வயிற்றைக் கிழித்து, கால்களை விரித்து, உடைகளைக் கிழித்து.. கண்டறிய முடியாத கொலையாளி








 

அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் உள்ள ஃபிராங்க்ஃபோர்ட் மாவட்டம் திரைப்பட நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனால் புகழ்பெற்றது. ராம்போ படத்தில் முதல் பாகம் அங்குதான் எடுக்கப்பட்டது. அதற்கடுத்து புகழ் தேடிக் கொடுத்த விஷயம். குற்றம்.  அங்கு நடைபெற்ற ஏழு கொலைகள்.

கொலைகளுக்குத் தொடக்கம் 1985ஆம் ஆண்டுதான். ஆகஸ்ட் மாதம், நகர பராமரிப்பு தொழிலாளர்கள் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் கண்டனர். பெண்ணின் மார்பகம் வெளியே தெரியும்படி இருக்க, அவரது உடலில் இருபது கத்திக்குத்து காயங்கள் இருந்தன.வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.  ஹெலன் பேடன்ட் என்ற அந்த பெண்மணி, பல்வேறு பார்களில் புழங்கி வருபவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்த கொலை நடைபெற்றது. இதில் அறுபத்தெட்டு வயது பெண்மணி அன்னா கரோல் மாட்டிக்கொண்டார். இக்கொலையிலும் அன்னாவின் வயிறு கிழிக்கப்பட்டு மார்பெலும்பு வெளியே தெரிந்தது. உடல் பாதி நிர்வாணமாக கிடந்தது. உடலில் ஆறு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முதல் கொலை நடந்த இடத்திலிருந்து அன்னா கரோல் இறந்துபோனது பத்து கி.மீ. தொலைவில்தான். அன்னாவின் வீட்டுக்கதவு, திறந்துகிடக்க ஏன் இப்படிக் கிடக்கிறது என அவருடைய நண்பர்கள் உள்ளே வந்து சோதித்துப் பார்க்க படுக்கையறையில் கொல்லப்பட்டு கிடந்திருக்கிறார்.

அடுத்த கொலை, ஹெலன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் நடைபெற்றது. அடுத்து கொலையான சூசனுக்கு வயது 74. இவரின் முதுகில் கத்திக்குத்துகள் ஆறு இருந்தன. இப்படி நடைபெற்ற கொலைகள் மக்களுக்கு பெரும் திகிலை உருவாக்கிவிட்டன.  1987ஆம் ஆண்டில், இருபத்தேழு வயது பெண்ணான ஜீன் டர்கின் என்பவர் கொலை செய்யப்பட்டார். இடுப்பிற்கு கீழே ஆடையில்லை. உடலில் எழுபத்து நான்கு கத்திக்குத்துகள் இருந்தன. தெருவில் பழங்களை விற்பவர்களின் வண்டிக்கு கீழே கால்கள் விரிக்கப்பட்ட நிலையில் ஜீன் கிடந்தார். காவல்துறை என்ன  முயன்று பார்த்தும் கொலைகாரனைப் பற்றிய தூசு தும்பு தகவல்கள் கூட கிடைக்கவில்லை.

கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்ததும் ஒரு பயனும் இல்லை. கிலோ கணக்கில் ஆவணங்கள் அலமாரியில் சேர்ந்தன. ஆனால் கொலையாளியை சிறையில் தள்ள முடியவில்லை. இப்படி இருக்க அடுத்த கொலையும் நடந்தது.

 மார்க் வாகன், இருபத்தொன்பது முறை குத்தப்பட்டு அறையில் இறந்து கிடந்தார். முந்தைய கொலைகள் நடந்த இடத்திற்கு அருகில்தான் மார்கும் கொலையானார். அவர் வீட்டருகே  கண்ணாடி அணிந்த மனிதரைப் பார்த்ததாக சிலர் தகவல் கூறினார்கள். காவல்துறையினரும் இதற்காக பல்வேறு படங்களை வரைந்தனர். ஆனாலும் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை.

1989ஆம் ஆண்டு, தெரசா என்ற முப்பது வயது பெண்மணி அவரது வீட்டில் கொல்லப்பட்டார். அவர் மாலையில் வீட்டுக்கு வரும்போது மத்திய வயதில் ஒருவரோடு பேசிக்கொண்டு வருவதை மக்கள் பார்த்தனர். பிறகு, வீட்டில் ஏதோ இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடப்பது போல சத்தங்கள் கேட்டன. ஆனால் பக்கத்துவீட்டுக்காரர்கள், நமக்கேன் வம்பு என இருந்துவிட்டனர். வீட்டின் மேலாளருக்கு ஏதோ சந்தேகம் எழ, தெரசாவின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போதுதான் தெரசா சமையலறையில் நிர்வாணமாக  இறந்துகிடந்ததைப் பார்த்தார். இருபத்தைந்து முறை கத்தியால் குத்தப்பட்டிருந்தார். காவல்துறைக்கு தெரசாவின் ஆண்தோழர் மீதுதான் சந்தேகம். ஆனால் ரத்தத்தில் நனைந்த காலடிச்சுவடுகள் அவருக்கு பொருத்தமாக இல்லை. அப்படி மட்டும் இருந்திருந்தால், வழக்கு உடனே முடிந்துவிட்டிருக்கும்.

