பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களால் நீதி வழங்கும் அதிகாரி- கிறிஸ்டோபர்

 





கிறிஸ்டோபர் - மம்மூட்டி










கிறிஸ்டோபர்

இயக்கம் - பி உன்னிகிருஷ்ணன்

மம்மூட்டி, அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, வினய் ராய்

இளம்பெண், அவளது தங்கை இருவரும் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் பதிவாகிறது. புகாரில் காணாமல் போன பெண், வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். அவள் உணவுசேவை வழங்கும் வேலையை செய்து கொண்டு கல்லூரி படித்துகொண்டிருந்த பெண்.இந்த வல்லுறவு சம்பவம், கேரள மாநிலமெங்கும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்த, முதல்வரே கிறிஸ்டோபரை வழக்கு விசாரணைக்கு நியமிக்கிறார். இவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய வழக்குகளுக்கு மட்டும் எடுத்து விசாரிக்கும்  ஐபிஎஸ் அதிகாரி.

விசாரணையில் பணக்கார தொழிலதிபரின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து வேனில் வைத்து இளம்பெண்ணை வல்லுறவு செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறான். அந்த வழக்கு விசாரணையை கிறிஸ்டோபர் அமைதியாக தனியொரு அறையில் அமர்ந்துகேட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு காவலர்கள், குற்றவாளிகளை குற்றம் நடந்த இடத்திற்கு கூட்டிச்சென்று எப்படி குற்றம் செய்தனர் என்பதை நடித்துக் காட்டச் சொல்கின்றனர். அங்கு தப்பிச்செல்லும்படி காவல்துறையினர் கண்சாடை காட்ட பணக்கார குற்றவாளியும், நண்பர்களும் தப்பி ஓட முயல்கின்றனர். உடனே அவர்கள் மீது கிறிஸ்டோபரின் துப்பாக்கித் தோட்டாக்கள் அடை மழையாக பொழிகின்றன. அந்த இடத்திலேயே நீதி இன்ஸ்டன்டாக வழங்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் கிறிஸ்டோபரை பாராட்டித் தள்ளுகின்றன. பெண்ணியவாதிகள் கிறிஸ்டோபர்தான் நீதியின் காவலன் என டிவி விவாதங்களில் பேசுகின்றனர். நீதியை தனிநபர் கையில் எடுக்க கூடாது என சில கருத்துகளும் வருகின்றன. நெருக்கடிகள் வர வேறுவழியின்றி மாநில முதல்வர், கிறிஸ்டோபர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இப்போது  விசாரணை அதிகாரிகளின் ஆராய்ச்சிபடி கிறிஸ்டோபர் யார் என பார்வையாளர்கள் அறியத் தொடங்குகின்றனர்.

படம் , என்கவுன்டர் செய்யும் காவல்துறை அதிகாரிகளை நேரடியாகவே ஊக்குவிக்கிறது. புகழ்ந்து போற்றுகிறது. சில இடங்களில் சமாதானத்திற்கு நீதியை தனிநபர் கையில் எடுக்க கூடாது என்று சொன்னாலும், மம்மூட்டி துப்பாக்கியை எடுப்பதும் இடது கையால் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கொல்வதையும் பல்வேறு காட்சிகளாக அழகியலாக காட்டுகிறது. அதிலும் கிறிஸ்டோபருக்கான பிஜிஎம் பலரையும் ஈர்க்க கூடியது.

 

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் -  இதுதான் படத்தின் மையக்கதை. கிறிஸ்டோபர் நம்பும் கோட்பாடும் கூட.

‘’170 க்கும் மேல் ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும்போது மக்கள் என்னை மட்டும் எதுக்கு பாராட்டுறாங்க…. குற்றத்திற்கு தண்டனை வாங்கித் தரமுடியும்னு என்மேல நம்பிக்கை வச்சிருக்காங்க. அந்த நம்பிக்கையை நான் கொடுத்துருக்கேன். ’’

‘’பாதிக்கப்பட்டவங்களுக்கும் சில உரிமைகள் உண்டு சார்’’

‘’கம்யூனிஸ்டான ஒருத்தரே மக்களுடைய கண்ணீரை புரிஞ்சுக்க முடியலீன்னா, வேறு யாரு அவங்களைப் புரிஞ்சிப்பாங்க?’’

இப்படியெல்லாம் கிறிஸ்டோபர் படத்தில் முதல்வர் முன்னிலையில் வசனம் பேசி பதிலடி கொடுக்கிறார். அங்கு உள்துறை அதிகாரி, கிறிஸ்டோபரின் வழக்குகளை விசாரிக்கும் பெண் காவல்துறை அதிகாரி, மூத்த காவல்துறை அதிகாரி ஆகியோர் இருக்கின்றனர். நீதித்துறை, காவல்துறை என இரு அமைப்புகளுமே களங்கப்பட்டு விட்டன, கறைபடிந்துவிட்டன. எனவே, பெண்களுக்கான வல்லுறவு, குற்றங்கள் என்றால், நீதி என் கையில் உள்ள துப்பாக்கித் தோட்டாக்கள் மூலம் கிடைக்கும் என கிறிஸ்டோபர் நம்புகிறார். அதைதான் படம் நெடுக செய்கிறார். கட்டப்பஞ்சாயத்து செய்து வழங்கும் நீதியைத்தான் கிறிஸ்டோபர் தருகிறார். குற்றவாளி யார், பின்னணி யார் என முழுக்க ஆராய்ந்து விசாரித்து தீர்க்கமாக இடது கையில் துப்பாக்கியை எடுத்து எந்த உணர்ச்சியும் இல்லாமல் சுடுகிறார்.

