உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

 















இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள்.

வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு  பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே?

பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை  சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர்.

வாண்டர் வுமனியா ட்ராவல் என்ற நிறுவனம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் அடிப்படை லட்சியமே, பெண்கள் தனியாக பயணித்தால் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதுதான். குழுவாக சென்றால் கூட அதிலும் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என குழு குழுவாக பிரிவதும், பிறரை முன்முடிவுகளோடு அணுகுவதும் இயல்புதானே? தனியாக சென்றால் உங்களின் விமர்சகர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். அதனால் சமூக அழுத்தம் குறையும். எனவே, தனியாக பயணிக்க நிறைய பெண்கள் விரும்புகிறார்கள்.

தன்னம்பிக்கை நிறைந்தவர்களால் மட்டும்தான் தனியாக பயணிக்க முடியும். இப்போது, இப்படிப்பயணிக்கும் பெண்களுக்கென பல்வேறு சேவைகளை வழங்குபவர்களும் உருவாகி வருகிறார்கள்.

பெங்களூருவைச் சேர்ந்த நிகிதா தாஸ், மார்க்கெட்டிங் துறையில் பல்வேறு சவால்களை, அழுத்தங்களை சமாளித்து 13 ஆண்டுகள் வேலை செய்தார். இறுதியில் போதுமடா சாமி என வேலையை விட்டு விலகினார். இவர் தனியாக மைசூருக்கு சென்று மூன்று மாத அஷ்டாங்க யோகா வகுப்பில் சேர்ந்திருக்கிறார். ‘’நான் இதுவரை செய்ய நினைத்து செய்யமுடியாமல் போன விஷயங்களை செய்துகொண்டிருக்கிறேன். இனி அடுத்து 35 ஆண்டுகளுக்கு உழைக்கவேண்டும் எனில் இந்த இடைவெளி அவசியம். பல்வேறு இடங்களுக்குச் சென்று நிறைய விஷயங்களை அறியும்போது உலகை ஆழமாக அறியலாம்’’ என்றார். இவர் குறைவான தூரம்தான் சென்றிருக்கிறார். பல்வேறு மலைப்பாங்கான சுற்றுலா தளங்களுக்கும் மலையேற்றத்திற்கும் கூட பெண்கள் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

தனியாக சென்று உள்ளூர் மக்களைச் சந்தித்து அவர்களின் வழியாக அந்த நிலப்பரப்பின் கலாசாரத்தை அறிவது, உணவுகளை சாப்பிடுவது என பயணத்தை ரசிக்கிறார்கள் தனிப்பயணிகள். தனியாக பயணிப்பதால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படுமே என நிறையப்பேர் எண்ணலாம். அதையும் பெண்களே ஓரளவுக்கு திட்டமிட்டு ஹோட்டல், பயணம் செல்லும் இடங்கள் என திட்டமிட்டு வருகிறார்கள். தனியாக பயணிப்பது ஒருவகையில் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதோடு, வாழ்க்கை பற்றி யோசிப்பதற்கும் உதவுகிறது.  

வெளிநாட்டு பயணிகள சைக்கிள் அல்லது கால்நடையாக நடந்துசென்றுகொண்டிருப்பது இந்திய பெருநகரங்களில் சாதாரண காட்சி. ஆட்டோக்காரர்கள் வெள்ளைக்காரர்களை அதிக காசு வாங்க இழுக்கும் நாராசம் தவிர்த்து  வேறு யாரும் அவர்களை கவனிப்பதில்லை. அதுபோல, டெல்லி, பஞ்சாப், டேராடூன் ஆகிய இடங்களில் தனியாக பயணிக்கும், நடந்து செல்லும் பயணிகள் அதிகரித்து வருகிறார்கள். இதுபற்றிய காயக் எனும் தேடுபொறி நிறுவனம் செய்த ஆய்வில், தனியாக பயணம் செய்ய 38 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். சுதந்திரம், நெகிழ்வுத்தன்மை, தனிப்பட்ட கட்டுப்பாடு ஆகியவைதான் தனியாக பயணம் செய்ய பெண்களைத் தூண்டுகிறது.

பயணம் செய்வதற்கான காரணங்கள் என்னவென்று தேடியபோது, கனவுகள் 61%, சாகச அனுபவம் -55%, தன்னைத்தானே புரிந்துகொள்ள- 48%, கவலையிலிருந்து விடுபட – 43% என பல்வேறு விஷயங்கள் கலவையாக நமக்கு கிடைத்தன.

இதில், புதிய உணவுகளைத் தேடுவது, மனிதர்களை, நண்பர்களைத் தேடுவது என்ற காரணங்களும் உள்ளன. உலகம் முழுக்க சுற்றுலா பயணிகள் எப்படி பயணிக்கிறார்கள் என ஆய்வு செய்ததில், 58 சதவீதம் பேர் தங்கள் கனவு தேசத்தில் தாங்கள் மட்டும் தனியாக பயணிக்க வேண்டும் என்றே விரும்புவது தெரிய வந்தது.



தனியாக பயணிப்பதற்கான இடங்கள்

உள்நாடு

மணாலி, சிம்லா, தர்மஸ்தலா – இமாச்சல் பிரதேசம்

தவாங் – அருணாசல பிரதேசம்

ஆலப்பி – கேரளா

கோவா

பாண்டிச்சேரி

கச் - குஜராத்

உதய்பூர் – ராஜஸ்தான்

வாரணாசி – உத்தரப்பிரதேசம்

ஶ்ரீநகர் – லே- ஜம்மு காஷ்மீர்



வெளிநாடு

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம்

ஸ்விட்சர்லாந்து, மொரிஷியஸ், மாலத்தீவு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, ஜோர்டான், வியட்நாம், கம்போடியா




டிப்ஸ்

தங்கும் இடத்தில் முடிந்தவரையில் லிஃப்ட் அருகில் உள்ள அறையாக பார்த்து தங்குங்கள்.

பகல்நேரத்தில் சுற்றுலா செல்லுங்கள்.

தங்கும் இடங்களில் பயணிகள் இருந்தால், அவர்களோடு சேர்ந்து தங்க முயலுங்கள்.

செல்லும் இடங்களிலுள்ள கலாசாரத்தை உள்வாங்குங்கள், உணவுகளை உண்ணுங்கள்.

ஒரு இடத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு முன்னர் அங்கு செல்வது பற்றி ஆய்வு செய்யுங்கள்.


ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்