அடுத்து பதினைந்து மாதங்கள் கடந்தன. மீன் சந்தை அருகே 45 வயதான பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இவரது இடுப்பின் கீழ்ப்புறமும் வெட்டப்பட்டிருந்தது. 36 கத்திக்குத்துகளை உடலில் வாங்கியிருந்தார். கரோல் என்ற பெண்ணுடன் மாலையில்  மத்திய வயது வெள்ளையர் ஒருவர் பேசியபடி வந்திருப்பதை மக்கள் பார்த்திருந்தனர். அப்போது மீன் சந்தையில் வேலை செய்து வந்தவரான லியோனார்ட் கிறிஸ்டோபர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அவர், கரோல் இறந்தபோது எங்கிருந்தார் என கேட்டபோது, தனது பெண்தோழியுடன் இருந்ததாக கூறினார். ஆனால் உண்மையில் அவரது தோழி தனியாகவே தனது வீட்டில் இருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

கிறிஸ்டோபர் கரோலுடன் பாரில் நேரத்தை செலவழித்ததும், இரவில் தெருவில் ஒன்றாக நடந்ததை சிலர் பார்த்ததை காவல்துறையிடம் கூறினர். இரவு ஒருமணி போல கிறிஸ்டோபர் சட்டை வியர்வையால் நனைந்திருக்க பெரிய கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்ததை விலை மாது ஒருவர் கூறினார். இவர்கள் கூறியதைப் பார்த்தால் முன்னர்  வெள்ளையர் ஒருவர் கரோலுடன் வந்ததாக சொல்லுவது அடிபட்டு போகிறதே?அதனால் என்ன காவல்துறை கிறிஸ்டோபரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது அறையை சோதித்துப் பார்த்தபோது, அறையில் துளியூண்டு ரத்தக்கறையைக் கண்டனர். ஆனால் அதை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியாத சூழல். பெரிதாக அவரது மீது குற்றம்சாட்ட எந்த விஷயமும் இல்லை.

கிறிஸ்டோபரை சிறையில் உட்கார்த்தி வைத்து மூச்சுவிடக்கூட இல்லை. அதற்குள் அடுத்த கொலை நடந்துவிட்டது. மிச்சல் மார்டின் என்ற பெண்மணி இருபத்து மூன்று குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இடுப்பில் இருந்த துணி கீழே இறக்கப்பட்டிருந்தது. மார்பகங்கள் வெளிப்படையாக தெரிந்தது. இவரும் பாரில் மத்திய வயதில் வெள்ளையர் ஒருவரோடு மது அருந்தியதை பார்த்ததாக சாட்சிகள் கூறினர்.  செப்டம்பர் ஆறாம் தேதி இரவு கொல்லப்பட்டவரை, மக்கள் அறையில் ஏதோ துர்நாற்றம் அடிக்கிறதே என அடையாளம் கண்டபோது செப்டம்பர் 8 ஆம் தேதி ஆகிவிட்டது.

ஆனாலும் காவல்துறை கிறிஸ்டோபரை சும்மா விடவில்லை. தங்கள் தோல்வியை எப்படி ஏற்றுக்கொள்வது? ஆதாரங்கள் இல்லை, சாட்சிகள் இல்லை என்றாலும் கிறிஸ்டோபர் வினோதமாக நடந்துகொள்ளும் ஆள் என்ற ஒற்றை வாதத்தை வைத்தே அரசு வழக்குரைஞர் அவருக்கு ஆயுள்தண்டனை பெற்றுத் தந்துவிட்டார்.

உண்மையில் கொலைகாரர் யார் என யாருக்குமே தெரியவில்லை. அப்படி ஒரு சாமர்த்தியசாலியாக கொலைகாரர் இருந்திருக்கிறார். இறுதிவரை காவல்துறை யார் கொலையாளி வெள்ளையரா, கருப்பரா என கண்டுபிடிக்க முடியாமலேயே போய்விட்டது. இருந்தாலும் கொலைக்கு காரணம் என ஒருவரை குற்றம்சாட்டி உள்ளே பிடித்து போட்டாயிற்று. நீதி ஒருவகையாக நிறைவேற்றப்பட்டது.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்