மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

 











அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம்

-பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள்

மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,  குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு  முன்னரே தன் நிலத்தில் பிடி பருத்தியை  பயிரிடுவதைக் கைவிட்டு, உள்ளூர் பருத்தி வகைகளைப் பயிரிட்டு வருகிறார்.

பேசில்லஸ் துரிஞ்சின்சிஸ் (Bacillus thuringiensis) எனும் பாக்டீரியத்தின் மரபணுக்களை எடுத்து பருத்தியின் குரோமோசோம்களில் செலுத்தி பிடி பருத்தி உருவாக்கப்படுகிறது. பாக்டீரியத்தின் மரபணுக்கள் உருவாக்கும் நச்சுத்தன்மை, பருத்தியை உண்ணவரும் பூச்சிகளைக் கொல்கிறது. 2002ஆம் ஆண்டு பிடி பருத்தி முதல்முறையாக இந்தியாவில் பயிரிடப்ப்பட்டது. 2013ஆம் ஆண்டு, இந்தியாவில் விளையும் 95 சதவீத பருத்தி வகையாக, பிடி பருத்தி மாறிவிட்டது.  

பிடி பருத்தி அதிக விளைச்சல் தருவதாக கூறப்பட்டாலும் விவசாயிகளும், ஆராய்ச்சியாளர்களும் அதை மூடநம்பிக்கையான தகவல் என்று கூறி நம்ப மறுக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் அண்மையில் பிடி பருத்தி, பிடி சோளம் ஆகிய பயிர்களை களப்பரிசோதனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகத்தில் பிடி பருத்திக்கான சோதனை இவ்வகையாக மூன்றாவது முறை நடைபெறுகிறது. பிடி சோளத்திற்கான சோதனை அங்கீகாரம் உடனே வழங்கப்பட்டது வேளாண்மை வல்லுநர்கள் பலருக்கும் ஆச்சரியம் தந்துள்ளது.

 ஹவேரி கிராம்ப்பகுதியில்தான் பிடி பருத்தி முன்னர் பரிசோதிக்கப்பட்டது. ‘’விதைகளுக்கும், உரங்களுக்கும் செலவிட்டது போக நாங்கள் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளுக்காக தனியாக செலவிடவில்லை. ஒரு ஏக்கருக்கு 3.5 அல்லது 4 குவிண்டாலாக இருந்த உற்பத்தி 20 குவிண்டாலாக அதிகரித்தது. இந்த சமயத்தில் எங்கள் கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு தோராயமாக எட்டு குவிண்டால் பருத்தி கிடைத்தது. பயிர்களை நன்றாக வளர்க்க களைக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். பிடி பருத்தி, களைக்கொல்லியின் நச்சைத் தாங்கிக் கொள்கிறது. ஆனால், விவசாய மண்ணின் வளம் குன்றி, அதில் வாழும் உயிர்கள் நச்சால் பாதிக்கப்படுகின்றன. இதனால், மண்ணின் வளத்தைக் கூட்ட அதிகளவு உரங்களை வாங்க வேண்டியுள்ளது. பிடி பருத்தி விதைகள், பூச்சிக்கொல்லி, உரம், தொழிலாளர் செலவு என விவசாயிகள் பெரும் கடன் வலைக்குள் மாட்டிக்கொள்கின்றனர்.’’ என்றார் விவசாயி யமுனேஷ் ஆகாசனஹல்லி.

பிடி சோளம், களைகளுக்கு தெளிக்கும் கிளைபாஸ்பேட் நச்சையும் சமாளித்து வாழும் திறன் பெற்றதாக உள்ளது. ‘’’

போலியான வெற்றி

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் தலைவரும், ஆராய்ச்சியாளருமான கேசவ் ஆர் கிரந்தி, பிடி பருத்தி பற்றிய போலி வெற்றிக்கதைகளை வெளிப்படையாக கூறியவர்களில் ஒருவர். 2006-2013 காலகட்டங்களில் உரத்தின் பயன்பாடு காரணமாக  பிடி பருத்தியின் உற்பத்தி  இருமடங்காக உயர்ந்தது. இதேகாலத்தில்தான் நீர்ப்பாசன வசதிகளும், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் அதிகரித்தது.

