ஒருவரின் முழுமையான திறனை உணரவைப்பதே கல்வி - ஜே.கிருஷ்ணமூர்த்தி

 












தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் ஆங்கில நூலில் இருந்து…

ஜே.கிருஷ்ணமூர்த்தி

தமிழாக்க வடிவம்

 

வாழ்க்கை என்பது நீர்நிலை என எடுத்துக்கொண்டால், அதில் ஒருவர் நீரை வாளி மூலம் அள்ளி எடுத்தால் அந்த வாளியின் கொள்ளளவுக்கே நீர் கிடைக்கும். பெரிய பாத்திரம் வைத்து அள்ளினால், அதிக நீர் கிடைக்கும். அதன் மூலம் ஒருவர் நீர்தேவையை தீர்த்துக்கொள்ளலாம். பற்றாக்குறையை சமாளித்து வாழலாம்.

ஒருவர் இளமையாக இருக்கும்போது, தன்னைப் பற்றிய தேடுதலை செய்ய அதிக நேரம் கிடைக்கும். பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் ஆராய்ந்து பார்க்கலாம். இந்த சமயத்தில் பள்ளி என்பது ஒருவரின் பொறுப்புகள், ஆர்வம் பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவலாம். இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் மனதில் பல்வேறு புள்ளிவிவரங்கள், தொழில்நுட்ப அறிவு என போட்டு அடைத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இளைஞர்களின் மனம் என்பது வளம் நிறைந்த மண் போல. அதில் பயமின்றி, மகிழ்ச்சியான வளர்ச்சிக்கு உகந்த விஷயங்கள் உருவாகி வளர வேண்டும். சுதந்திரமும் முழுமையான இயல்பையும் சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம்.  எளிமையாக ஒருவர் வாழும்போதுதான் முழுமையான நிலையை கற்றுக்கொள்ள முடியும். அகவயமான வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு, வெளிப்புற தேவைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கல்வி என்பது வெளிப்புறமாக மனிதனின் ஒரு பகுதியை மட்டும் திறனுடையதாக மாற்றுகிறது. இதனால் மற்ற பகுதிகள் பெரிதாக மாற்றம் காண்பதில்லை. அவற்றையும் மாறுதல் அடையச் செய்வது முக்கியம். இதனால் ஏற்படும் குழப்பம், மோசமான குணங்கள், பயம்  ஆகியவை சமூகத்தின் வெளிப்புற கட்டமைப்பைத் தாண்டி உருவாகிறது. சமூகத்தின் நோக்கம் சரியாக இருந்தாலும் அதை சுயநலமான தந்திரமான வழிகளில் கட்டமைத்தால் அதனால் எந்தப் பயனுமில்லை.  கல்வி என்பது வெளிப்புறமான திறன்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினால், மோசமான இயல்புள்ள மனிதர்களையே நாம் காண நேரிடும். சரியான கல்வியை ஒருவருக்கு அளிக்கும்போது மனிதர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படாது. ஒருவருக்கு சரியான கல்வியளிக்காத சூழலில், பிறருக்கு தேவைப்படும் அவசியமான  பாதுகாப்பும் மறுக்கப்படுகிறது.

ஒருவரின் சூழ்நிலையை முழுக்க உணரும்படியான கல்வியை அளிப்பது முக்கியம். இதன்மூலம் ஒருவரின் மனம், இதயம் என இரண்டுமே அகவயமான மாற்றங்களைக் காண்பதோடு புத்திசாலித்தனமாகவும் மாறும்.

தகவல், தொழில்நுட்ப பயிற்சியை ஒருவருக்கு வழங்குவதைத் தாண்டி கல்வி என்பது வாழ்க்கையைப் பார்ப்பதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் சமூகத்திலுள்ள முன்முடிவுகளை, மதிப்புகளை உடைத்து தங்களைத் தாங்களே உணர்ந்துகொள்ள முடியும். அதிகாரம், பிறரை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை எளிதாக உதறித்தள்ளி செயல்படலாம்.

சரியான கல்வி என்பது ஒருவரை முழுமையாக தான் யார் என்பதை உணரவைக்கும். நான், என்னுடையது என்பதைக் கடந்து அவர்கள் உண்மையை அறிந்துகொள்ள முடியும். இப்படி ஒருவரின் மனம் யோசித்துச் செயல்பட கல்வி உதவுகிறது. ஒருவர் சுயமாக கற்கும் அறிவிலிருந்து சுதந்திரம் உருவாகிறது.

