ஜிடிபி பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் வாங்க! - எது உண்மை, எது பொய்?
மொத்த
உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன?
ஒரு நாட்டின் எல்லைக்குள், குறிப்பிட்ட கால வரம்பிற்குள்
உற்பத்தி செய்யப்படும் பொருள், வழங்கப்படும் சேவைகளின் பண மதிப்பு அல்லது சந்தை மதிப்பு,
மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டின் பொருளாதார
நலத்தைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்பெண் அட்டை போல….
பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுதோறும் அல்லது
காலாண்டு அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், காலாண்டு
அடிப்படையில் ஆண்டு முழுக்கவுமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறார்கள். இப்படி
பெறும் தகவல்களில் பணவீக்கத்திற்கு ஏற்ப பொருட்களின் விலைகளில் சற்று மாறுதல்கள் செய்யப்படுகின்றன.
மொத்த
உள்நாட்டு உற்பத்தியைப் புரிந்துகொள்வது எப்படி?
அரசு செய்யும் செலவுகள், முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின்
முதலீடுகள், செலுத்தப்பட்டுவிட்ட கட்டுமானச் செலவுகள், தனியார் நிறுவனங்களின் சரக்குகள்,
மக்களின் நுகர்வு, ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு
உற்பத்தியில் சேர்க்கப்படும். இறக்குமதி செய்த
பொருட்களின் மதிப்பு கழிக்கப்படும்.
உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு வணிகம் சார்ந்த லாபம்
முக்கியம். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்ப்படும் பொருட்கள், சேவைகள் வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டு கிடைக்கும் லாபம், உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும். உள்நாட்டில்
மக்களுக்கு கிடைக்கும் பொருட்கள், சேவைகளைக் கடந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்தால்,
அதை வணிக உபரி (Trade surplus) என கூறலாம்.
அதேசமயம், இதற்கு எதிர்மறையாக வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி
செய்து மக்கள் பயன்படுத்தினால் அதை வணிக பற்றாக்குறை எனலாம். இப்படி நேரும் சூழ்நிலையில்
மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெயரளவு மதிப்பு அல்லது உண்மையான
மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உண்மையான மதிப்பு என்றால் நாட்டில் உள்ள பணவீக்கத்தை
அடிப்படையாக கொண்டது. ஒட்டுமொத்தமாக பார்த்தால்,
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாடு டாலர்களை எப்போது நிலையாக பயன்படுத்த
தொடங்கியதோ அதைப் பொறுத்த பொருளாதார செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணக்கீட்டு முறை.
2012ஆம் ஆண்டு ஒரு நாட்டின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு
உற்பத்தி 100 பில்லியன் டாலர்கள் என வைத்துக்கொள்வோம். 2022ஆம் ஆண்டு, பெயரளவு உள்நாட்டு
உற்பத்தி 150 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இக்காலகட்டங்களில் ஏற்பட்ட
விலை உயர்வு 100 சதவீதமாகும். இந்த மதிப்பை மட்டும் பார்த்தால் நாடு பொருளாதார ரீதியாக
வளர்ந்துள்ளதைப் போலவே தெரியும். அதில், உண்மையான உள்நாட்டு உற்பத்தி என்பது 75 பில்லியன்
டாலர்கள்தான். இதுவே, அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி தேக்கத்தை நமக்கு
புரிய வைக்கும்.
2022ஆம் ஆண்டு
அமெரிக்காவின் மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதம்.
இது இரண்டாவது காலாண்டைவிட 0.6 சதவீதம் குறைவான வளர்ச்சி.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வகைகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதை பல்வேறு வகைகளில் கூறலாம்.
இதில் வகைகளைப் பொறுத்து சொல்லும் தகவல்களும் மாறுபடும்.
பெயரளவிலான
உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP)
தற்போதைய நிலையிலுள்ள விலைகளைக் கணக்கிடுவதற்கு எடுத்துக்கொண்டு
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. பணவீக்கம், பொருட்களின் விலை அதிகரித்து
வருவது பற்றிய கவனத்தை,பெயரளவிலான உள்நாட்டு உற்பத்தி கருத்தில் கொள்வதில்லை. நாட்டின்
வளர்ச்சியை ஊதிப்பெருக்கியதாக காட்டும் கணக்கீடு இது.
அந்த ஆண்டில் விற்கப்படும் பொருட்கள், சேவைகள் பொறுத்து
பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு செய்யப்படுகிறது. உள்நாட்டு நாணய மதிப்பு
அல்லது அமெரிக்க டாலர்களின் சந்தை மாற்று மதிப்பை பிற நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியோடு
ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் பெயரளவு
உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.