‘’கிராமங்களில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகள் கடந்த பதிமூன்று ஆண்டுகளாக அதிக விளைச்சல் கிடைக்காமல் போராடி வருகின்றனர். பிடி பருத்தி விளைவிக்கும் விவசாயிகள், ஹெக்டேர் அளவில் அதிகளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.இதற்கு முன்னர் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளுக்கு இந்தளவு செலவு செய்யவில்லை.’’ என ஆராய்ச்சியாளர் கிரந்தி கூறினார்.

2014ஆம் ஆண்டு, பருத்தி அல்லது புகையிலை உற்பத்தி செய்த விவசாயிகளில் 321 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுபற்றி ஆராய்ச்சி செய்த சமூக பொருளாதார மையம், விளைபொருட்களுக்கான உற்பத்திச் செலவு அதிகளவு உயர்ந்ததால் விவசாயிகள் இறந்துபோனதாக கூறியுள்ளது. பெலாகவி, ஹவேரி பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள், 45 சதவீத அளவுக்கு கூட விளைச்சலைப்  பெறவில்லை.

‘’பிடி பருத்தி விதைகளின் விலை அதிகம். அதைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பூச்சி தாக்குதல்களாலும், குறைந்த விளைச்சலாலும் விவசாயிகள் நினைத்தளவு லாபம் பெறமுடியவில்லை. இப்போது பிடி பருத்தி விதைகளை விற்பவர்கள், அதில் களைக்கொல்லி நச்சை தாங்கும் திறனை உட்புகுத்தி இன்னும் அதிக விலைக்கு அதை விற்பார்கள். பிடி பருத்தியால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது’’ என்றார் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ பால் குட்டியர்ஸ்.

2014ஆம் ஆண்டு மத்திய அரசு, மாஹைகோ என்ற பிடி பருத்தி விதைகளை விற்ற நிறுவனத்தை தடை செய்தது. இந்த நிறுவனம் விற்ற பிடி பருத்தி விதைகளைப் பயன்படுத்திய 54 ஆயிரம் விவசாயிகள் கடுமையான வருமான இழப்பைச் சந்தித்தனர். மாஹைகோ மீதான தடைக்குப் பிறகு, மற்ற தனியார் நிறுவனங்கள் கலப்பினம், மரபணுமாற்ற பருத்தி விதைகளை விற்கத் தொடங்கின.

உள்நாட்டு ரகங்கள்

‘’விவசாயிகள் சகானா, ஜெயாதர் ஆகிய உள்நாட்டு பருத்தி ரகங்களை பயிரிடலாம். இவை, ஏக்கருக்கு 350 – 400 கிலோ விளைச்சல் தருகிறது. பயிர்களை சுழற்சி முறையில உற்பத்தி செய்தால் விவசாயிகள் இழப்பைத் தவிர்க்கலாம். விதைகள் கிலோ ரூ.100 என்ற விலையில் எளிதாக கிடைப்பதால், பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார் விவசாயி யமுனேஷ்.

கர்நாடகாவின் உப்பின் பெடாகிரி கிராமத்தைச் சேர்ந்த மசுட்டி, ‘’நான் இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். இதனால் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதில்லை. ஆனால், உரத்திற்கான செலவுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இந்த முறையில் எனக்கு ஒரு ஏக்கருக்கு 350 கிலோ பருத்தி கிடைக்கிறது. குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் உறுதியாக கிடைக்கும் என்று சொல்லமுடியும்’’ என்றார்.

