மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனிதர்களின் ஏற்றமும், வீழ்ச்சியும்! மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா
எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா |
மருந்து - நாவல் |
மருந்து
புனத்தில்
குஞ்ஞப்துல்லா
தமிழில்
சு.ராமன்
வாரணாசியில்
உள்ள மருத்துவமனைக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை. அங்கு பணியாற்றும் பல்வேறு மனிதர்களின்
கதை. கதையின் தொடக்கத்தில் தேவதாஸ் என்ற இளைஞர், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக
வருகிறார். இப்படி தொடங்கும் கதை பிறகு, லெஷ்மி, டி குமார், ஹஸன், க்வாஜா, தனுஜா, மேட்ரன்
ஹெலன், மேரி, குஞ்சம்மா, பியாரோலால் என நிறைய பாத்திரங்களைக் கொண்டதாக மாறுகிறது. இதில்,
குறிப்பிட்ட பாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது என எதையும் சொல்ல முடியாது. ஆனாலும்
மேரிக்கான இடமும், அவளுக்கான விவரணைகளும் நன்றாக உள்ளன.
பிறருக்கான
வலி, வேதனைகளை அறிந்து மருந்து கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு தைரியம் தருபவர்கள் மருத்துவர்கள்,
செவிலியர்கள். அதேசமயம் அவர்களது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள்,
சீர்கேடுகள், மன உளைச்சல்கள் எழுகின்றன. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை
புனத்தில் தனது வசீகரமான மொழியில் கூறியுள்ளார்.
தேவதாஸ்
–லெஷ்மி கதை, எப்போதும் போலான காதல் கதையாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தது.
ஆனால் ஆசிரியர் புன்னத்தில் அதை வலி நிரம்பிய ஒன்றாக மாற்றிவிட்டார். காதலின் அன்பு,
நம்பிக்கை என்பதைத் தாண்டி அதை வீழ்த்தும் அம்சங்களாக சாதி, அந்தஸ்து, பெற்றோன் தன்முனைப்பு
மாறுகிறது. மணப்பெண்ணைப் பார்க்க வரும்போதே, பூட்டு தொழிற்சாலை அதிபர் லெஷ்மியை தனியாக
சந்திக்கிறார். தனியாகப் பேசும் அறையின் தாழ்ப்பாள் பெரிய சத்தத்துடன் விழுகிறது என
அந்த அத்தியாயம் முடிகிறது. அதுவே நமக்கு பிடி சாமி கதையில் வரும் மர்ம முடிச்சு போல
பீதி உண்டாக்குகிறது. இதற்கு பிறகு லெஷ்மி தேவாவுக்கு எழுதும் கடிதம், மனதில் ஆழமான வேதனை உண்டாக்குகிற பதிவு.
மனதை தனியாக திடமாக வைத்துக்கொண்டு உடலை தானே விட்டுக்கொடுத்துவிட்ட
சூழலை அவள் சொல்லுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மருந்து
கொடுக்கப்பட்ட உடனே காப்பாற்றப்படுவது நோயாளியின் உயிர், பிறகு, அந்த மருந்து பின்விளைவாக
சில உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தும் அல்லவா? அதுபோலவே நாவலும் முன்பகுதியில் பல்வேறு
பாத்திரங்களை உருவாக்கி, பின்னர் செயல்களின் விளைவுக்கு ஏற்பத்தான் என்றாலும் நினைத்துப்
பார்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். கதையின் போக்கில் மருத்துவத்தின் பல்வேறு
தத்துவங்களைக்கூறுகிறார்கள். நோயாளி என்பவர் யார், அவரை எப்படி பார்க்கவேண்டும். புரிந்துகொள்ளவேண்டும்,
நோயை அணுகுவது, அடையாளம் காண்பது எப்படி, உண்மையான மருத்துவனின் மனதிடம் , வலிமை என
நிறைய விஷயங்களை பல்வேறு பாத்திரங்கள் வழியாக கூறுகிறார்கள்.
குறிப்பாக
ஆச்சாரி. இவர் செவிலியர் பெண்களை பலாத்காரம் செய்து இன்பம் கொள்ளும் மனிதர், விதிகளை
மீறி நோயாளிகளிடம் பணம் பெற்று சிகிச்சை செய்கிறவர். இறுதியில் தொண்டையில் ஏற்படும்
நோயால், தான் செய்த செயல்களுக்கான தண்டனையை கற்பனை செய்து பயம் கொள்ளும் இடம், சிறப்பாக
எழுதப்பட்டுள்ளது.
மேட்ரன் ஹெலன்சிங், தான் நம்பிக்கை கொண்டிருந்த திவாரி
இறந்தவுடனே ராஜபிளவை வந்தது போல திகைத்துப் போய் தன்னைத்தானே வீழ்த்திக்கொள்கிறாள்.
குஞ்சம்மாவும் உடலை வைத்து நேசிக்கும் மனங்களை வெல்ல நினைக்கிறாள். இறுதியில், அவள்
தனது வாழ்க்கையை அவலமான பல்வேறு சம்பவங்களுக்கு இடையில் அடையாளம் காண்கிறாள். இலக்கியம்
படித்த தேவாவும் காதல் கொண்டதால் மனம் பிறழ்ந்துபோகிறான். இந்த நிலையில் நம்பிக்கை
அளிக்கும் ஒரே பாத்திரம் மேரிதான். அவள் யமுனையில் குழந்தையைக் கையில் எடுத்து முலையால்
பாலூட்ட முயலும் காட்சியோடு நாவல் நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்த வீழ்ச்சியிலும் கூட
ஒரு நம்பிக்கைக் கீற்று. இருள் நிரந்தரம், ஒளி ஒரு சந்தர்ப்பம் என கவிஞர் மெய்யருள்
எழுதிய கவிதை வரிகளைப் போல நாவல் முடிகிறது.
நாவலின்
தொடக்கத்தில் பியாரோலால் மருத்துவமனை எப்படி இங்கு கட்டப்பட்டது என்பதை யோசித்துப்
பார்ப்பார். அப்போது அவருக்கு நினைவில் வரும் கதையைப் போலவேதான் சமகாலத்தில் நடக்கும்
கதையும். ஆணவம், பேராசை, பிறரை வீழ்த்தும் வன்மம், இச்சை ஆகியவையே மருத்துவமனையில்
உள்ள மனிதர்களை வீழ்த்துகிறது. மருத்துவமனை என்பது ஒரு குறியீடுதான். நம் வாழ்க்கையும்
கூட இப்படித்தானே இருக்கிறது. நாவல் முழுக்க நம்பிக்கையின்மை பரவவில்லை. மேரி சற்று
ஆசுவாசம் அளிக்கிறாள். வாழ்க்கை இப்படித்தானே அவநம்பிக்கையூடே தொடர்ந்து நிற்காமல்
நடைபெறுகிறது. மொழிபெயர்ப்பாளர் சு. மோகன் நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். ஒருமுறை நாவலை படிக்கத் தொடங்கினால், கிண்டிலை கீழே வைக்கவே முடியாது. ஒரே மூச்சில் படித்துவிடுவீர்கள்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக