பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

 












விஷ்வா (காதல் கவிதை)

பிரசாந்த்

தமிழ்

இயக்குநர் – அகத்தியன்


படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.  காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும்.

விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.

இந்த படத்தில் விஷ்வா பாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடித்திருப்பார். படம் முழுக்கவுமே மிகவும் சீரியசாகவே முகத்தை வைத்துக்கொண்டிருப்பார். படத்தில் அவருக்கான காட்சிகள் அனைத்துமே பேச்சுக்கு பேச்சு எதிர்பேச்சு என சொல்வார்களே, அதுபோலவே இருக்கும். ஆனால் பேசுகிற பேச்சு ஜப்பானிய கட்டானா வாள் போல கூர்மை. சரியாக பேசத் தெரியவில்லை என்றால் வாள் வீச்சு தெரியாதவனின் சண்டை போல, வாள் உடலை இரண்டாக பிளந்துவிடும். டொரன்டினோவின் கில் பில் படத்தில் வருவதைப் போலவேதான். இப்படி படம் நெடுக நிறைய பாத்திரங்கள் விஷ்வாவிடம் காயம்பட்டு தலைதெறிக்க  ஓடுகிறார்கள்.

விஷ்வா எப்போதும் வீட்டை விட்டு வெளியேதான் இருப்பான். தோழன் சார்லிதான். சார்லி,  விஷ்வாவின் அப்பாவுடைய நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர். சைக்கிள் ஓட்டிக்கொண்டு சார்லியுடன் சென்னையை சுற்றி வருவது, கையேந்தி பவனில் இட்லி வாங்கித் தின்றுவிட்டு, வீட்டில் வளர்க்கும் வெளிநாட்டு நாய்க்கு இட்லி வாங்கிப் போடுவது என்பதுதான் விஷ்வாவின் ஒரே வேலை. பொழுது போகவில்லை என்றால் பெட்டிக்கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டதைப் போல ஏதாவது மனிதர்களை ஒரண்டுக்கு இழுத்து வம்பு செய்வதுதான் சுவாரசியம். ஏறத்தாழ யூட்யூப்களில் செய்யப்படும் பிராங் வகை. மனிதர்கள் யாரேனும் விஷ்வா பற்றிய விவரங்கள் கேட்டால், ஆளுக்கேற்ப ஒரு கதையைச் சொல்லிவிட்டு எஸ்கேப்பாகிவிடுவார்.

விஷ்வாவுக்கு, தானே செய்தால் மட்டுமே ஒரு விஷயம் சரியாக  இருக்கும். ஆனால், யாராவது கட்டாயப்படுத்தி செய்ய வைத்தால் ஏண்டா அதை சொன்னோம் என நினைக்கும் அளவு அவரின் ட்ரீட்மென்ட் கொடூரமாக இருக்கும். இப்படித்தான் விஷ்வாவின் அப்பா, ‘’கையேந்தி பவன் எதுக்கு, நம்ம அந்தஸ்துக்கு பெரிய ஹோட்டலில் போய் சாப்பிடு. கார் இருக்கும்போது, சைக்கிளில் போய் அப்பனை அவமானப்படுத்துறயாடா மகனே’’ என கோபமாக பேசுவார். இரவு பேசிய அப்பாவுக்கு மகனின் பதில் காலையில் கிடைக்கும்.

விஷ்வா, டெல்லி சென்று அங்கு உள்ள செவன்ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுகிறேன் என அப்பாவுக்கு போன் செய்து சொல்லுவார். அப்படி பேசி முடிக்கும்போதுதான், நாயகி ஜோதி அவர்களுக்கு அறிமுகமாவார். ’ நாங்க கலைக்குழு‘ என்று ஜோதி சொல்லி முடிக்கும்போதே, ‘என்ன கரகாட்ட குரூப்பா’ என விஷ்வா லொள்ளு பேச ஜோதியால் உடனே பதிலுக்குப் பதில் பேச முடியாமல் போய்விடும். அவமானத்தில் முகம் சிவந்து கோபமாக போய்விடுவாள்.

விஷ்வாவுக்கு தனது பணம், தனது அப்பா யார் என அடையாளம் பார்த்து பேசுபவர்களை சுத்தமாக பிடிக்காது. அவர்களை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கும் ஆள். அப்படி யாராவது வந்து பேசினால் அவர்களை பீதியாக்கும்படி ஏதாவது கதை சொல்லி மிரட்டி அனுப்புவதே அவனது வழக்கம். டெல்லியில் ஜோதி மற்றும் அவளது தோழிக்கான சாப்பாட்டுப் பணத்தை தனது கிரடிட் கார்டில் பைசல் செய்துவிட்டு சாரி கேட்டுவிட்டு விஷ்வா ஊருக்கு வருவான்.