உள்ளூர் பருத்தி விதைகளை பயன்படுத்துவதில் நல்ல விஷயம் என்னவென்றால் அதை நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். பிடி பருத்தி விதைகளை ஒவ்வொரு முறையும் காசு கொடுத்தே வாங்கவேண்டும். அதிக பரப்பில் பருத்தி விவசாயம் செய்பவர்களின் நிலைமை வேறு. ஆனால் சிறு, குறு அளவில் விவசாயம் செய்பவர்களால் பிடி பருத்தியைத் தவிர்ப்பது கடினம். பருத்தி விலையைப் போல பிற பயிர்களின் விலை அதிகரிப்பதில்லை. எனவே, அதை விவசாயிகள் கஷ்டப்பட்டாலும் பயிரிட நினைக்கிறார்கள்.  

‘’கடந்த பதினைந்து நாட்களாக பிடி பருத்தியைத் தாக்கியுள்ள பூச்சிகளை விரட்ட பூச்சி மருந்து அடித்து வருகிறேன். மூன்று பாட்டில் பூச்சிக்கொல்லிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஆகிறது. இன்னும் மருந்து வாங்கி அடிக்கவேண்டும். இதோடு,  கூலி வேலையாட்களின் சம்பளமும் ரூ.1,200க்கு வந்துவிட்டது.’’ என்றார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பருத்தி விவசாயம் செய்பவரான பகவந்த் குசுபி.

விதை ஏகபோகம்

பிடி பருத்திகளை விற்பதன் வழியாக பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன என ஆராய்ச்சியாளர்களின் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிவான வழக்கில் (WP (C) 12069/2015), நீதிமன்றம் மாஹையோ- மான்சான்டோ நிறுவனங்கள்,  பிடி பருத்தி விவகாரத்தில், ஏகபோகமாக செயல்படுவதை சுட்டிக்காட்டியது. சந்தையில் மாற்று வழிமுறைகள் இருந்தாலும் பிடி பருத்தியின் ஏகபோக செயல்பாட்டால்,  ஒட்டுமொத்த சந்தையே சரிவைச் சந்தித்தது.

சூழல் செயல்பாட்டாளரான அருணா ரோட்ரிக்ஸ், ‘’விவசாயிக்கு சந்தையில் சிறந்த விதைகளை வாங்கிப் பயன்படுத்தும் அழுத்தம உள்ளது. உண்மையில் அதை வாங்கி பயன்படுத்த அவர் விரும்பாதபோதும் கூட. பயிர்விளைச்சல் வீழ்ந்து விவசாயி தான் பெற்ற கடன்களை கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிடி பருத்தி விவகாரத்தில் நாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடைபெற்றுள்ளன.” என மத்திய அரசு கூறியதை சுட்டிக்காட்டுகிறார். பிடி பருத்தியால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் முன்னரே அரசு இப்படி தனது கருத்தை முன்வைத்துள்ளது.  

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் பிசி பாட்டீல், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் ஒய் ஜி பிரசாத் ஆகியோரிடம் தொடர்பு கொண்டும் அவர்கள் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு தலைமைச் செயலாளர் தலைமையில் மரபணு மாற்ற பயிர்களை பரிசோதனை செய்வது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அதில், ஒரு வல்லுநர் மரபணு சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார்.

‘’இரண்டு உறுப்பினர்கள் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். கலப்பின வகைகள், மரபணு மாற்ற பயிர்களை விட சிறப்பான விளைச்சலை தந்திருக்கின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கத்தரிக்காய். காயின் அளவு, பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், சுவை என மூன்று அம்சங்களிலும் கலப்பின வகைகள் சிறப்பாக உள்ளன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள், பெருநிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியது இல்லை என்றும் விளக்கம் கூறப்பட்டது‘’என்றார் கலந்துரையாடலில் பங்கேற்ற உறுப்பினர்களில் ஒருவர். குறிப்பிட்ட நிலத்தில் பிடி பயிர்களை சோதனை செய்தால் மகரந்தச்சேர்க்கையின்போது அதைச் சுற்றியுள்ள நிலங்களிலும்  பாதிப்பு ஏற்படும் என சில வல்லுநர்கள் கூறுகிறார்கள். மரபணு மாற்ற வகை பயிர்களை விளைவிக்கும்போது, உள்ளூர் வகைகள் மெல்ல அழியும் எனவும் விவசாய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

‘’மரபணு மாற்ற உணவுகள் ஆபத்தானவை. அவை உடலுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றிய அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. கர்நாடகாவில் செய்யப்படும் பிடி பயிர்சோதனைகளில் பல்வேறு உயிரியல் பாதுகாப்பு விதிமீறல்கள் உள்ளன. இவை பற்றிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன ’’ என்றார் சூழல் செயல்பாட்டாளரான அருணா ரோட்ரிக்ஸ் . 