சுதந்திரமாக கற்பது என்றால், அவர் சமூகத்திலுள்ள மக்களுடன் கொள்ளும் உறவு, செய்யும் செயல்கள், கருத்துகள், இயற்கையுடன் கொள்ளும் உறவு ஆகியவையும் இதில் உள்ளடங்கும். முழுமையாக உள்ள மனிதர்கள் எந்த ஒரு நெருக்கடியான நிலையிலிருந்தும் வெளியே வரமுடியும். தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள், நெருக்கடிகளும் கூட இதில் உள்ளடங்குபவைதான்.

மாணவர்கள் முழுமையான நிலையில் வளர்ந்து வரவேண்டுமென்றால், அவருக்கு கல்வி கற்றுத் தரும் ஆசிரியர் அந்த வழியில் வந்தவராக இருப்பது அவசியம். கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் கூட முக்கியம்தான். வயதானவர்கள் கல்வியைக் கற்கலாம் என  நினைப்பதுதான் கற்றலில் முக்கியமானது. பிள்ளைகளுக்கு என்ன விஷயங்களைக் கற்றுத் தருவது என்பதைவிட நாம் என்னவாக இருக்கிறோம் என்பது முக்கியமானது.

பிள்ளைகளை நாம் விரும்பினால், அந்த விதமாகவே அவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க வாய்ப்புள்ளது. கற்றுத்தருவது என்பது சிறப்பான தனித்துவம் கொண்ட தொழில் அல்ல. இந்த செயல்முறையில் அன்பு இல்லாதபோது கற்றலில் முழுமையான இயல்பு என்பது இல்லாமல் போய்விடும். இந்த வகையில் கல்வியில் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கவேண்டிய முக்கியம். பயமின்மை என்பது சுதந்திரத்தைக் கொண்டு வருகிறது. பிறர் மீதான புகார் இன்றி இரக்கத்தோடு செயல்கள் நடைபெறுகிறது.

அன்பு இல்லாதபோது, பல்வேறு முரண்பாடுகளால் எழும் குழப்பம் அதிகரிக்கும். அதன் முடிவாக தன்னைத்தானே அழிப்பதாக முடியும்.

முழுமையான மனிதன் என்பவன், நுட்பம் என்பதோடு அனுபவத்தாலும்தான் உருவாக முடியும். புதுமைத்திறன் என்பது அதற்கான தனித்த நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. அதைத்தான் கலை என்கிறோம். குழந்தைக்கு ஓவியம் வரை பிடித்திருக்கிறதா அதில் நுட்பம் எல்லாம் அவசியம் இல்லை. அவன் வரையட்டும். அதில், நுட்பம் பற்றியெல்லாம் அவன் கவலைப்பட வேண்டியதில்லை.

அனுபவம் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தருகிறார்கள். இந்த வகையில் அவர்கள் உண்மையான ஆசிரியர்களாக மாறுகிறார்கள். தங்கள் கற்றலுக்கு அவர்கள் சில முறைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதைச் சொல்லும்போது சாதாரணமாக இருந்தாலும், இது உண்மையில் ஆழமான புரட்சி என்று கூறலாம்.

கற்றுக்கொடுத்தலை நாம் கவனிக்கும்போது, சமூகத்தில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நாற்பது அல்லது ஐம்பது வயதில் ஒருவர் பயத்தால், நிறைய விஷயங்களை ஏற்றுக்கொண்டு அடிமையாக நடந்துகொண்டு காணாமல் போய்விடுகின்றனர். இதில் போராட்டம் செய்யாத ஆட்கள் முன்னேற்றத்தின் வரிசையில் முன்னே நிற்பவர்கள் மட்டுமே. கற்றுக்கொடுத்தலை விரும்பி செய்கிற ஆசிரியர், சாதாரணமாக இருக்கும் கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத்தருவதில்லை. பிள்ளைகளின் வாழ்வில் முக்கியமான ஊக்கம் தரும் விதமாக உதவி செய்யக்கூடிய வகையில் கற்றலை சொல்லித் தருவார்கள்.


கருத்துகள்