கிறிஸ்டோபர் படத்தின் தலைப்பில் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்து கை ஒன்று இருக்கும். அதுதான் படத்தின் அடிநாதமே.. பெண்களை யாராவது ஒருவர் காயப்படுத்தினால், களங்கப்படுத்தினால் கிறிஸ்டோபர் தனது ரிவால்வரை எடுத்து சுட்டுவிடுவார். இதனால் அவர் குடும்ப வாழ்க்கை, நட்பு என நிறைய விஷயங்களை இழக்கிறார். எதனாலும் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. தன்போக்கில் வழக்குகள், என்கவுன்டர், துறை ரீதியான விசாரணை, பணி இடைநீக்கம், மீண்டும் வேலையில் சேருதல் என இப்படித்தான் அவரது பணி வாழ்க்கை உள்ளது. நியாயத்தை அவரே வகுத்துக்கொண்டு இயங்குகிறார். அவரின் மிட்சுபிஷி பஜேரோ கார் வருவதைப் பார்த்தாலே மரணக்காட்சி வரப்போகிறது என தீர்மானித்துவிடலாம். அந்தளவு படத்தில் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளுகிறார்.

துப்பாக்கியை கையில் எடுக்க அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவமே காரணமாக இருக்கிறது. அந்த சம்பவத்தில் ஏற்பட்ட நினைத்துப் பார்க்க முடியாத வலியை தன் மனதில் எப்போதும் சுமந்துகொண்டே இருக்கிறார். உண்மையில் அவருக்கு மனநல தெரபி ஏதேனும் கொடுத்திருந்தால் பாதிப்பை சற்று குறைத்திருக்கலாம்.  கடந்த பிரச்னையில், வெற்றிவேல் என்ற காவல்துறை அதிகாரி தனது துப்பாக்கியால் குற்றவாளிகளைக் கொல்கிறார். அதனால் கிறிஸ்டோபர் சற்று சமாதானம் ஆகிறார்.  இதனால் கிறிஸ்டோபர் தானாகவே உழைத்து படித்து ஐபிஎஸ் தேர்வாகிறார். இவரது பணியின்போது கூடவே இருக்கும் நண்பராக இஸ்மாயில் என்பவர் வருகிறார். இடையில் வேலையின்போது அவர் குற்றவாளிகளால் கொல்லப்பட, ஆதரவற்ற அவரது மகள் அமினா இஸ்மாயிலை சிறுமியாக இருக்கும்போது வளர்ப்பு தந்தை போலிருந்து வளர்க்கிறார். அமினா, வழக்குரைஞராக வேலை செய்கிறார். அவளுக்கு நேரும் ஒரு பாதிப்பு கிறிஸ்டோபரை மீண்டும் குலைத்துப் போடுகிறது. அமினாவுக்கு நேர்ந்த பாதிப்புக்கு கிறிஸ்டோபர் எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதிக்கதை.

படம் நெடுக கிறிஸ்டோபராக வரும் பாத்திரம்(மம்மூட்டி) அதிகம் பேசுவதில்லை. அப்படி பேசும் வசனங்கள் கூட ஒரு பக்கத்தில் அடங்கிவிடும். முகமே உணர்ச்சிகளை உள்ளடக்கிய இயல்பில் உள்ளது. அவரே வில்லனிடம்  ஒருமுறை சொல்லுகிறார். ‘’எனக்கு உருவாக்கத் தெரியாது. என் ஒரே வேலை அழிப்பதுதான் சம்ஹார மூர்த்தி’’ என பன்ச் பேசுகிறார்.

உண்மையில் கிறிஸ்டோபர் பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்தவர்களை மட்டும் அழிக்கவில்லை. நீதித்துறை என்ற ஒன்றையே அழிக்கிறார். வளர்ப்பு மகளான அமினா கேட்டுக்கொண்டதற்காக இறுதி வழக்கை மட்டும் சட்டப்படி அணுக முடிவு செய்கிறார். ஆனால் அதிலும் வல்லுறவு குற்றவாளியை தானே கண்டறிந்து கடத்தி வந்து தூக்கிலிடுகிறார். அப்போது மகளுக்கு செய்து கொடுத்த சத்தியம் என்னவானது?

அவரது நண்பர் அபிலாஷ், திரிமூர்த்தியின் மனைவி இறப்பு பற்றி   பேசும் மருத்துவர் என இருவரிடம் கிறிஸ்டோபர் பேசும் வசனங்கள் நன்றாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. லாரிகளுக்கு இடையில் வரும் சண்டைக்காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் பல்வேறு காட்சிகளை எளிதாக யோசித்து அடுத்து இதுதானா என புரிந்துகொள்ள முடிகிறது. அமலாபால் வழக்கைத் தொடங்கும்போதே கிறிஸ்டோபரை குற்றவாளியாக்க வேண்டும் என சக அதிகாரிகளிடம் கூறுகிறார். அப்போதே அவர் இறுதியில் மனம் மாறுவார் என்பதை யூகிக்க முடிகிறது. அறிக்கை சமர்பிக்கும்போது உள்ள ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது.

படத்தில் சினேகாவிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு மிக சொற்பம். ஆனால் படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர்கள் தேர்வு நன்றாக உள்ளது. எல்லோருமே தங்கள் பங்களிப்பை நன்றாக நடித்து நேர்செய்திருக்கிறார்கள்

கண்கள் மூடியுள்ள தராசு ஏந்திய நீதிதேவதையை நோக்கி சுடுகிறார் கிறிஸ்டோபர்

கோமாளிமேடை டீம்

Initial release: 9 February 2023
Director: B. Unnikrishnan
Budget: ₹18.7 crore
Cinematography: Faiz Siddik
Language: Malayalam
Music by: Justin Varghese

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்