சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி
தென் தேர் ஈஸ் லவ்
ஜே கிருஷ்ணமூர்த்தி
தமிழாக்கம்
குழந்தைகளின்
வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை
எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும்,
எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக்
கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென
நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக
வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர்,
முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை
அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா?
ஒரு செடியை,
விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை
நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது,
அம்முறையின் வழியாக அவர்களை மெல்ல கொல்கிறோம்.
உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் நடைபெறக்
கூடாது.
நீங்கள் நேசிக்கும்
ஒருவரை இழந்துவிட்டீர்கள் என்றால், அவரை நினைத்து அழுகிறீர்கள். அப்போது சிந்தும் கண்ணீர்
துளிகள் யாருக்கானது? உங்களுக்கானதா, இறந்துபோனவருக்கா? நீங்கள் பிறர் இறந்துபோனதற்காக
அழுதிருக்கிறீர்களா? போரில் உங்கள் மகன் இறந்துபோனதற்காக
வருந்தி அழுதிருக்கிறீர்களா? உங்களது மனதின் கழிவிரக்கத்தால் வந்த கண்ணீரா அல்லது மனிதர்கள் இறந்துபோனதற்காக அழுதீர்களா?
உண்மையில்
நீங்கள் அழுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்களை மட்டுமே நினைத்து அழுகிறீர்கள். ஒருவர்
மீது வைத்துள்ள பாசம் காரணமாக அவர் இறந்துபோனதற்காக அழுகிறீர்கள். உண்மையில், அது ஒருவர்
மீது கொண்ட பாசமல்ல. உங்கள் சகோதரர் இறந்துவிட்டார் என அறிந்து அழுகிறீர்கள். அதற்கு
காரணம், இனிமேல் நீங்கள் அவரைக் காணமுடியாது. உண்மையில் அப்படி நீங்கள் அழுவது கூட
உங்கள் மனதில் உள்ள கழிவிரக்கம் காரணமாகத்தான். இப்படி கழிவிரக்கம் கொள்வது உங்கள்
மூடிய தன்மை கொண்டதாக, களைப்படைந்தவராக, முட்டாளாக மாற்றுகிறது.
நீங்கள் உங்களை
நினைத்து அழுகிறீர்கள், அதற்கு காதல் காரணம் அல்ல. நீங்கள் தனியாக இருப்பதால் அழுகிறீர்கள்.
நீங்கள் முழுமையான ஆற்றல் இல்லாதவராக இருக்கிறீர்கள். உங்கள் சூழலும் வெகுவாக மாறியிருக்கிறது.
இந்த சூழலில் கரைந்தழுவீர்களா? இதை நீங்கள் புரிந்துகொண்டால் சோகம் என்பது நீங்களே
உருவாக்கிக்கொள்வது என்பதை அறியலாம். அதாவது, உங்கள் கையால் மரத்தை, தூணைத் தொடுவது
போலத்தான்.
காலத்திலிருந்துதான்,
சோகம் உருவாகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என்னோடு எனது சகோதரர் இருந்தார். இன்று
அவர் இல்லை. இறந்துபோய்விட்டார். அதனால், நான் தனியாக இருக்கிறேன். இன்று யாருடனும்
நான் நட்பாக, இணக்கமாக இல்லாத நிலையில் எனக்கு அழுகை வருகிறது.
உங்களுக்குள்
நடக்கும் அனைத்து விஷயங்களையும் நீங்களே பார்க்கலாம். அதை முழுமையாக தெளிவாக பார்க்க
முடியும். ஆனால் அதை நீங்கள் ஆராய்ச்சி செய்ய முயல கூடாது. நான், எனது குடும்பம், எனது
நாடு , எனது மதம் , எனது நம்பிக்கை என்ற அடிப்படையில் நிறைய விஷயங்கள் உருவாகின்றன.
இதயப்பூர்வமாக உங்களுக்குள் உருவாகும் விஷயங்களை பார்த்து பழகினால் சோகம் என்பதே உருவாகாது.
வெறும் புத்தியால் மட்டுமே இவற்றைப் பார்க்க கூடாது.
சோகமும்,
காதலும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் கிறிஸ்துவ மதத்தில் சோகம், வேதனை என்பது முக்கியமான அங்கமாக உள்ளது. சோகத்தை முன்மாதிரியாக கொண்டு அதிலிருந்து மனிதர்கள்
தப்பிக்க முடியாது என போதிக்கிறார்கள்.
உண்மையில்
காதல் என்றால் என்ன என்று கேட்டால் நான் சொல்லும் பதிலைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடையக்
கூடும். அதை அறிந்தால் குடும்பத்தை உடைத்துவிடுவீர்கள். உங்கள் மனைவியை, கணவரை, குழந்தைகளைக்
கூட காதலிக்காமல் போய்விடலாம். நீங்கள் கட்டிய வீட்டை உடைத்துவிடலாம். அதற்குப் பிறகு
நீங்கள் கோவிலுக்கு கூட எப்போதும் போகப்போவதில்லை ஆகிய மாற்றங்கள் நடைபெறலாம்.
