யாரும் புரிந்துகொள்ள முடியாத வினோதமான அடியாள் - ஊசரவல்லி - டோனி

 







ஊசரவல்லி - டோனி

ஊசரவல்லி - டோனி 






ஊசரவல்லி

(தெலுங்கு)

டோனி (ஜூனியர் என்டிஆர் )

இயக்குநர் - சுரேந்தர்ரெட்டி

 

ஊசரவல்லி படத்தில் வரும் டோனி பாத்திரத்தை யாருமே புரிந்துகொள்ள முடியாது. இதற்காகவே முரளி சர்மா, பிரபாஸ் சீனுவின் தொடக்க காட்சியை வைத்திருக்கிறார்கள். இதில் டோனி என்பவன் எறும்புக்கும் தீங்கு நினைக்காதவன். அதேசமயம் தனக்கு தேவைப்படும் விஷயம் கிடைக்க என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய, அதற்கு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடியவனாக அறிமுகப்படுத்தி பேசுவார். படத்தின் தெலுங்கு தலைப்பின் பொருள் பச்சோந்தி. ஜூனியர் என்டிஆரின் சிறந்த அறிமுக காட்சிகளில் ஊசரவல்லியும் ஒன்று.

டோனியைப் பொறுத்தவரை தனக்கு காரியம் ஆகுமென்றால் எப்படியென்றாலும் மாறக் கூடியவன். விதிகளை அழித்து மீண்டும் எழுதினாலும் அதையும் அழித்துவிட்டு தனக்கு பிடித்ததுபோல காரியங்களைச் செய்பவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாத  குணம் கொண்டவன்.

டோனி, கூலிக்கு பிறரை அடித்து மண்டையைப் பிளக்கும் அடியாள். மும்பையில் வாழ்ந்து வந்தவரின் தந்தையும் டான் அந்தஸ்தில் இருந்தவர். அவர் தந்தை எதிரிகளால் தாக்கப்பட்டு இறக்கும்போது, ‘’காசு வாங்கிக்கிட்டு நெறைய மோசமான விஷயங்களை செஞ்சுட்டோம். இனி, நமக்கு நல்லப் பெயர் வரும்படியான விஷயங்களை செய்.’’ என்று சொல்லிவிட்டு இறந்துபோகிறார். இதனால் டோனி அப்பாவிற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்ற அப்பாவின் வழியிலேயே முயல்கிறார்.

அதாவது, அடி, உதை. கொலை.  அப்போதுதான் நிகாரிகா என்ற  இளம்பெண் வந்து தனக்கு ஒரு உதவிவேண்டுமென கேட்கிறாள். அதற்கு டோனியும் ஒப்புக்கொள்கிறான். ஆனால் பிறகு, அந்த பெண் அங்கே இருந்து போய் விடுகிறாள். டோனிக்கு இருக்கும் ஒரே நோக்கம். நிகாரிகா என்ற அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றி அவளின் பழிக்குப்பழி காரியத்தை செய்து முடிப்பதுதான். அதுதான் அவன் பணம் இல்லாமல் செய்ய ஒப்புக்கொண்ட நல்ல காரியம். ஏறத்தாழ அவன் அப்பா செய்யச் சொன்ன நற்செயல். இதெல்லாம் ஃபிளாஷ்பேக்கில் வரும் காட்சிகள் என்பதால் நாம் அதையெல்லாம் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை.

டோனி, நிகாரிகாவுக்கு அறிமுகமாகி அவளை காதலிக்க நினைக்கிறான். ஆனால் அப்போது அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். தில்லாலங்கடி அமைச்சரின் மகன்தான், காதலன். அதைப்பற்றியெல்லாம் டோனி கவலையே படுவதில்லை. உண்மையில் நிகாரிகாவை விட அவளின் தோழி சித்ராவுக்கு அவனைப் பற்றி புரிகிறது. அவன் நிகாரிகாவை அதீதமாக காதலிக்கிறான் என்பதை எளிதாக உணர்கிறாள். இவளது பாத்திரம் படத்தில் முக்கியமானது. படத்தின் இறுதிக்காட்சியில் டோனியிடம் முக்கியமான உண்மையைச் சொல்லிவிட்டு இறக்கிறாள். தமிழில் தியாக நண்பர்களாக வரும சார்லி, சந்திரசேகர் வகையறாதான்.

