முழுமையான முட்டாள்தனம். ‘கடவுளைக் காதலிக்கிறேன்’ என்று சொல்வது உங்களை நீங்களே வணங்கிக்கொள்வது போலத்தான். ஆனால் அது உண்மையில் காதல் கிடையாது.

உண்மையில் நம்மால் அதாவது மனிதர்கள் உருவாக்கிய காதலை சரியாக புரிந்துகொண்டு தீர்க்க முடியாது. நாம் பல்வேறு கருத்தாக அதைப் புரிந்துகொள்கிறோம். உண்மையில் காதல் என்பதே மனிதர்களின் பல்வேறு பிரச்னைகள், சவால்கள், சிக்கல்களுக்கு தீர்வாக அமைகிறது. உண்மையில் காதல் என்றால் என்ன? அதை எப்படி வரையறுப்பது, தேவாலயம் காதலை ஒருவிதமாக கூறுகிறது. சமூகம், வேறுவிதமாக கூறுகிறது. இதில் நிறைய வேறுபாடுகள், கோணங்கள் உள்ளன. ஒருவரின் அருகில் இருப்பது, அவரோடு உறங்குவது, நட்பை விரும்புவது, உணர்வுகளை பரிமாறிக்கொள்வது என இதைத்தான் நாம் காதல் என நினைக்கிறோம் அல்லவா?

இது இயல்பானதாக, குறிப்பிட்ட முறையில், தனிப்பட்ட இயல்பு கொண்டதாக, வரையறை கொண்டதாக இருக்கிறது. இதைச்சொல்லும் மதங்கள் காதல் என்பது இதைவிட பெரியதாக உள்ளது என கூறுகின்றன. எனவேதான், மனிதர்களின் காதல் என்பது பொறாமை, போட்டி, பேராசை, கட்டுப்பாடு கொண்டதாக பிறரின் சிந்தனைக்குள் செல்வதாக உள்ளது. மதங்கள் கூறும் இந்த வகையில் ‘காதல் இன்னும் தெய்வீகமாக, அழகாக, தொடப்படாத, களங்கப்படாததாக உள்ளது’ என்கிறார்கள்.

உலகம் முழுவதும் புனிதமான மனிதர்கள், சாமியார்கள் பெண்களை தவறானவர்களாகவே பார்க்கிறார்கள். ‘உடலுறவில் ஆசை கொண்டால் நீங்கள் கடவுளுக்கு அருகில் கூட வரமுடியாது’ என்கிறார்கள். அவர்கள் உடலுறவால் விழுங்கப்படாமல் இருக்க அதை மற்றொரு புறமாக தள்ளிவிட்டு விடுகிறார்கள். பாலினம் சார்ந்த விஷயங்களை முழுக்க தவிர்த்துவிட்டு கடவுளை அடைவது என்பது, பூமியின் அழகை கண்களும் நாக்கும் இல்லாமல் ரசிப்பது போலாகும். சாமியார்கள், தங்கள் இதயங்களிலும் மனதிலும் பெரும் வறட்சியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களாக இருந்தாலும் மனதில் சற்றும் ஈரமே இல்லாதவர்கள். அவர்கள் அழகை பெண்களுடன் இணைத்துப் பார்த்து அதை தவறாக கருதுகிறார்கள். மனிதர்கள், தெய்வீகம் என இரண்டுக்கும் இடையில்தான் காதல் உள்ளதா, காதல் என்பது ஒன்றா, அல்லது பல வடிவங்களில் உள்ளனவா? காதல் புனிதம், புனிதமற்றது என இரு வகையாக பிரிக்கப்பட்டுவிட்டதா?

நான்  உன்னை காதலிக்கிறேன் (ஐ ல்வ் யூ) என்று ஒருவரைப் பார்த்து சொல்லும்போது, அதில் பிறரின் மீதான காதல் உள்ளடங்குவதில்லையா? காதல் என்பது தனிப்பட்ட ஒன்றா அல்லது பொதுவான ஒன்றா, அறமா, அறமில்லாத ஒன்றா, குடும்பம் சார்ந்ததா, குடும்பம் சாராத ஒன்றா, காதல் என்பது உணர்ச்சியா, மனிதர்களுக்கு மட்டுமேயானதா, காதல் என்பது மகிழ்ச்சியா அல்லது ஆசையா, இந்த கேள்விகளே காதல் என்பது இவைகள் அல்ல என்று காட்டுகின்றன.

காதல் பற்றி நமக்கு நிறைய சிந்தனைகள் உள்ளன. நாம் வாழும் கலாசாரத்தில் அது இப்படி இருக்குமா, இப்படி இருக்க கூடாதா, குறிப்பிட்ட வடிவம் உள்ளதா, கலாசாரத்தில் அதை குறிப்பிட்ட மாதிரி வளர்க்க முடியுமா என முயன்று கொண்டே இருக்கிறோம்.

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்