உண்மையைத்
தேடினால், பயன், சார்ந்திருத்தல், பொறாமை, ஆதிக்கம் செலுத்துவது, கடமை, பொறுப்பு, கழிவிரக்கம்,
கோபம் ஆகியவை காதல் இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். மழை பொழியும்போது மரத்தின்
இலைகளிலுள்ள தூசிகள் கழுவப்படுவது போல மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் விலக்க வேண்டும்.
துடைத்து தள்ள வேண்டும். அப்போதுதான் இதுவரை நாம் காத்திருந்த பார்க்க நினைத்திருந்த பூவைப் பார்க்க முடியும்.
உங்களுக்கு
காதல் கிடைக்காமல் இருந்தால், சில துளியேனும் நீங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் உலகம்
பேரழிவைச் சந்திக்கலாம். மனிதர்கள் ஒன்றிணைய காதலே அடிப்படையானது. அதுவே ஒரே வழியாக
உள்ள நிலையில் அதுபற்றி யார் கற்றுத் தருவது? அரசு, முறை, அமைப்பு முறை ஆகியவையா? காதலைப்
பற்றி பிறர் உங்களுக்கு கூறினால் அது காதல் கிடையாது.
‘’நான் காதலை
பயிற்சி செய்து வருகிறேன். தினசரி சில மணிநேரங்கள் அமர்ந்து காதல் பற்றி யோசிக்கிறேன்.
கருணையும் மென்மையான அணுகுமுறையும் கொண்டு, பலவந்தமாக பிறரின் பேச்சுகளை கவனித்துக் கேட்கிறேன் ’’ என்று
சிலர் கூறலாம். நீங்கள் உங்களை ஒழுங்கு செய்துகொண்டு இருப்பது காதலா? நீங்கள் உங்களை காதலுக்காக ஒழுங்கு செய்துகொண்டிருந்தால், காதல்
சன்னல் வழியாக வெளியே போய்விடும். காதலை சில நுட்பங்கள் வழியாக, முறைகள் வழியாக பழகலாம்.
இந்த வகையில் ஒருவர் கருணை உள்ளவராக, அகிம்சையானவராக, அசாதாரணமானவராக மாறலாம். ஆனால்
இவையெல்லாம் காதலுக்கு எந்த வகையிலும் உதவாது.
உருக்குலைந்து
கிழிந்து போனதாக உள்ள உலகில் ஆசையும், மகிழ்ச்சியும் முக்கியமான அங்கங்களாக உள்ளன.
தினசரி வாழ்க்கையில் காதல் இல்லையென்றால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. வாழ்க்கையில்
அழகைப் பார்க்கவில்லையென்றால், உங்கள் வாழ்வில் காதல் இல்லை. இங்கு வெளிப்புறமாக பார்க்கும்
அழகை கூறவில்லை. அதாவது அழகான மரம், புகைப்படம், கட்டிடம், பெண் ஆகியவை நான் கூறிய
அழகில் அடங்காது. உங்கள் மனமும், புத்தியும் மட்டும்தான் அழகை எளிதாக உணரும்.
காதலே இல்லாமல்
வாழ்க்கையில் உள்ள அழகைக் காண முடியாது. அதை நீங்களே அறிவீர்கள். காதல் இல்லாமல் சமூகத்தை
மேம்படுத்துவது, வறுமையை ஒழிப்பது ஆகியவற்றை நீங்கள் செய்வது இன்னும் குளறுபடியான சூழலையே
உருவாக்கும்.
உங்களின்
மனம், இதயம் என இரண்டிலும் காதல் இல்லாமல்
இருப்பதுதான் மோசமான, வறுமையான நிலை. காதலும், அழகும் இருக்கும்படியாக உங்கள் வாழ்க்கை
அமைந்தால், நீங்கள் செய்யும் செயல்கள் சரியானவையாக இருக்கும். இப்படி இருக்கும்போது
செயல்களை நீங்கள் எந்த வரிசையில் செய்தாலும் சரிதான். உங்களுக்கு எப்படி காதலிக்கவேண்டும்
என தெரிந்தால், என்ன பிடித்திருக்கிறது என தெரிந்தால் அதுவே எல்லா பிரச்னைகளையும் தீர்க்க
உதவும்.
இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம். ஒழுங்கு,
சிந்தனை, பலவந்தம், நூல், ஆசிரியர், தலைவர் ஆகியோர் இல்லாமல் மனிதன் இயங்க முடியுமா?
இதைப் பற்றி
பேசும்போது எனக்கு மற்றொரு விஷயமாக காரணம் இல்லாத வேட்கை நினைவுக்கு வருகிறது. பொறுப்பு,
பிணைப்பு ஆகியவற்றுக்கான முடிவு வேட்கை அல்ல. வேட்கை என்பது காமம் அல்ல. வேட்கை பற்றி
அறிந்துகொள்ள முடியாத மனிதன், காதலைப் பற்றியும் அறிந்துகொள்வது கடினம். சுயம் அழிந்தால்தான்
காதல் பிறக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக