செய்யும் அனைத்து விஷயங்களிலும் கிக் தேடும் ஆள்- கல்யாண் - கிக் 1 - இயக்குநர் சுரேந்தர் ரெட்டி

 











கல்யாண் -கிக் (தெலுங்கு)

ரவிதேஜா

இயக்குநர் – சுரேந்திர ரெட்டி



வாழ்க்கையை சாதாரணமாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் சாதாரண வாழ்க்கைதான் என்று விடாமல்,  அதை சற்றேனும் சாகசமாக வாழ நினைக்கும் ஆட்கள் சிலர் உண்டு. தேடுவதற்கு சற்று அரிதானவர்கள்தான். ஆனால் கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் கல்யாண்.

கல்யாணைப் பொறுத்தவரை சுவாரசியமாக சவாலாக இருந்தால்தான் ஒன்றைச் செய்வது.. இல்லையென்றால் அதை தூக்கிப் போட்டுவிட்டு ஜாலியாக அடுத்த வேலைக்குப் போய்விடுவதுதான் பிடிக்கும். பொதுவாக கிணற்றில் மூச்சை தம் கட்டி உள்ளே இருப்பது, சைக்கிளில் கைவிட்டு ஓட்டுவது என சில விஷயங்களை பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால் கல்யாண் வேறுபடுவது எங்கே?

வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ச்சிலும் சாகசம் இருக்கவேண்டும் என நினைப்பதுதான் வேறுபாடு. பார்க்க மற்றவர்களுக்கு திகிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் கல்யாணுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது. உளவியலைப் பொறுத்தவரை இந்த வகையில் சாகச அனுபவங்களை நாடி குற்றங்களைச் செய்பவர்களை மனநலகுறைபாடு கொண்ட நோயாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். கிக் படத்தில் கல்யாணை சாகச அனுபவங்களை சமூகத்திற்கு பயன்படும்விதமாக மாற்றிக்கொண்டவராக காட்டியிருப்பார்கள். அப்படி இப்படி என காட்சிகளை மாற்றி இந்தியா, மலேஷியா என கதை மாறினாலும் ராபின்ஹூட் கதைதான் இது. ஆனால் இதில் வித்தியாசம் என்பது கல்யாணின் வேடிக்கையா, சீரியசா என தெரியாத கேரக்டர்தான்.

படத்தைப் பார்க்கிற பார்வையாளர்களுக்கும் கல்யாணின் வாழ்க்கையில் உள்ள பாத்திரங்களுக்குமே அவர் பரம ‘போக்கு’ என தெரியாது. இந்த ஒன்றும் புரியாத இயல்புதான் படத்தின் காமெடியை எப்போதும் யூட்யூபில் தேடிப் பார்க்கலாம் என நம்பிக்கையைத் தருகிறது.

படத்தின் தொடக்கத்தில் எம்எல்ஏ கனகத்தின்  டிரைவராக உள்ள முஸ்லீம் நண்பனுக்கு கல்யாணம் கோவிலில் நடக்கவிருக்கிறது. அதற்காக, எம்எல்ஏ பெண்ணின் தோழி திட்டம் போட்டு கொடுக்கிறாள். இடையில் தலையிடும் கல்யாண், அதே ஐடியாவை அப்படியே சொல்லி, தோழியை கிண்டல் செய்கிறார். பிறகு, எம்எல்ஏவுக்கு அவளது மகள், கோவிலில் திருமணம் செய்யும் தகவலை போனில் சொல்லுகிறார். பிறகு நண்பன், மணப்பெண், மணப்பெண்ணின் தோழி ஆகியோரை எம்எல்ஏ ஆட்கள் துரத்த அவர்களோடு சேர்ந்து எதுவும் நடக்காதது போல ஓடுகிறான். ஓடும்போதும் அடியாட்களுக்கு மணப்பெண்ணைப் பிடிக்க வழி சொல்லுகிறான். இத்தனையும் தாண்டி மணப்பெண்ணும், மாப்பிள்ளையும், கோவிலை அடைந்துவிடுகிறார்கள். அங்கு மணப்பெண்ணுக்கு கட்ட தாலி வேண்டுமே?  அதை கல்யாண் வைத்திருக்கிறான். கீழே செல்பவன், கோவிலுக்கு கீழே எம்எல்ஏ ஆட்கள் இருப்பதைப் பார்த்து மேலே வரச்சொல்லி திட்டுகிறான். அவர்கள் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வந்தவுடன் தாலியை தூக்கி வீசி நண்பனை தாலி கட்டச்சொல்கிறான். அவனும் பதற்றத்தில் தன் கையில், மணப்பெண்ணின் கையில்  கட்டி இறுதியாக கழுத்தில் கட்டுகிறான். அப்போது எம்எல்ஏ கனகம் சொல்லும்போதுதான் அனைவருக்கும் விவகாரம் தெரிகிறது, அவர்களை வரச்சொல்லி தகவல் கொடுத்தது கல்யாண்தான் என்று. நண்பன் ‘’ஏண்டா இப்படி?’’ எனக் கேட்கும்போது கல்யாண் சொல்லும் வசனம்தான் அவனது முழுப்பாத்திரத்தின் குறிப்புமே….