மரபணு மாற்ற பயிர்களை பரிசோதனை செய்வது தொடங்கி அதை சந்தைப்படுத்துவது, விளைச்சலில் தோல்வியுறுவது வரையில் பல்வேறு நிலைகளில் அதைக் கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படியான கண்காணிப்பு அமைப்புகள் இல்லை.

‘’பிடி சோளத்திற்கான பரிசோதனைஅனுமதி,  முழுமையான அழிவை ஏற்படுத்தும். இந்த வாசல் வழியாக இன்னும் நிறைய மரபணு மாற்ற பயிர்கள் விளைநிலங்களுக்கு வரவிருக்கின்றன. பிடி பயிர்களின் நச்சை எதிர்க்கும் திறன் கொண்ட பூச்சிகள் இனி உருவாகி வரும். சூழல் செயல்பாட்டாளர்கள் பிடி சோளத்தை தடுக்க முயற்சி செய்யாதது ஏன்? ’’  என்றார் மரபணு மாற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர்.

தகவல்பட தகவல்கள்

பருத்தி வகைகள்

இயற்கையாக மேம்பட்டவை

உள்ளூர் பருத்தி வகைகள். மலிவான உற்பத்திச்செலவு. நோய்த்தாக்குதல் குறைவு. விளைச்சலும் குறைவு.

கலப்பினம்

இரண்டு வகைகளை, ஒன்றாக சேர்ந்து உருவாக்கப்படுவது. அதிக விளைச்சல் தருகிறது.

மரபணுமாற்றுப் பயிர்

பேசில்லஸ் துரிஞ்சின்சிஸ் பாக்டீரியத்தின் மரபணு சேர்த்து உருவாக்கப்படுகிறது.

உலகளவில் பருத்தி உற்பத்தியாகும் பரப்பு

உலக நாடுகளில்

 33.5 மில்லியன் ஹெக்டேர்கள்

இந்தியாவில்,

12.4 மில்லியன் ஹெக்டேர்கள்

உற்பத்தியாகும் அளவு

உலகம் – 26 மில்லியன் மெகாடன்

இந்தியா – 5.79 மில்லியன் மெகாடன்

 பிடி பருத்தி பற்றிய தகவல்கள்

பிடி பருத்தி, அனைத்துவித பூச்சிகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதல்ல.

பிங்க் போல்வார்ம் (Pink bollworm), அமெரிக்கன் போல்வார்ம் (American bollworm) ஆகியவை, பிடி பருத்தியின் நச்சுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன.

உள்ளூர் பருத்தி வகைகளை விட, பிடி பருத்தி விதைகள் விலை உயர்ந்தவை.

பிடி பருத்தி விதைகளை விவசாயி சேமிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் விதை நிறுவனங்களிடமிருந்து காசு கொடுத்து வாங்கவேண்டும்.

பிடி பருத்தியைக்கு இடவேண்டிய பூச்சிக்கொல்லி, உரம் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகம்.

சட்டவிரோத கலப்பின பிடி பருத்தி பயிர், சூழலியலை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது.

மரபணுமாற்ற பயிர்களை மட்டுமே சந்தை கொண்டிருப்பது, இந்திய வேளாண்மையின் பன்மைத்தன்மையை அழிக்கிறது. 

 கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருத்தி அதிகம் உற்பத்தியாகிறது.

 

High costs, falling returns hurt Bt cotton farmers/Chiranjeevi Kulkarni, DHNS, Haveri and Dharwad, SEP 25 2022

நன்றி

விவசாய செயல்பாட்டாளர் சிவக்குமார் 

https://giphy.com/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்