தனக்கு யாரிடம் காரியம் ஆகவேண்டுமென்றாலும், அதற்கேற்றப்படி மிரண்டு அல்லது மிரட்டி அல்லது அதட்டி அல்லது அடிபணிந்து ஒன்றை செய்பவன்தான் டோனி. பார்க்க வெளியே வேடிக்கையாக தெரிபவன், உள்ளுக்குள் ஒரு கூட்டத்தை அழிக்கும் லட்சியத்தை மனதில் வைத்திருக்கிறான். அதற்காக, சர்க்கார் என்ற கோமாளி ரவுடிகள் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறான். முதலில், இந்த கூட்டத்தை நேரடியாக சந்திக்க வருபவன், ‘’தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால், முதலிலேயே அவர்களை ஒழித்து கட்டிவிடுகிறேன்’’ என பேசியபடியே பையில் இருந்து பேஸ்பால் மட்டைகளை எடுத்து கேங்கை வெளுக்க ஆரம்பிக்கிறான். அடிவாங்குபவர்களுக்கு ஏன் அடிவாங்குகிறோம் என்றே தெரிவதில்லை.

இவர்களை அடித்து பயப்படுத்துவதே டோனிக்கு முதல் பணி. பிறகு, நிகாரிகாவுக்கும், சித்ராவுக்கு  தனது வீட்டைக் கொடுத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். டோனி, சர்க்கார் கேங்கின் வீட்டில் தங்குகிறான். பிறகு ரவுடி சிவாவுடன் சென்று சர்க்கார் அல்லது ஜெ.பி என்ற ரவுடி தலைவரைச் சந்திக்கிறான் டோனி. முதல் சந்திப்பிலேயே அவரை கேலி கலாய் செய்து அப்போது நகரில் பிரபலமான ரவுடியிடம் பேச வைத்து சவால் விடுக்க விடுகிறான்.

 இந்த கோமாளி ரவுடிகளைப் பயன்படுத்தி, தனது லட்சியத்தை அடையத் தொடங்குகிறான். அதேநேரம் நிகாரிகாவுக்கு உள்ள நினைவிழப்பு பிரச்னையைப் புரிந்துகொள்கிறான். இதனால், அவளை காதல் என்ற பெயரில் சுரண்ட நினைக்கும் அமைச்சரின் மகன் யாரென்று அவனது வாயாலே சொல்ல வைக்கிறான்.

 ஒருவர் நம்பும் அனைத்து விஷயங்களையும் பொய் என ஒருவர் சொன்னால் என்னாகும்? உண்மையைப் புரிந்துகொள்பவர் அந்த உண்மையை தன்னிடம் சொன்னவரை நம்பத் தொடங்குவார். இந்த உளவியல் தியரிப்படி நாயகி நிகாரிகா, டோனியை விரும்புவதாக சொல்கிறாள். ஆனால் டோனி, சிம்பிளாக ‘’நேத்து ராக்ஸை லவ் பண்றதா சொன்ன, இன்னைக்கு என்னை லவ் பண்றதாக சொல்ற, இதே மாதிரி உறுதியா இருந்து நாளைக்கு சொன்னா பார்ப்போம்’’ என கிண்டல் செய்துவிட்டு போய்விடுகிறான். டோனி இப்படி பேசியது, நிகாரிகாவை உடைத்துப் போட்டுவிடுகிறது.

அமைச்சரின் மகனை டோனி சீண்டுவது முக்கியமான காட்சி. அவனது நோக்கமே அவர்களது கூட்டத்தை முழுமையாக அடையாளம் கண்டுபிடித்து அழிப்பதுதான். இப்படி சண்டை போடும் இடத்தில் கூட கோமாளி ரவுடிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மாட்டிக்கொண்டு அனைத்து விஷயங்களையும் பார்ப்பார். ஆனால் உண்மையை சர்க்காரிடம் சொல்ல முடியாது. டோனி கொடுத்த அதிர்ச்சியில் அவருக்கு பேசும் திறன் போய்விடும்.

ஊசரவல்லி படத்தின் காமெடியை எப்போது பார்த்தாலும் நன்றாக இருக்கும். சீரியசான காட்சியில் கூட காமெடி நடிகர்களை வைத்து காட்சிகளின் அழுத்தம் குறையாமல் பார்த்துக்கொள்வது கடினமான விஷயம். அதை சுரேந்தர் ரெட்டி சிறப்பாக செய்திருப்பார்.

படத்தை ஜூனியர் என்டிஆர் ரசிகர்களும் புரிந்துகொள்ளவில்லை. எனவே, படம் நினைத்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால் படத்தின் கதை, திரைக்கதை, இசை என பல்வேறு விஷயங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும். ஆனால் நாயனுடைய பாத்திர வடிவமைப்பில் உள்ள சில பற்றாக்குறைகள் டோனியை  முழுமையாக உள்வாங்கிக்கொண்டு கதையை புரிந்துகொள்ள முடியாமல் போகச்செய்துவிட்டன.  ஊசரவல்லி படத்தில் உள்ள பிரச்னைகளை அறிய யூட்யூபைத் தட்டினால் நிறைய விவரங்கள் கிடைக்கும்.

 

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்