அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

 












ரன் வே

திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன்

தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி  என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை.

முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள்.

படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில் கற்பனை வளர்த்து காதல் கொள்கிறார். தாயில்லாத பெண் என்றாலும் கூட அந்த பெண்ணை தன்னம்பிக்கை கொண்டவராக உருவாக்கி காட்டியிருந்தால் பாத்திரத்தின் மேல் நமக்கு ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கும்.

படத்தில் சுவாரசியமான விஷயம், உண்ணி தன்னை வாலையார் பரமசிவம் என்ற அடையாளத்தில் மறைத்துக்கொண்டு மதுவை கடத்தல் செய்து சம்பாதித்து அதை துபாய் பணம் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்புகிறார். அதன் மூலம் அந்த குடும்பம் கடன்களுக்கான வட்டியைக் கட்டி வீட்டுச்செலவுகளை சமாளித்து வாழ்கிறது. ஆனால் அதேசமயம் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் ஆட்களைப் பார்த்து உண்ணியின் தம்பி பாலுவுக்கு சந்தேகம் வருகிறது. திருடன் மாதிரி இருக்கிறானே என்று….

படத்தில் முக்கியமான முரண்பாடு என்பது காவல்துறை அதிகாரியாக பாலுவும், வாலையார் பரமசிவமாக சகோதரர்கள் நேருக்கு நேர் ஒருவரையொருவர் எதிர்கொண்டு சண்டை போடுவதுதான்… கைகலப்பு இல்லாமல் வாக்குவாதமாக காட்சிகள் நீள்கின்றன.

 

தம்பி காவல்துறையில் இருப்பதால், அவனுக்கு தன்னால் களங்கம் ஏற்படும் என அண்ணன் உண்ணி, தான் செய்யும் தொழிலிலிருந்து விலக நினைக்கிறார். இத்தனையும் அவர் செய்யும்போது அவர் முதலாளி பாயை பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடுகிறார். உண்ணியின் தோழர்களும் நல்ல நிலைக்கு வந்து விடுகிறாரர்கள்.

ஆனால் அந்த நேரத்தில் பாயின் மகன், காவல்துறையால் பிடிக்கப்பட்டுவிடுகிறான். லாக்கப்பில் இருக்கும்போது, ஊழல் வாய்ந்த அதிகாரியால் கொல்லப்பட்டு பழி உண்ணியின் தம்பி பாலு மீது போடப்படுகிறது. பாய் தனது நம்பிக்கையான கையாள் உண்ணியின் தம்பி மூலம் தனது ஒரே பையன் கொல்லப்பட்டது அறிந்து நிதானம் இழக்கிறார். பாலுவைக் கொல்ல முயல்கிறார். உண்மையை அறிந்த உண்ணி, தம்பியைக் காப்பாற்ற நினைக்கிறார். அது சாத்தியமானதா, பாயின் மகனைக் கொன்ற எஸ்பியை உண்ணி என்ன செய்தார் என்பதுதான் இறுதிக்காட்சி.

மதுபானங்களை கடத்தும் வாலையார் பரமசிவம், துபாயில் வேலை பார்க்கும் உண்ணி தாமோதர் என இரு பாத்திரங்களில் திலீப் நடித்துள்ளார். இரண்டு பாத்திரங்களுக்குமான வேறுபாடு என்பது உடைகள், பொட்டு, முறுக்கிய மீசை என வேறுபாடு காட்டியுள்ளார். திலீப், இந்திரஜித் சுகுமாரன் என இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து லாரி ட்ரைவரான பாய் பாத்திரத்தில் -முரளி) நடித்துள்ளவருக்கும், பரமசிவத்திற்குமான உறவு அற்புதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

கோமாளிமேடை டீம்  


கருத்துகள்