நண்பகலில் ஜேம்ஸின் உடலுக்குள் புகும் ஆவி - நண்பகல் நேரத்து மயக்கம் - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி

 



நண்பகல் நேரத்து மயக்கம் - மலையாளம்








நண்பகல் நேரத்து மயக்கம்

மலையாளம்

இயக்கம் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி


வேளாங்கண்ணி கோவிலுக்கு போய்விட்டு கேரளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு நபர், திடீரென வேனில் இருந்து இறங்கி ஊருக்குள் சென்றுவிடுகிறார். அங்குள்ள வீட்டில் வாழ்ந்து இறந்துபோன ஒருவராக (சுந்தரம்) மாறி வேலை செய்கிறார். உண்மையில் அவருக்குள் என்ன நடந்தது, ஏன் கிராமத்திலுள்ள வீடு ஒன்றுக்கு சென்று தங்குகிறார் என்பதே கதை.

ஆன்மா, இன்னொருவரின் உடலுக்குள் இறங்கி தனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதுதான் கதை.

இயக்குநர் லிஜோ, சிஜி ஏதும் இல்லாமல் மனிதர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறார். இதனால் நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படமாக மாறுகிறது.

படத்தின் கதை புதுமையானது என்று எல்லாம் கூறிவிட முடியாது. இந்து மதத்தில் உள்ள இறந்துபோனவர் மீண்டும் இன்னொரு உடலில் புகுந்து ஆசையை நிறைவேற்றிக்கொள்வதுதான் படத்தின் மையக்கதை. ஆனால் அதை லிஜோ கையாண்ட விதம் முழுக்க மனிதர்களின் உளவியல் சார்ந்த தன்மையில் என்பதுதான் படத்தை நேர்த்தியான படமாக மாற்றியிருக்கிறது.

சந்தைக்கு சென்ற கணவர் காணாமல் போய்விடுகிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து அதே நடை உடையுடன் இன்னொரு மனிதர் வருகிறார். அதை மனைவி எப்படி எதிர்கொள்வாள் என்பதை குழலி பாத்திரம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இவருக்கு, வசனங்கள் அதிகம் கிடையாது. முடிந்தவரை அனைத்தையும் காட்சி ரீதியாகவே சொல்ல முயன்றிருக்கிறார்கள். கண் பார்வையற்றவரான எப்போதும் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் கருப்புக் கண்ணாடி அம்மா, பிடிவாதம் பிடிக்கும் பாப்பா முத்து, சோகமே உருவாக இருக்கும் மனைவி குழலி, மகன் இல்லாததால் சோர்ந்து போன அப்பா பழனி என தமிழ்க்குடும்பத்தின் பாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாக உள்ளன. இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்றே யாரும் கூறிவிட முடியாது. குழலி ஒரு இடத்தில் மட்டும்தான் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்துவார். அதுவும் அற்புதமான காட்சி என்று கூறலாம்.

படத்தில் பின்னணியில் வரும் தமிழ்ப்படங்களின் வசனங்கள், பாடல், இசை  என அனைத்துமே சம்பவங்களுக்கு பொருத்தமான எதிர்வினையாக உள்ளது. மம்மூட்டி நடிக்கும் படத்தில் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்து வெற்றிபெற்றிருக்க இயக்குநர் லிஜோ உண்மையில் ஆச்சரியமான ஆள்தான். படத்தின் பின்னணியை ஒருவர் கவனித்தாலே காட்சிகளைப் புரிந்துகொள்ள முடியும். நிலப்பரப்பை காட்டும் காட்சிகள் அற்புதமாக உள்ளன.

குடும்ப வாழ்க்கை, அதன் பிரச்னைகள், போதாமைகள் இதில் சிக்கி மனித மனம் படும் வேதனை, இயலாமையுடன் நிற்கும் சூழல், பாச உறவுகளோடு சேர்ந்திருக்க முடியாத குற்றவுணர்ச்சி ஆகியவற்றை காட்சிகள் வழியாகவே படம் பார்வையாளர்களுடன் பேசுகிறது. இறுதியாக ஜேம்ஸ் ஏறிச்செல்லும் வேனின் எழுதப்பட்டுள்ள வாசகமே இதற்கு சாட்சி.

சிறப்பான அனுபவம்

கோமாளிமேடை டீம்

Initial release: 12 December 2022
Cinematography: Theni Eswar
Production companies: Mammootty Kampany; Amen Movie Monastery
Screenplay by: S. Hareesh

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்