போலீஸ் இன்ஸ்பெக்டர், ரௌடி, ஓட்டுநர் என மூவருக்கும் இடையிலான ஈகோ மோதல் - கோர மீனு - ஆனந்த் ரவி, கிஷோரி, ஷத்ரு, ஹரீஷ் உத்தமன்

 












கோரமீனு

தெலுங்கு

ஷத்ரு, ஹரீஷ் உத்தமன், ஆனந்த் ரவி

கதை, திரைக்கதை, வசனம் ஆனந்த் ரவி

இயக்கம் ஶ்ரீபதி

 

விசாகப்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் ஊர். அங்கு மீசை ராஜூ என்பவர் பணி மாறுதலில் வருகிறார். வந்த உடனே அவரை புகாரின் பேரில் அழைக்கிற சிலர், பலவந்தமாக அவரின் அடையாளமான மீசையை மழித்து எடுக்கிறார்கள். இதனால் மீசை ராஜூ தனது வெளியுலக  அடையாளமான மீசையை இழந்து ஊனமாகிறார். அவரின் ஈகோ காயப்படுகிறது. இதற்கு காரணம் யார் என தேடும்போது, அங்குள்ள மீன் வணிகம் செய்யும் அதன் வழியாக போதைப்பொருட்களை கடத்தும் தாதாவான கருணா கிடைக்கிறார். அவரைக் குறி வைக்கிறார்.

உண்மையில் கருணா யார், அவர் ஏன் போலீஸ் அதிகாரி ராஜூவை மீசையை மழித்து அவமானப்படுத்துகிறார் என்பதற்கான விடை படத்தைப் பார்க்கும்போது கிடைக்கிறது.

தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். ஆனால், படம் எடுக்கப்பட்டது மலையாளப் படத்தின் இயல்பில் என்பதால் நிதானமாகவே பார்வையாளர்ளுக்கு யார், எதற்கு, ஏன், எப்படி என்பதற்கான விடைகள் கிடைக்கிறது.

மீனவ மக்கள் வாழும் சேரிப்பகுதி. அங்குள்ள மக்களைப் பயன்படுத்தி ஏமாற்றி தொழில் செய்யும் இருவர். அப்பா, மகன். அப்பா, அங்குள்ள சிறுமிகளை அழைத்து ப்ளோஜாப் செய்துவிடச்செய்யும் அநீதியான ஆள்.மகன், கருணாவோ விரும்பும் பெண்களை உடனே அனுபவித்துவிட நினைக்கும் ஆள்.  பயத்தை வைத்து மக்களை கட்டுப்படுத்துகிற ஆள்.

மீனவச்சேரியிலுள்ள சலூன் வைத்துள்ள ஒருவர் பேசுவதன் வழியாக கருணாவைப் பற்றி மீசை ராஜூ அறிகிறார். அதில்தான் கருணாவின் ட்ரைவர் கோட்டி பற்றி அறிகிறார். மெல்ல கதை நகரத் தொடங்குகிறது.  

 கருணாவின் ட்ரைவராக கோட்டி வேலை பார்க்கிறார். கோட்டியின் அப்பா, குடிகாரர். கருணாவின் செயல்களைப் பற்றி கவலைப்படாதவரான கோட்டி, அமைதியான ஆள். அவருக்கு ஒரு காதல் இருக்கிறது. அவருடன் படித்த பெண்ணான மீனாட்சியைக் காதலிக்கிறார். ஆனால் இறுதியாகத்தான் மீனாட்சி, கருணாவைக் காதலிப்பது தெரிகிறது. இதனால் கோட்டி சங்கடப்படுகிறார். ஒருகட்டத்தில் தனது பால்யகால தோழியை, மேடம் என்று முதலாளி கருணா அழைக்கச் சொல்லுகிறார். அதையும் ஏற்று நடக்கிறார்.

கருணா மீனாட்சியுடன் ஒருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டு அவளை கழற்றிவிடுகிறார். இந்த சூழலில் மீனாட்சி தன்னை காதலிக்கும் உண்மைக் காதலனனான கோட்டியை மெல்ல அடையாளம் காண்கிறார். கோட்டியைப் பொறுத்தவரை மீனாட்சியை அவர் எப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறார். தோழி மீனாட்சியின் அக்கா முக்கியமான பாத்திரம், இவரது கணவர், கருணாவிடம் வேலை செய்து காணாமல் போன ஆள். காவல்துறையிடம் புகார் கொடுத்தும், அவர் என்ன ஆனார் என்று தெரியாததால், மீனாட்சியின் அக்காவிற்கும் வாழ்க்கைக்கான வழி தெரிவதில்லை. அந்த குடும்பத்திற்கு கோட்டிதான் உதவுகிறான்.

உடலுறவு வைத்துக்கொண்டு கைவிட்ட கருணாவை பழிவாங்குவது போல சில செய்கைகளை மீனாட்சி செய்ய, அவனுக்கு கோட்டி மீது கோபம் வருகிறது. அவன், தனது ட்ரைவர் வேலையிலிருந்து விலகி தனியாக தொழில் செய்யப்போகிறேன் என்று சொல்வது கருணாவுக்கு அகங்காரத்தை தட்டி எழுப்புகிறது.