சென்னையில் தற்செயலாக நூலகத்திற்கு வரும் ஜோதி சார்லியைப் பார்த்துவிட்டு, விஷ்வாவைப் பற்றிய விவரங்களைக் கேட்பாள். அவரும் அவளின் மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல் உண்மையான தகவல்களைச் சொல்லிவிடுவார். அதை நூலகத்தில் உள்ள விஷ்வாவிடம் வந்து ஜோதி சொல்லுவாள். அந்த இடத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாமல்  விஷ்வா சொல்லும் கதை அல்டிமேட்டாக இருக்கும். அதை ஜோதி நம்பி ஒரு இளம்பெண்ணிடம் போய் பேச, அவமானப்படுவாள். அடுத்து பூங்காவில் ஜோதியை சந்திக்கும்போது அவளைத்தான் காதலிக்கிறேன் என டக்கென சொல்லிவிடுவான் விஷ்வா. இப்படியே படம் நெடுக, இருவருக்குள்ளும் மோதல்கள் நடக்கும்.

விஷ்வாவின் அப்பா, பல்வேறு தொழில்களை செய்கிற ஆள். பிரச்னை அவர் அல்ல. ஹிஸ்டீரியா பேஷண்ட் போல அவரிடம் பேசிக்கொண்டே இருக்கும் அம்மாதான். கணவர் வீட்டுக்கு வந்தால் தான் சொல்வதை மட்டுமே அவர் கேட்க வேண்டும் என நினைப்பவள், பேசிக்கொண்டே இருக்கிறாள். இதனால் விஷ்வா, தான் வீட்டுக்கு வந்துவிட்டால் ஆடியோ சிஸ்டத்தை சத்தமாக வைத்துவிட்டு படித்துக்கொண்டிருப்பான். இது அவனது அம்மாவை இன்னும்,    தூண்டிவிட மேலும்  கத்துகிறாள்.   

 இந்த அமைதியில்லாத நிலை, விஷ்வாவின் பேச்சுகளில் தெரியும். வெளிப்படுத்த முடியாத எரிமலை போல குமுறும் கோபம். அதுவும் அறிவாற்றலோடு எரிமலைக் குழம்பு வெடித்து கொட்டினால் என்னாகும்? மனிதர்கள் தாங்க முடியுமா? ஜோதி இதனால் பாதிக்கப்பட்டு தற்கொலை கூட செய்ய முயன்று பிழைக்கிறாள். சொப்னா, விஷ்வா, உண்மையில் ஆணே கிடையாது என பீதியாகி ஓடுகிறாள்.

ஒரு இடத்தில் டாக்சி ட்ரைவராக வரும் விஷ்வாவை ஜோதி காயப்படுத்த முனைந்து, ‘’இப்ப உனக்கு வலிக்குதுல்ல’’ என சொல்கிறாள். ஆனால் அந்த முறையும் விஷ்வா அவளை நிதானமாக அவமானப்படுத்திவிட்டு வெளியேறுகிறான். தீண்டவும் முடியாது திருத்தவும் முடியாது என டைரியில் ஜோதி எழுதி வைத்திருப்பாள். அதை அம்மாவைப் படிக்கச் சொல்லுவாள். உண்மையில் நெருங்கவும் முடியாது, விலகவும் முடியாது என்றுதான் எழுதியிருக்க வேண்டும். புத்திசாலித்தனம், வசீகரமான பேச்சு, நம்பகத்தன்மையான நடவடிக்கை என அத்தனையும் விஷ்வாவுக்கு உண்டு. அதேசமயம் அவனே விரும்பாத ஆட்கள் அவனை பயன்படுத்த நினைத்தால் விளைவு விபரீதமாக மாறும்.

ஒருவகையில் அம்மா மூலமாக உருவான பிம்பம், அவனுக்கு, மனதில் பெண்கள் என்றாலே வெறுப்பு என்ற ரீதியில் கருத்துகளாக மாறியிருக்கும். அதனால், அவனை அணுகும் பெண்கள் ஜாலியாக பேசினால் கூட ஆசிட்டை முகத்தில் ஊற்றியது போலத்தான் பதில் வரும். இதனால் யாருமே விஷ்வாவின் பக்கமே நெருங்குவதில்லை. சொப்னாவுக்கு தனது உடலை வைத்து விஷ்வாவை மயக்கிவிடலாம் என ஆசை இருக்கும். ஆனால், அவனைப் பொறுத்தவரை இதயம்தான் முக்கியம் என ரூட் பிடித்து சைக்கிள் ஓட்டுவதால் ஜோதி மட்டுமே அத்தனை வலிகளையும் தாங்குகிறாள். இறுதியாக, விஷ்வாவின் பேச்சைக் கேட்டு நொந்துபோய் இறுதியாக தாங்கமுடியாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். சுபமான முடிவுதான். ஆனால் அப்படி முடியாமல் இருந்தாலும் சரியாகத்தான் இருக்கும். விஷ்வா எப்போதும் போல அவனாகவே இருக்கிறான். அப்படியேதான் ஜோதியைக் காதலிக்கிறான். தன் வாழ்க்கையை அப்படியேதான் வாழ்கிறான்.

விஷ்வா, தனது எழுத்தில் காட்டும் கவித்துவ அழகை அவனை நேரில் சந்திப்பவர்கள் அறிவது கடினம். அந்தளவு கடினமான ஆளாக, சட்டென வெட்டப் பேசும் ஆளாக இருக்கிறான்.  


இயக்குநர் அகத்தியன்


 

எழுத்து

லாய்ட்டர் லூன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்