காதலிக்க, காதலிக்கப்பட செய்யவேண்டியவை - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜே கிருஷ்ணமூர்த்தி |
தென் தேர்
ஈஸ் லவ்
ஜே கிருஷ்ணமூர்த்தி
தமிழாக்கம்
எது காதல்
என்ற கேள்விக்கு பதிலைத் தேடி நாம் பயணிக்க
வேண்டும் என்றால் பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டுள்ள முன்மாதிரிகள், கருத்துகளை சற்று
தள்ளி வைக்கவேண்டும். வாழ்க்கையை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கும், அழிக்கும் விவகாரங்களையும்
விட்டு தள்ளிச் செல்ல வேண்டும்.
இப்போது,
காதல் என்று கூறும் தீப்பிழம்பை பற்றி கண்டறிவோம். உண்மையில் அதன் அர்த்தம் என்ன? இதை
அறிய முதலில் தேவாலாயம், நூல், பெற்றோர், நண்பர்கள், தனிப்பட்ட மனிதர்கள் ஆகியோர் கூறியுள்ள
விஷயங்களை ஒதுக்க வேண்டும். காதல் என்பதை நாமாகவே தேடி அடைய வேண்டும். காதல் என்பதை மனிதர்கள் பலநூறு வரையறை கொண்டு கூறமுடியும்.
காதலை நமக்கு பிடித்தது போல, குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்ட வகையில் உருவாக்கிக்
கொள்ள முடியும். எனவே, காதலைப் பற்றி தேடுவதற்கு முதலில் நமக்குள் உள்ள முன்முடிவுகளை,
கருத்துகளை விலக்க வேண்டும். நமக்குள் இருக்கும் குழப்பத்திலிருந்து வெளியே வந்தால்தான், எது காதல் இல்லை என்பதைக் கண்டறிய
முடியும்.
அரசு
‘’ உங்கள் நாடு மீது வைத்துள்ள காதலுக்காக சென்று பிறரைக் கொல்லுங்கள்’’ என்று கூறுகிறது.
இதுதான் காதலா? மதம், ‘’கடவுள் மீது வைத்துள்ள காதலுக்காக உடலுறவை விட்டுவிடுங்கள்’’
என்று கூறுகிறது. இதுதான் காதலா? காதல் என்பது
ஆசையா? இல்லை என்று கூறாதீர்கள். நம்மில் பெரும்பாலானோர்க்கு, ஆசையுடன் மகிழ்ச்சி இணைந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை நாம் புலனுணர்விலிருந்து பெறுகிறோம். உடலுறவின் ஒட்டுறவு, திருப்தி
ஆகிய புலனுணர்வு வழியாக மகிழ்ச்சி கிடைக்கிறது. நான் உடலுறவுக்கு எதிரானவன் அல்ல. உடலுறவு
நடக்கும் சில நிமிடங்களில் மட்டுமே உங்களை நீங்கள் மறக்கிறீர்கள். பிறகு நீங்கள் எப்போதும்
போல சிக்கலான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு திரும்புகிறீர்கள். உடலுறவில் பெறும் மகிழ்ச்சியால்
பிரச்னை இல்லாத நிலை , கவலை இல்லாத நிலை, சுயம் இல்லாத நிலை கிடைக்கிறது. அதை திரும்ப
பெற மீண்டும் என்ற ஆசையில் உடலுறவில் ஈடுபடுகிறோம். மனைவியிடம் அவரைக் காதலிப்பதாக
கூறுகிறீர்கள். இந்த காதலில் உடலுறவின் மகிழ்ச்சி இணைந்துள்ளது. இதற்காக வீட்டில் மனைவியைச்
சார்ந்து இருக்கிறீர்கள். அவள் உங்கள் குழந்தைகளை
உணவு கொடுத்து பராமரிக்கிறார்கள். நீங்கள் மனைவியைச் சார்ந்து இருக்கிறீர்கள். அவள்,
உங்களுக்கு தன் உடலை, உணர்வைக் கொடுக்கிறாள்.
ஒருவகையில் பாதுகாப்பை உணர்த்துகிறாள்.