 கூடவே, தான் உடலுறவு கொண்ட மீனாட்சியை அவன் கல்யாணம் செய்யப்போவதாக கூறுவது கருணாவை வெறியேற்றுகிறது. இதனால் அவன் கோட்டி – மீனாட்சி இருவரும் ஒரே வாரத்தில் ஊரை விட்டு ஓடவேண்டும். இல்லையென்றால் தான் கூப்பிடும்போதெல்லாம் மீனாட்சியை, தன்னுடன் உடலுறவுக்கு கோட்டி கூட்டி வந்துவிடவேண்டும் என்கிறான்.

இந்த மோதலின் முடிவு என்னவானது என்பதே கதை.

கதையில், மூன்று மனிதர்கள் முக்கியம். மீசை ராஜூவாக ஷத்ரு, கோட்டியாக ஆனந்த் ரவி, கருணாவாக ஹரிஷ் உத்தமன் நன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையிலான ஈகோ மோதல்கள், பனிப்போர்தான் படத்தை சுவாரசியமாக்குகிறது..இவர்களின் ஈகோ மோதலை உச்சக்கட்டத்திற்கு நகர்த்துவது மீனாட்சி பாத்திரம்.  

ஜாலார் பேட்டை வாழ்க்கையை படத்தில் டைட்டில் கார்ட் முதற்கொண்டு சொல்லத் தொடங்குகிறார்கள். இதனால் படத்தைப் பற்றி எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் ஆதார பலமே ஜாலார்பேட்டை எனும் மீனவர்கள் வாழும் பகுதிதான். படம், கதையில்தான் அதிக கவனத்தைச் செலுத்துகிறது. தேவையில்லாத குத்துப்பாட்டு, பன்ச்சுகள் என படத்தில் ஏதுமில்லை.

படத்தில் கோட்டியாக நடித்துள்ள ஆனந்த் ரவி படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார். கோட்டி பாத்திரம் முழுக்க அமைதியான இயல்பைக் கொண்டதாக ஆழமாக உள்ளது. ஆனால் அவரைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அவரது பாத்திரம்தான் தீர்மானிக்கிறது.

அடக்கப்பட்ட உணர்ச்சிகளைக் கொண்ட தன்னை அதிகம் வெளிக்காட்டாத நடிப்பு கோட்டி பாத்திரத்திற்கு மர்மத் தன்மையை அளிக்கிறது. அதுதான் படத்தில் பலமாக மாறுகிறது. மீசை ராஜூ, கருணா என இருவருமே அவரவர் வேலை சார்ந்து பலம் பொருந்தியவர்கள். வெளிப்படையாக ஈகோ கொண்டவர்கள். அதை வெளிப்படுத்துபவர்கள் கூட. இவர்களை கோட்டி எப்படி தனக்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை ஈர்க்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவு, குழந்தைகளின் மீதான சீண்டல், தனியாக வாழும் பெண்களை உடலுறவுக்கு பயன்படுத்த நினைப்பது என சமூகத்தில் உள்ள விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

மீனாட்சியுடன் மது அருந்தியபடியே தனது காதலை கோட்டி சொல்லும் காட்சி, அதற்கு மீனாட்சி தனது கோணத்தில் மனதில் தோன்றும் கேள்வியைக் கேட்பது உண்மையில் காதலை அழகாக்கியுள்ளது. உண்மையில் காதல் என்றால் என்ன, அது எதை சார்ந்தது என்பதை யோசிக்க வைக்கிறது.

பால்ய கால தோழி காதலை ஏற்றால் ட்ரைவர் தொழிலை விட்டு மீன்பிடிப்பது தொழிலாக செய்யலாம் என நம்பும் கோட்டி, கோட்டியின் முதலாளி கருணாவை காதலித்து கல்யாணம் செய்து ஜாலார்பேட்டைக்கே ராணியாகும் ஆசையில் மீனாட்சி, அரசியலுக்கு வந்து பணக்கார பெண்ணை மணம் செய்துகொள்ளும் வேட்கையில் கருணா, புதிய பணிமாறுதலில் ஜாலார்பேட்டை வந்து மீசையை இழந்து நிம்மதி பறிகொடுத்து அதற்கு காரணமான ஆட்களைத் தேடும் மீசை ராஜூ என பலருக்கும் பலவித நோக்கங்கள் உள்ளன. இதெல்லாம் சந்திக்கும் புள்ளிதான் படத்தில் முக்கியமானது.

 காதலிப்பதில் தவறு செய்தால் கூட மனம், உடல் என இரண்டுமே கறை பட்டாலும் கூட பெண் மீண்டும் காதலிக்கலாம். பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழலாம் என சொன்ன கருத்தில் படம் ஈர்க்கிறது. படம் தெலுங்குமொழியில் எடுக்கப்பட்டாலும் கூட தெலுங்குப் படமாக இல்லாததுதான் அதன் பலமாக உள்ளது.

 ஈகோ மோதல்

கோமாளிமேடை டீம்

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்