ஆறுதலின் பேராறு - ரூஹ் - நாவல் - ல.ச.கு

 


லஷ்மி சரவணக்குமார் ல.ச.கு - ரூஹ் நாவல்

ரூஹ்

லஷ்மி சரவணக்குமார்

முஸ்லீம்களின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் ஆன்மிக தரிசனம், அதை நோக்கிய பயணம் என பல்வேறு விஷயங்களை மனமுருகும் மொழியில் பேசுகிற நாவல் ரூஹ்.

கொமோரா என்ற நாவல் முழுக்க உள்ள கோபம், வன்மம், வன்முறை குதப்புணர்ச்சி என ஒரு வித வெறுப்பின் சூடு குறையாமல் இருக்கும். அதன் ஒருபகுதியாக இருக்கவேண்டிய நூல் இது. ஆனால், ஆசிரியரின் முடிவால் தனி நாவலாக மாறியிருக்கிறது.  ரூஹ் நாவலில் ஒப்பீட்டளவில் வன்முறை சற்று குறைவு. ஆனால்  இதிலும் பால்ய கால கேலி கிண்டல், அவமானத்திற்கு பழகுதல், காயப்படுதல், பலவந்த ஓரினப் புணர்ச்சி, தடவுவதல், கைவேலை ஆகியவை உண்டு. ஆனால் இதெல்லாம் நாவலின் சிறுபகுதிதான். இதையெல்லாம் கடந்த தன்மை,விருப்புவெறுப்பற்ற இயல்பை நோக்கி நாவல்  செல்கிறது.

நீதி, அநீதி, நியாயம், அநியாயம், நல்லது , கெட்டது என்ற நிலையைக் கடந்து உடல், மனம் என அனைத்தையும் ஒருவன் ஒடுக்கி அதன் வழியாக இறைவனைச் சென்றடைவது, அந்த நிலையிலிருந்து பிறரின் வாழ்வுக்காக இறைவனிடம் யாசிப்பது, பிரார்த்திப்பது என மாறும் வாழ்க்கை பற்றிய விவரணைகள் மனதை பித்தாக்குகிற மொழியில் ஆசிரியர் எழுதியுள்ளார்.

ராபியா, தனது பேத்தி ஜன்னத்தோடு சந்தனக்கூடு திருவிழாவுக்கு வருவதில்தான் கதை தொடங்குகிறது. அங்கு அவள், ஜோதி என்பவரை பக்கீர்களின் கூட்டத்தில் பார்க்கிறாள். பல்லாண்டுகளாக பார்க்க நினைத்தவனின் உருவம் அவளை விட வயதானதாக தெரிகிறது. அவனைப் பற்றி நினைக்க.. கதை பின்னோக்கி நகர்கிறது. அதில்தான் ஜோதி யார், ராபியா அவனுக்கு என்ன உறவு என்பதை விலாவாரியாக நாம் ஒரு சாட்சியாகவே நின்று பார்க்கிறோம்.

நாவலில் ராபியா, ஜோதிலிங்கம் ஆகியோரின் கதையோடு அஹமத் என்ற மாலுமி ஒருவரின் கதையும் ஒன்றாக இணைகிறது. மாலுமி அஹமத் வணிக கப்பலை இயக்கும் பாக்தாத் நாட்டைச் சேர்ந்தவர். இவர்  தனது வேலையில் வெற்றிகரமாக சாதித்து வாழ்க்கை கடமைகளை ஏறத்தாழ முடித்துவிட்டவர். மூன்றுமுறை ஹஜ் பயணம் செய்து தனது வாழ்க்கையையே சற்று தள்ளி நின்று பார்க்கத் தொடங்கிவிட்டவர். ஆனால் இவரது வாழ்க்கையில் வரும் கடைசிப்பயணம், மதம் சார்ந்த ஆபூர்வ பொருளை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த பயணத்தில் கடல்கொள்ளையர்களின் தாக்குதலால் பொருள் கொள்ளையடிக்கப்படுகிறது. அதன் விளைவாக, அவரது வாழ்க்கை அப்படி மாறிவிடுகிறது.