அதேசமயம்
மனைவி உங்கள் மீது சலிப்படைந்தால், வேறு ஒரு ஆணை நாடுகிறாள். இதனால் உங்கள் உணர்வுச்
சமநிலை முழுமையாக அழிந்துபோகிறது. இது உங்களை தொந்தரவுபடுத்துகிறது. இப்படி ஏற்படும் நீங்கள் விரும்பாத உணர்வுக்கு பெயர்,
பொறாமை. இந்த உணர்வில் வலி, பதற்றம், வன்முறை உள்ளடங்கியுள்ளது. உண்மையில் இந்த நேரத்தில்
நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
‘’நீ எனக்கு
சொந்தமாக இருந்தவரையில், உன்னை காதலித்தேன். ஆனால் நீ எனக்கு சொந்தமில்லாதபோது, உன்னை
வெறுக்கத் தொடங்கிவிட்டேன். எனது தேவைகள், உடலுறவு மற்றும் பிற விஷயங்களுக்கு உன்னைச் சார்ந்திருந்தேன். உன்னை காதலித்தேன். ஆனால்,
நீ என் தேவைகளை நிறைவேற்றாதபோது, எனக்குத் தேவையான விஷயங்களைத் தராதபோது, உன்னை எனக்கு
பிடிக்காமல் போய்விட்டது. ’’
எனவே, உங்களுக்கு
மனைவியிடம் எதிர்மறை உணர்வு தோன்றுகிறது. இதன் விளைவாக பிரிவு நேரிடுகிறது. நீங்கள்
ஒன்றிலிருந்து பிரிந்து செல்வதாக தோன்றினால், அது காதல் இல்லை என்று உணர்ந்துகொள்ளலாம்.
நீங்கள் காதல் என்னவென்று உணர்ந்து கொண்டால், உங்கள் மனைவியிடம் சண்டை போடாமல் இருக்கலாம்.
உங்களுக்குள்ளும் போராட்டங்களை செய்யாமல் வாழ முடியும்.
காதலை முழுமையாக புரிந்துகொண்டால் நீங்களும் உங்கள்
மனைவியும் முழு சுதந்திரத்துடன் வாழமுடியும். ஆண் தனது தேவைகளுக்காக மனைவியை சார்ந்திருக்கும்
அடிமையாக இருக்கும் நிலைமையும் மாறும். காதலிக்கிறீர்கள்
என்றால், இருவரும் சுதந்திரமாக இருப்பதோடு சுயமாகவும், விடுதலை உணர்வைப் பெற்றிருப்பார்கள்.
ஒருவரின்
சொத்தாக இருப்பது, உளவியல் ரீதியாக பிறரைப் பராமரிப்பதற்கு சமமானது. தேவைகளுக்காக இன்னொருவரைச்
சார்ந்திருப்பது பதற்றம், பயம், பொறாமை, குற்றவுணர்ச்சி ஆகியவற்றை உருவாக்கும். எனவே,
எங்கு பயம் இருந்தாலும் அங்கு, காதல் இருக்காது. பயத்தால் மனம் எப்போதும் சோகமாக இருப்பதால்,
காதலை உணரவோ புரிந்துகொள்ளவோ முடியாது. காதலில் உணர்ச்சிகரத்திற்கு, மகிழ்ச்சிக்கு,
ஆசைக்கு இடமில்லை.
முந்தைய
காலங்களில் கூறப்பட்டது போல காதல் என்பது சிந்தனையின் உருவாக்கம் அல்ல. சிந்தனை என்பது,
காதலை உருவாக்க முடியாது. காதலில் பொறாமை இருக்காது. பொறாமை என்பது, கடந்த காலத்திற்கானது.
காதல் என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கானது. இதன் அர்த்தம், நான் காதலிக்கிறேன், காதலிக்கப்படுகிறேன்
என்று கூறவது அல்ல. காதலைப் புரிந்துகொண்டால் நீங்கள் யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை.
யாருக்கும் அடிபணிய வேண்டாம். நீங்கள் காதலில் இருந்தால் அங்கு மரியாதை, மரியாதை இன்மை
என இரண்டுமே இருக்காது.
நீங்கள்
ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால், வெறுப்பு, பொறாமை, கோபம், ஒருவரின் சிந்தனை, செயல்பாட்டில்
இடையூறு, ஒப்பீடு, விமர்சனம் ஆகியவை இருக்ககூடாது. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
நீங்கள் காதலில் ஈடுபடும்போது ஒப்பீடு இருக்குமா? நீங்கள் ஒருவரை மனப்பூர்வமாக, இதயம்
முழுமைக்குமாக உடல் நிறைந்து தளும்பும் அளவுக்கு காதலிக்கிறீர்கள் எனில், அங்கு ஒப்பீடு
இருக்குமா? காதலில் முழுக்க உங்கள் சுயத்தை அழித்துவிட்டுத்தான் ஈடுபட முடியும்.
காதலில்
பொறுப்பு, கடமை உள்ளதா? கடமை என்பதைத் தாண்டி வேறு விஷயங்களைச் செய்தால் அதில் காதல்
இருக்குமா? கடமை என்று வரும்போது அதில் காதல் இருக்காது. கடமை என்பதன் வடிவமைப்பே, மனிதர்களை அழிப்பதுதான்.
நீங்கள் ஒன்றைச் செய்வதற்கு நிர்பந்தம் செய்யப்படும்போது, நீங்கள் செய்வதை உங்களால்
விரும்ப முடியாது. காதல் இருக்கும்போது அங்கு கடமைகளும், பொறுப்புகளும் இருக்காது.
கருத்துகள்
கருத்துரையிடுக