செய்யும் அனைத்து விஷயங்களிலும் சாகச அனுபவம் இருக்கவேண்டும் என நினைக்கும் கல்யாண், தன் வாழ்க்கையை முழுமையாக வாழ்பவன். அதாவது, அவனுக்கு பிடித்த வகையில்…. நீச்சல் கற்கும்போது மூழ்காமலிருக்க அணிக்கும் ரப்பர் மிதவையைக் கூட தூக்கிப் போட்டுவிட்டு நண்பனின் காலைப் பிடித்து தன்னை காப்பாற்றிக்கொண்டு பிறகு தானாகவே எந்த பாதுகாப்பு உபகரணங்களுமுமே இல்லாமல் நீச்சல் கற்கிறான். இதனால், கல்யாணின் அப்பா முதலில் மிரள்கிறார். பிறகு அவன் அப்படித்தான் என புரிந்துபோக அவனை எதுவும் சொல்லாமல் அவன் வழியிலேயே அவரும் போகிறார்.

நாம் வாழ்வில் நிறைய சமரசங்களை செய்கிறோம். உண்மையில் அதை விரும்பி செய்கிறோமா என்றால், இல்லை. நிறைய விஷயங்களை பொருளாதாரம், சமூக அழுத்தம் சார்ந்து செய்கிறோம். இந்த வகையில் கல்யாண், தனக்கு பிடித்தாற் போல வாழ்கிறான். பின்னாளில் தனது விருப்பம் என்பதை பிறருக்கு சற்று சந்தோஷம் இருக்கும்படி மாற்றிக்கொள்கிறான். அது அவனுக்கு சாகச அனுபவத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது.

சவால்களை எப்பாடு பட்டாவது செய்து முடிக்கும் வேகம் கல்யாணுக்கு உண்டு. இடையில் குறுக்கிடும் காதல் சுவாரசியமாக இருக்க அதிலும் வேடிக்கையாக ஈடுபடுகிறான். மற்றபடி அவனது வாழ்க்கை என்பது தனக்கு நேருக்கு நேராக சவால் விடும் விஷயங்களை செய்வதுதான்.

கிக் படம் பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையான வழியில் அறுவைசிகிச்சைக்கு பணமின்றி பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி பேசியது. இதனால் படம் பொழுதுபோக்கு என்பதை முக்கியமாக கொண்டாலும் நாம் கவலைப்படவேண்டிய சமூக விஷயத்தைப் பற்றியும் நுட்பமாக சொல்லிவிட்டது. இந்த படத்தில் கதை, திரைக்கதை சிறப்பாக இருந்தது. கல்யாண் பாத்திரத்தில் நடித்த ரவிதேஜாவின் ஜாலி, கேலியான நடிப்பும் பிரம்மானந்தத்தின் திருமணம் தாண்டிய பெண்ணாசையும், அலியின் மனநல மருத்துவர் வேடமும் படத்தை தொய்வடையாமல் பார்த்துக்கொண்டது.

சாய் தமன் கண்டசாலாவின் இசை படத்தின் முக்கியமான கட்டங்களுக்கு செம ஹைப் கொடுத்தது. ரவிதேஜாவின் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு தமன் இசையமைத்து நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார். தமன், ரவிதேஜாவின் காம்போவில் மிரப்பகாய், பவர் ஆகிய படங்கள் முக்கியமானவை.

கிக் வெற்றிபெறவே, அதன் இரண்டாம் பாகத்தை வேகமாக எடுத்தனர். தெலுங்கு நடிகர் கல்யாண்ராம் தயாரித்தார். ஆனால், படத்தின் முதல் பாகத்தில் இருந்தளவு உணர்ச்சிகரமான விஷயங்கள் இல்லை. படமும் பெரும்பகுதி வட இந்தியா பக்கம் நகர்ந்துவிட்டது. படத்தில் ரவிதேஜா அனைத்து விஷயங்களிலும் கம்ஃபோர்ட் தேவை என்று கறாராக நடித்திருப்பார். இதிலும், காமெடிக்கு பிரம்மானந்தம் இருந்தும் நினைத்த அளவுக்கு காமெடி எடுபடவில்லை.  

இயக்குநர் சுரேந்தர் ரெட்டி


 

Release date: 8 May 2009 (India)
Director: Surender Reddy
Sequel: Kick 2
Music director: Thaman S
Distributed by: Suresh Productions
Directed bySurender Reddy
Screenplay bySurender Reddy
Abburi Ravi (Dialogues)
Story byVakkantham Vamsi

கருத்துகள்