பெயரளவிலான உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டின் பல்வேறு காலாண்டுகளுக்குள்
ஒப்பீடு செய்து கணக்கிடப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் உள்நாட்டு உற்பத்தியை
ஒப்பீடு செய்ய வேண்டிய நிலையில், உண்மையான உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறார்கள்.
இந்த உத்தி மூலம் சில ஆண்டுகளில் அதிகரித்த பணவீக்க பாதிப்பை விலக்கி பொருட்களின் விற்பனை
அளவை மட்டும் பார்க்கலாம்.
உண்மையான
உள்நாட்டு உற்பத்தி (Real GDP)
ஓராண்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளில்
ஏற்படும் பணவீக்க தாக்கத்தைக் கொண்டு, உண்மையான உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.
இதில் பொருட்களின் விலையை சில ஆண்டுகளுக்கு நிலையாக வைத்துக்கொண்டு, பணவீக்கத்தின்
தாக்கம் தனியாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி என்பது, பொருட்கள்
மற்றும் சேவை சார்ந்த நிதி மதிப்பாகும். இதில் பணவீக்கத்தின் தாக்கமுண்டு.
விலையுயர்வு என்பது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தலாம்.
இதன் விளைவாக உற்பத்தியாகும் பொருட்கள், வழங்கப்படும் சேவைகளின் அளவு, தரம் மேம்படும்
அல்லது அதில் தாக்கம் செலுத்தும் என்று கூறமுடியாது. இந்த நிலையில் ஒருவர் பெயரளவிலான
உள்நாட்டு உற்பத்தியைப் பார்க்கும்போது உண்மையில் நாட்டின் உற்பத்தி உயர்ந்துள்ளதா
அல்லது விலைவாசி உயர்ந்துள்ளதாக என புரிந்துகொள்ளவே முடியாது.
உண்மையான உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிட, பொருளாதார வல்லுநர்கள்
ஒரு வழிமுறையைக் கையாள்கிறார்கள். இவர்கள் பேஸ் இயர் (Base year) எனும் குறிப்பிட்ட
ஆண்டைத் தேர்ந்தெடுத்து அதன் வழியாக பணவீக்கத்தின் விலை உயர்வை, பாதிப்பை சமாளிக்கிறார்கள்.
ஒரு ஆண்டிலிருந்து மற்றொரு ஆண்டிற்கு உள்நாட்டு உற்பத்தி பற்றி கணக்கிட்டால், உண்மையான
வளர்ச்சியை எளிதாக கண்டறிந்துவிடலாம்.
உண்மையான உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட உள்நாட்டு உற்பத்தி
விலை வீக்கம் குறைப்பான் (GDP Price deflator) பயன்படுகிறது. இதன்மூலம் அடிப்படையான
ஆண்டு, தற்போதைய நிகழ் ஆண்டு என இரண்டுக்குமான விலை வேறுபாட்டை அறியலாம். எடுத்துக்காட்டாக, அடிப்படை ஆண்டில் 5 சதவீதம் பொருட்களின்
விலை உயர்ந்தால், வீக்க குறைப்பானின்படி
1.05. பெயரளவிலான உள்நாட்டு உற்பத்தியை
வீக்க குறைப்பான் கொண்டு வகுத்தால், உண்மையான உள்நாட்டு உற்பத்தி கிடைத்துவிடும். பெயரளவிலான
உள்நாட்டு உற்பத்தியில், பணவீக்கத்தை நேர்மறையாக எடுத்துகொள்வதால், உண்மையான உள்நாட்டு
உற்பத்தியை விட அதன் மதிப்பு அதிகமாக இருக்கும்.
உண்மையான உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு ஆண்டு சந்தை
மதிப்பில் மாறுபாடு இருக்கும். இதனால் உள்நாட்டு உற்பத்தி எண்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
பெயரளவிலான உள்நாட்டு உற்பத்தி, உண்மையான உள்நாட்டு உற்பத்தி என இரண்டுக்குமான வேறுபாடு
என்பது பணவீக்கம், பணவீக்கமற்ற நிலை என இரண்டையும் பொருளாதாரத்தில் காட்டுகிற இயல்பு
என கொள்ளலாம்.
தனிநபர்
அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP Per Capita)
நாட்டிலுள்ள மக்கள்தொகையில் தனிநபர் அளவில் உள்நாட்டு
உற்பத்தியை அளவீடு செய்வதை தனிநபர் அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். இதன் மூலம் ஒருவரின் வருமானம் பற்றிய தகவல் கிடைக்கும்.
இதை வைத்து, பொருளாதாரத்தின் தோராய உற்பத்தி அல்லது தோராயமாக வாழ்க்கை முறை, தரம் பற்றி
அறியலாம். தனிநபர் அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெயரளவு, உண்மை அல்லது வாங்கும்
சக்தி வேறுபாடு (Purchasing Power Parity PPP) ஆகியவற்றின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
தனிமனிதர் , நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தளவு பங்களிக்கிறார்
என்பதை தனிநபர் அளவிலான உள்நாட்டு உற்பத்தி மூலம் அறியலாம். உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு
முறையில் மக்களில் தனிநபர் ஒருவருக்கு என மதிப்பிடப்படுகிறது.
இந்த வகையில் அவர் நாட்டின் வளத்திற்கும் காரணமாக அமைகிறார்.
உள்நாட்டு உற்பத்தியின் பழைய வழிமுறைகளின் படி தனிநபர்
அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்பட்டு
வந்தது. பொருளாதார வல்லுநர்கள், இந்த அளவீட்டைக் கொண்டு உள்நாட்டின் உற்பத்தித் திறன்
மற்றும் வெளிநாடுகளின் உற்பத்தி திறனை ஒப்பீடு
செய்தனர். தனிநபர் அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி
மற்றும் அதன் மக்கள்தொகையோடு தொடர்புடையது. தனிநபர் அளவிலான உள்நாட்டு உற்பத்தியில்
தாக்கம் ஏற்படுத்தும் அம்சங்களை நாம் புரிந்துகொள்வது அவசியம். தாக்கம் ஏற்படுத்தும்
அம்சங்களால் உருவாகும் அதன் நேரடியான விளைவு முக்கியமானது. இவை தனிநபர் அளவிலான உள்நாட்டு
உற்பத்தியைப் பாதிக்கின்றன.
ஒரு நாட்டின் அதிகரிக்காத சமநிலையான மக்கள்தொகை மூலம்
தனிநபர் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது என கொள்வோம். இதே மக்கள்தொகை அளவில், தொழில்நுட்ப
ரீதியான முன்னேற்றங்கள் சாத்தியம். சில நாடுகள் குறைந்த மக்கள் தொகையுடன் அதிக உள்நாட்டு
உற்பத்தி சாதனையை செய்திருப்பார்கள். நாட்டிலுள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி தற்சார்பான
முறையில் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளதே இதற்கு காரணம்.
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (GDP Growth
Rate)
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், ஆண்டுதோறும் அல்லது
காலாண்டு அடிப்படையில் ஒப்பிடப்பட்டு பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. சதவீத
அளவில் இந்த வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுவதால், நாட்டில் உள்ள பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை
ஆகியவற்றை எளிதாக அறிந்துகொள்ளலாம்.
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வேகம் ஊக்கப்படுத்தப்படுகிறது
என்றால் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். அதேசமயம் வளர்ச்சி
விகிதம் குறைகிறது என்றால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும். இதனால் அரசு,
ஊக்கநிதியை தொழில்நிறுவனங்களுக்கு வழங்கவேண்டி வரும்.
உள்நாட்டு உற்பத்தி வாங்கும் சக்தி சமநிலை (GDP
Purchasing Power Parity)
நேரடியாக உள்நாட்டு உற்பத்தியை கணிக்கமுடியாதபோது, அதைக்
கண்டறிய பொருளாதார வல்லுநர்கள இன்னொரு வழியை வைத்திருக்கிறார்கள். அதுதான் வாங்கும்
சக்தியின் சமநிலை. இந்த முறையில் உள்நாட்டிலுள்ள பொருட்களின் விலை, வாழ்க்கை நடத்துவதற்கான
செலவுகள் ஆகியவற்றைப் பற்றிய உண்மையான தகவல்களைப் பெற முடியும்.
உள்நாட்டு உற்பத்தி சூத்திரம் (GDP Formula)
உள்நாட்டு உற்பத்தி
மூன்று முக்கியமான முறைகளின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மூன்று முறைகளுமே சரியானபடி
கணக்கிட்டால் ஒரே எண்களையே கொடுக்கும்.
செலவு அணுகுமுறை, உற்பத்தி அணுகுமுறை, வருமான அணுகுமுறை
என மூன்று முறைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
செலவு அணுகுமுறை (The Expenditure Approach)
பொருளாதாரத்தில் பங்களிக்கும் பல்வேறு குழுக்கள் செய்யும்
செலவுகளை அடையாளம் கண்டு கணக்கிடுகிறார்கள். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி, செலவுகளின்
அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
சி –நுகர்வு
ஜி – அரசு செலவிடும் தொகை
ஐ- முதலீடு
என்எக்ஸ் – மொத்த ஏற்றுமதி
GDP = C+G+I+NX where
மேலே கூறியுள்ள
நடவடிக்கைகள் உள்நாட்டு உற்பத்தியில் முக்கியமானவை. தனியார் நிறுவனங்கள் செலவிடும்
தொகை, மக்களின் நுகர்வு ஆகியவற்றை நுகர்வு என்ற சொல் குறிக்கிறது. அதாவது, மக்கள் உணவுப்பொருட்களை
வாங்குவது, முடிவெட்டுவது ஆகியவற்றுக்கென பணத்தை செலவிடுகின்றனர். உள்நாட்டு உற்பத்தியில்
மக்களின் செலவு என்பது முக்கியமான பங்கை ஆற்றுகிறது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில்
மக்களின் செலவு என்பது மூன்றில் இருபங்காக உள்ளது.
பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்கள் அதிகம் செலவிடுகிறார்கள்.
ஆனால் எதிர்மறையாக, பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையில்லாதபோது மக்கள் செலவிடும் தொகை
மிகவும் குறைந்துவிடும். இவ்வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மெல்ல குறைந்துவிடும்.
அரசு பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்காக
செலவழித்தே ஆகவேண்டும். பொருளாதார மந்தநிலையில் பொதுமக்கள், தனியார் துறையினரின் செலவு,
முதலீடு குறைந்துள்ள நிலையில், அரசு செலவழிக்கும்போதுதான் பொருளாதாரம் கீழே வீழாமல்
பிழைக்கும். பணியாளர்களுக்கான சம்பளம், திட்டங்களுக்கான முதலீடு, பொருட்களை வாங்குவது
ஆகிய விதமாக அரசு தனது நிதியை செலவிடுகிறது.
தனியார் துறையினரின் உள்நாட்டில் முதலீடு செய்வதை முதலீடு
அல்லது முதலீட்டு செலவு என குறிப்பிடலாம். தொழில் நிறுவனம் முதலீடு மூலம் தனது வணிகத்தை
வளர்க்க முடியும். எடுத்துக்காட்டாக வணிகத்திற்காக எந்திரங்களை வாங்குவது. உள்நாட்டு
உற்பத்திக்கான பங்களிப்பில் தொழில் நிறுவனங்கள் செய்யும் முதலீடு முக்கியமானது. இந்த
முதலீடு பொருளாதாரத்தை வளர்ப்பதோடு, வேலைவாய்ப்பையும் பெருக்குகிறது.
மொத்த ஏற்றுமதி சூத்திரம், மொத்த ஏற்றுமதி – மொத்த இறக்குமதி
என கழித்தால் கிடைக்கக்கூடியது. ஒரு நாட்டிலிருந்து பொருட்களை பிற நாட்டிற்கு ஏற்றுமதி
செய்தால் அது முக்கியமான பொருளாதார நடவடிக்கை. இறக்குமதியாகும் பொருட்களை விட ஏற்றுமதியாகும்
பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் வளருகிறது என்று அர்த்தம்.
ஒரு நாட்டில் செயல்படும் தொழில்நிறுவனம் ஏற்றுமதிக்கான செலவுகளை செய்கிறது. இந்த தொழில்நிறுவனங்கள்
வெளிநாடுகளைச் சார்ந்து இருந்தாலும் அவை மொத்த ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி
கணக்கிடுவதில் முக்கியப் பங்கு வகிப்பவைதான்.
உற்பத்தி அணுகுமுறை
(The production Approach)
இந்த அணுகுமுறை செலவுக்கு எதிர்மறையான அணுகுமுறை. தொழிலுக்கு
முதலீடு செய்யும் செலவுகள் பொருளாதாரத்திற்கு எப்படி பங்களிக்கிறது என்பதைவிட, உற்பத்தியாகும்
பொருட்களின் மொத்த மதிப்பு சார்ந்து அணுகும் முறை. மொத்த பொருளாதார மதிப்பிலிருந்து,
நுகரப்படும் பொருட்களின் மதிப்பு கழிக்கப்படுகிறது.
வருமான அணுகுமுறை (The Income Approach)
மேற்கண்ட இரு அணுகுமுறைகளுக்கும் இடைப்பட்ட அணுகுமுறையே
வருமான அணுகுமுறை. பொருளாதாரத்தில் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாய் கணக்கிடப்பட்டு
வருமான அணுகுமுறை உருவாகிறது. தொழிலாளருக்கு வழங்கப்படும் சம்பளம், நிலம் அல்லது இடத்திற்கான
வாடகை, வட்டி மூலம் பெறப்படும் முதலீடு, பெருநிறுவன லாபம் ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக
கூறலாம்.
விற்பனை வரி, சொத்து வரி ஆகியவை மறைமுகமான வணிக வரிகளாகும்.
இவற்றை உற்பத்திக்கான காரணிகளாக கொண்டு வருமான அணுகுமுறை உள்ளடக்குவதில்லை.
ஜிடிபி –ஜிஎன்பி-ஜிஎன்ஐ (GDP Vs GNP Vs GNI)
பொருளாதாரத்தை அளவிட பரவலாகப் பயன்படுத்தும் அளவீட்டு
முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி). இதில், நாட்டின் எல்லைக்குள் உற்பத்தியாகும்
பொருள், சேவை என்ற வரம்புகள் உண்டு. வெளிநாட்டு நிறுவனங்கள், சொந்த நாட்டைச் சேர்ந்த
உற்பத்தியாளர்கள் என்று கூட இருக்கலாம்.
மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product GNP)
இதில் ஒட்டுமொத்த மக்களின் உற்பத்தித்திறன் அல்லது நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அளவிடப்படுகின்றன.
இயங்கும் நிறுவனங்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.
இதில், வெளிநாட்டினரின் உள்நாட்டு உற்பத்தி விலக்கப்படுகிறது.
மொத்த தேசிய வருவாய் (Gross National Income GNI)
பொருளாதாரத்தை வரையறை செய்யும் முறை. இந்த முறையில் உள்நாட்டு
மக்களின் வருமானம், நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் கூட அவர்களையும்
உள்ளடக்குகிறது. மொத்த தேசிய உற்பத்தியும், தேசிய வருவாயும் உற்பத்தி அணுகுமுறை, வருவாய்
அணுகுமுறை சார்ந்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
மொத்த தேசிய உற்பத்தி, உற்பத்தி முறையைப் பயன்படுத்துகிறது.
மொத்த தேசிய வருவாய், வருவாய் முறையைப் பயன்படுத்துகிறது. மொத்த தேசிய வருவாய் என்பதில்
உள்நாட்டு வருமானம், வணிக வரிகள், வெளிநாட்டு நிறுவனங்களின் மொத்த வருமானம் ஆகியவையும்
உள்ளடங்கும். உள்நாட்டு வருமானத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் வருமானம், தனிநபர்களின்
சம்பளம் ஆகியவை கழிக்கப்படுகின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மொத்த தேசிய வருவாய்
என்பது சிறந்த கணக்கீட்டு முறையாக உள்ளது. ஏனெனில் பெரும்பாலான நாடுகளில் அவர்களின்
வருமானம் பிற நாடுகளில் இருந்து வருகிறது. அங்குள்ள பெருநிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்கள்
இதற்கு உதவுகிறார்கள். மொத்த தேசிய வருவாயை விட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு என்பது
இந்த நாடுகளில் அதிகமாக உள்ளது.
2019ஆம் ஆண்டு, லக்சம்பர்க்கில் அதன் உள்நாட்டு உற்பத்தி,
தேசிய வருவாய் என இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் காணப்பட்டன. லக்சம்பர்க்கிற்கான வருவாய்
என்பதே, அங்கு செயல்பட்டு வந்த வெளிநாட்டு பெருநிறுவனங்கள் மூலம்தான் கிடைத்தது. அங்கு,
வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு அதிக வரிச்சலுகை கிடைத்தது. இதனால் அதிக நிறுவனங்கள்
அங்கு இயங்கி வந்தன. இதற்கு எதிர்மறையாக அமெரிக்காவில்
மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய வருவாய் என இரண்டிலும் அதிக வேறுபாடுகள் காணப்படவில்லை.
2022ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 25.7 ட்ரில்லியன் டாலர்களாக
இருந்தது. 2021ஆம் ஆண்டு இறுதியில் உள்நாட்டு தேசிய வருவாய், 23.4 ட்ரில்லியன் டாலர்களாக
இருந்தது.
மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் மாற்றங்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்தும்போது அதில்
பல்வேறு மாற்றங்களைச் செய்கிறார்கள். பொருளாதார வல்லுநர்கள் உள்நாட்டு உற்பத்தியைப்
பார்த்து பொருளாதார அளவைப் புரிந்துகொண்டாலும் மக்கள் வாழ்நிலையைப் பற்றி அறிய முடியாது.
மக்கள்தொகை, வாழ்க்கைச் செலவுகள் என உலகின்
எந்த நாடுகளிலும் நிலையாக இருக்காது. எனவே, அதை துல்லியமாக கூற முடியாது.
சீனாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அயர்லாந்தின்
உள்நாட்டு உற்பத்தியையும் பார்த்தால் உங்களால் அந்த நாடுகளில் உள்ள உண்மையான பொருளாதார
நிலையை அறிந்துகொள்ள முடியாது. அயர்லாந்தை விட சீனாவில் மக்கள்தொகை அதிகம்.
இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் அளவு என்பதை
பிற நாடுகளை வைத்து ஒப்பிடுகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியை, மக்கள்தொகையால்
வகுத்தால் தனிநபர் வருமானம் கிடைக்கிறது. இதை வைத்தே, நாட்டின் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம்
கணிக்கப்படுகிறது. இந்த அளவீடு என்பது துல்லியமானது அல்ல.
சீனாவின் தனிநபர் அளவிலான உள்நாட்டு உற்பத்தி, 1,500
டாலர்கள். அயர்லாந்தின் தனிநபர் அளவிலான உள்நாட்டு உற்பத்தி 15,000 டாலர்கள். இதன்
அர்த்தம், சீனாவை விட அயர்லாந்து நாட்டு மக்கள் பத்து மடங்கு நன்றாக வாழ்கிறார்கள்
என்று அர்த்தமல்ல. ஒருநாட்டில் மக்கள் வாழ்வது பற்றிய கருத்தை, தனிநபர் அளவிலான உள்நாட்டு
உற்பத்தி கூறுவதில்லை.
வாங்கும் சக்தி சமநிலையை வைத்து இருவேறு நாடுகளில் விற்கப்படும்
பொருட்கள் பற்றிய ஒப்பீட்டைச் செய்யலாம். இங்கு ஒரு நாட்டின் பணமதிப்பு, இன்னொருநாட்டு
மதிப்புப்படி மாற்றி கணக்கிடப்படுகிறது.
உண்மையான தனிநபர் அளவிலான உள்நாட்டு உற்பத்தியை, வாங்கும்
சக்தி சமநிலையை வைத்து மாற்றங்களைச் செய்யமுடியும். இதை ஒரு எடுத்துக்காட்டு மூலம்
பார்க்கலாம். அயர்லாந்தில் ஒருவர் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்களை சம்பாதிக்கிறார் என
வைத்துக்கொள்வோம். சீனாவில் ஆண்டுக்கு தனிநபர் ஐம்பதினாயிரம் டாலர்களை சம்பாதிக்கிறார்.
வெளிப்படையான அளவில் பார்த்தால் அயர்லாந்தைச் சேர்ந்தவர் வசதியாக இருப்பதைப் போல தெரியலாம்.
ஆனால் அயர்லாந்தில் உணவு, உடை ஆகியவற்றின் விலை சீனாவில் உள்ளதை விட மூன்று மடங்கு
அதிகம் என்றால், சீனாவைச் சேர்ந்தவரே, அதிக வருவாயைக் கொண்டவராக இருப்பார். அதுதான்
உண்மையான தனிநபர் வருமானம்.
உள்நாட்டு
உற்பத்தியை எப்படி பயன்படுத்துவது?
பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு உற்பத்தி தகவலை மாதம்தோறும்
அல்லது காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடுகின்றன.
அமெரிக்காவில் பொருளாதார ஆய்வு அமைப்பு (BEA), காலாண்டு அறிக்கையை காலாண்டு
முடிவதற்கு ஒருமாதம் முன்பும், முழுமையான அறிக்கையை காலாண்டு முடிந்து மூன்று மாதங்களுக்குப்
பிறகும் வெளியிடுகிறது.
ஒரு நாட்டின் சந்தையை உள்நாட்டு உற்பத்தி அறிக்கை பாதிக்கும்
அளவு என்பது வரையறுக்கப்பட்டது. காலாண்டிற்குப் பிறகு உள்நாடு உற்பத்தி வெளியாகும்போது
ஏற்கெனவே சந்தையில் நிறைய நேரம் செலவிடப்பட்டிருக்கும். எதிர்பார்த்த சதவீத அளவுக்கும்,
அறிக்கையில் வெளியாகும் சதவீத அளவிற்கும் வேறுபாடு இருந்தால் சற்று பாதிப்பு ஏற்படும்.
பொருளாதாரத்தின்
நிலை, வளர்ச்சி பற்றி உள்நாட்டு உற்பத்தி அறிக்கை நேரடியாக தகவலைக் கூறுகிறது. தொழில்நிறுவனங்கள்
அரசின் உள்நாட்டு உற்பத்தி அறிக்கையை வழிகாட்டுதலாக எடுத்துக்கொண்டு திட்டங்களை வகுக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக அல்லது இறங்குமுகமாக இருக்கிறதா எனப் பார்த்துதான் அரசு
தனது நிதிக்கொள்கையை மாறுபாடு செய்து செயல்படுகிறது.
உண்மையான உள்நாட்டு உற்பத்தி என்பதை பொருளாதார வல்லுநர்கள்,
கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் கவனிக்கிறார்கள். இந்த அறிக்கையை முன்கூட்டியே
வெளியிடுவது சந்தையில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது.
உள்நாட்டு
உற்பத்தியும் முதலீடும்
மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கை, முதலீட்டாளர்களுக்கு
முடிவெடுப்பதற்கான சிந்தனையை உருவாக்குகிறது. பெருநிறுவனங்களின் லாபம், சரக்கு பற்றிய
தகவல்கள் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு முக்கியமான தகவல்களை கொடுக்கிறது.