இப்படி பல்வேறு பாத்திரங்களின் வாழ்க்கை விவரிக்கப்பட்டு இவை ஒன்றாக சேருமிடம் கடலாக உள்ளது. அதுதான் நாவலில் ஆச்சரியமாக உள்ளது.  தனித்தனி பாத்திரங்கள் விவரிக்கப்பட்டு பின்னாளில் அவர்கள் இணையும் புள்ளி ஒன்றாக உள்ளது. கடந்தகாலம், நிகழ்காலம் என மாறி மாறி நாவல் பயணிக்கிறது.

அன்பு, வெறுப்பு, காமம் என பல்வேறு விஷயங்கள் நாவலில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. பச்சை நிற வெளிச்சம் பற்றிய பேசப்படும்போது உருவாகும் மாயத்தன்மை வழியாக, மனிதர்களின் பேராசை, கீழ்மை வெளிப்படுகிறது. ஜோதியிடம் உள்ள அபூர்வ பொருள் ஏற்படுத்தும் பேராசையால் அநியாயமாக ஒரு உயிர் பறிபோகிறது. இதனால் ஜோதிக்கும், ராபியாவுக்குமான அன்பில் விரிசல் ஏற்படுகிறது. அதன்பிறகு ஜோதி, உடலை கடுமையாக வருத்திக் கொள்கிறான். பயணிக்கிறான். எந்த இலக்குமில்லாத அவனது வாழ்க்கை முழுக்க சமூகத்திற்கெனவே மாறுகிறது. இதை விவரிக்கும் ல.ச.குவின் கவிதைமொழியில் வாசகர்கள் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியாது. கனிவான மொழி என்று கூட கூறலாம். கொமோரா நெருப்பு, என்றால் ரூஹ் நீர்.

ராபியாவுக்கும், கண்மணி(ஜோதி) ஆகியோரின் உறவு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாக பரிமாணம் அடைவது வேறுபட்ட உணர்வை அளிக்கிறது. வெறுக்க முடியாத, விலக்க முடியாத உறவாக நாவல் எங்கும் தீராத நெருப்பாக இருப்பது இந்த இருவரின் உறவுதான். ஒருவகையில் குறிப்பிட்ட உறுப்பு, மனம் என்றில்லாமல் முழு உடலே காமத்தால் பற்றியெரியும் இயல்புதான். ஆன்மசக்தியாக மாறுகிறதோ என்று தோன்றுகிறது. ஜோதி, இறுதியில் ஆபூர்வ பொருளை கையில் எடுத்தபடி நடந்து ஆந்திரத்தின் கடப்பாவிற்கு சென்று கால்களில் ரத்தம் பீறிட மயங்கி விழுவது, ஒருவகையில் உடலை ஒடுக்கி உணர்வுகளை கட்டுப்படுத்துவதுதான்.

ரசூல், உமர், அன்வர், ராபியா, ஜோதி, ராஜன், வட்டிக்காரர் நாச்சிமுத்து, தேவி, இகோ பிகோ, விட்டல், ரத்னா என அனைத்து பாத்திரங்களுமே நமது மனதிற்குள் இருப்பவர்கள்தான். நம்மைச் சுற்றி அதன் பிரதிபலிப்பாக இருக்கும் மனிதர்களைக் கண்டிருக்கலாம். இல்லையென்றாலும் அடையாளம் காண்பீர்கள்.  வாழ்க்கை என்பது அதானே?

இருளின் மீது ஆசை கொண்டதாக வெளிவரும் கண்ணை குருடாக்கும் பச்சை நிற வெளிச்சம் என்பது பிறரை நேசிக்கும் விருப்பு வெறுப்பற்ற ஆன்மாவின் ஒளியாக புரிந்துகொள்ளலாம். தனது நோக்கத்தில் தீவிரமாக பிறரை நேசிக்கும் கவலைப்படும் ஆன்மாவை விட ஈர்ப்பானது வசீகரமானது என்ன? கொமோராவைப் படித்துவிட்டீர்களா, உங்களை ஆற்றுப்படுத்த ஆறுதலின் பேராறாக ரூஹ் நாவல் இருக்கும். மறக்காமல் வாசியுங்கள்.  

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

நான்காவது காட்சி