உள்நாட்டு உற்பத்தி அறிக்கை, குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி,
வரிகட்டுவதற்கு முந்தைய நிலையில் நிறுவனங்களின் லாபம், நிறுவனத்தில் உள்ள நிதிப்புழக்கம்
ஆகியவற்றைக் கூறுகிறது.
உள்நாட்டு உற்பத்தி அறிக்கையை ஒப்பிடுவதன் மூலம் சொத்துக்களை
வாங்குவது, நிதியுதவி செய்வது, பிறநாடுகளில் முதலீடு செய்வது பற்றிய முடிவுகளை எடுக்க
முடியும்.
உள்நாட்டு உற்பத்தி அறிக்கையைப் படிப்பதன் மூலம் சந்தையில்
உள்ள முதலீட்டு அளவை பற்றாக்குறையை தெரிந்துகொண்டு ஈக்விட்டி பங்குகளை ஒருவர் மதிப்பிட
முடியும். நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை அளவைத் தெரிந்துகொண்டு அதன் விலை விற்பனை
சதவீதத்தைக் (Price sales ratio) கணிக்கலாம். எளிதாக நிறுவனத்தின் பங்குகளை மதிப்பிட்டு
வாங்க முடியும்.
உலகவங்கி சொல்லும் விலை விற்பனை சதவீதத்தைப் பார்ப்போம்.
அமெரிக்காவில் விலை விற்பனை சதவீதம் 195% (2020), சீனா 83%, ஹாங்காங்கில் 1,777% ஆக
உள்ளது என அறிக்கையில் கூறியது. விலை விற்பனை சதவீதம் அதிக மதிப்பீடு, குறைந்த மதிப்பீடு
காரணமாக மாறுதல்களை அடைகிறது.
மொத்த
உள்நாட்டு உற்பத்தி வரலாறு
1937ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸில் பெரும் பொருளாதார
நெருக்கடி ஏற்பட்டபோது மொத்த உள்நாட்டு உற்பத்தி சிந்தனையை கூறியவர், தேசிய பொருளாதார
ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் சைமன் குஷ்னட்ஸ்.
மொத்த தேசிய உற்பத்தி (GNP) என்ற கணக்கீடு, நடைமுறையில்
பயன்படுத்தப்பட்டு வந்தது. 1944ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெட்டன் வுட்ஸ் மாநாடு நடைபெற்று
முடிந்தபிறகு, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு , பொருளாதார வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1991ஆம் ஆண்டு வரையில் அமெரிக்கா மொத்த தேசிய உற்பத்தியை அதிகாரப்பூர்வமாக கடைபிடித்து
வந்தது. பிறகுதான் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாறியது.
1950க்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியை பலரும்
கேள்வி கேட்கத் தொடங்கினர். சமூகத்தின் பாகுபாடு, மகிழ்ச்சி, ஆரோக்கியம் பற்றியெல்லாம்
உள்நாட்டு உற்பத்தி அறிக்கை கவலைப்படவில்லை. பொருளாதார முன்னேற்றம், சமூக வளர்ச்சி
ஆகியவை கவனப்படுத்தப்படவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தங்கள் விமர்சனத்தை முன்வைத்தனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் பொருளாதார
ஆலோசகர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பொருளாதார வல்லுநர் ஆர்தர் ஆகுன், உள்நாட்டு உற்பத்தி
அறிக்கையை நம்பினார். மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது, வேலைவாய்ப்பின்மை
குறைந்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
விமர்சனங்கள்
முறையாக ஆவணங்கள் வழியாக பதிவாகும் வரி, நிதி ஆகியவற்றை
மட்டுமே உள்நாட்டு உற்பத்தி கணக்கில் கொள்கிறது. கணக்கில் வராத உழைப்பு, நிதி ஆகியவற்றை
உள்நாட்டு உற்பத்தி அறிக்கை பொருட்படுத்துவதில்லை. அரசின் திட்டங்களை ஊதியம் பெறாத
தன்னார்வலர் மக்களுக்கு கொண்டு செல்லும் சேவை மதிப்புமிக்கது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி
அறிக்கை, தன்னார்வலரின் பணி ஆவணங்களில் பதிவு செய்யப்படாத காரணத்தால் அதைப் பொருட்படுத்துவதில்லை.
அரசு செய்யும் முதலீடுகளை அதன் இறுதி விளைவுகள் நல்லதோ,
கெட்டதோ அதை வளர்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறது. குற்றங்களுக்கு எதிரான கொள்கைகளை உருவாக்குவதும்,
போருக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் வளர்ச்சி என்றே உள்நாட்டு உற்பத்தி அறிக்கை
கருதுகிறது.
வேகமாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது. ஆனால்
இதன் விளைவாக மக்கள் வாழும் இயற்கைச்சூழல் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு இடையே வருமான
பாகுபாடு ஏற்படுகிறது. இதைப்பற்றி உள்நாட்டு உற்பத்தி அறிக்கை எதையும் கூறுவதில்லை.
வணிகத்தின் இறுதி முடிவை, கிடைக்கும் பொருளைப் பற்றி மட்டுமே உள்நாட்டு உற்பத்தி கருத்தில்
கொள்கிறது. வணிகத்தின் இடையே நடைபெறும் பரிமாற்றங்களைக் கண்டுகொள்வதில்லை.
உலகளவில்
உள்நாட்டு உற்பத்தி அறிக்கை வழங்கும் அமைப்புகள்
அமெரிக்காவின் வணிகத்துறை. இதில்தான் பிஇஏ என்ற அமைப்பு
உள்ளது. உள்நாட்டு உற்பத்தி அறிக்கை வெளியாகும்போது, பிஇஏ அமைப்பு தனது ஆய்வு அறிக்கை
ஒன்றையும் வெளியிடுகிறது. இதை வைத்தே முதலீட்டாளர்கள் சந்தையைப் புரிந்துகொள்கிறார்கள்.
அமெரிக்க அரசு உலக வங்கி தனது அரசு அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து உள்நாட்டு உற்பத்தி
பற்றிய விவரங்களைப் பெறுகிறது.
உலக வங்கி நம்பிக்கையான வலைத்தள அடிப்படையில் உள்நாட்டு
உற்பத்தி பற்றிய தகவல்களை அளிக்கிறது. இதை வைத்து நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி தகவல்களை
பின்தொடரலாம். உலக நிதியகம், உலக பொருளாதாரப் பார்வை, உலக நிதி புள்ளிவிவரம் என இண்டு
வகையில் உள்நாட்டு உற்பத்திய பற்றிய தகவல்களை வழங்குகிறது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு என்ற அமைப்பு
வழங்கும் உள்நாட்டு உற்பத்தி தகவலும் முக்கியமானது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக
உள்ள நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி பற்றிய தகவல்களை மட்டுமே அறிய முடியும்.
உள்நாட்டு உற்பத்தி அதிக சதவீதம் கொண்ட நாடுகள் அமெரிக்கா
மற்றும் சீனா ஆகும். பெயரளவிலான உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் பார்த்தால் அமெரிக்கா
23 ட்ரில்லியன் டாலர்கள் அடிப்படையில் (2022படி) முதலிடத்தில் வருகிறது. அடுத்தபடியாக
சீனா, 17.7 ட்ரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் வாங்கும் சக்தி சமநிலை எனும் அளவீட்டை
உண்மையான பொருளாதாரத்தை அளவிட பயன்படுத்தலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வகையில்
2021ஆம் ஆண்டு அடிப்படையில் சீனா 27.3 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பில் முன்னிலை பெறுகிறது.
அமெரிக்கா, 23 ட்ரில்லியன் டாலர்களோடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி சதவீதம் அதிகமாக இருந்தால் அந்த நாடு
செல்வச்செழிப்பு கொண்டுள்ளதாக பலரும் நினைக்கிறார்கள். அங்கு தொழில்துறை சிறப்பாக உள்ளது
என கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டு உற்பத்தி சதவீதம் அதிகமாக இருந்து,
தனிநபர் அளவிலான உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்? நாட்டிலுள்ள செல்வம் குறிப்பிட்ட
நபர்களின் கையில் இருக்கிறது. மக்களிடம் பரவலாகவில்லை என்று அர்த்தம். உள்நாட்டு உற்பத்தியோடு
மனித மேம்பாட்டு பட்டியலையும் பார்ப்பது நாட்டின் உண்மையான நிலையை அறிய உதவும்.
பால் சாமுவேல்சன், வில்லியம் நார்தாஸ் ஆகிய இரு பொருளாதார
வல்லுநர்களும் நாட்டின் பொருளாதாரக் கணக்குகள், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை
சிறப்பாக விளக்கியுள்ளனர். செயற்கைக்கோள் எப்படி ஒரு கண்டத்தின், நாட்டின் தட்பவெப்பநிலையைக்
கணிக்கிறதோ அந்த வேலையைத்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு செய்கிறது. இந்த கணக்கீடுகளும்
பற்றாக்குறைகள், போதாமைகள் உண்டு. ஆனால் இந்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கையை வைத்துத்தான்
வங்கிகள், கொள்கை வகுப்பாளர்கள், அரசு ஆகியோர் செயல்படுகின்றனர்.
Investopedia
Gross domestic product (GDP): Formula and how to
use it
Jason fernand
நன்றி
விவசாய செயல்பாட்டாளர் சிவக்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக