விவாகரத்தான ஆசிரியையைக் காதலிக்கும் மாணவன்! - கிறிஸ்டி - மேத்யூ, மாளவிகா மோகனன்

 





கிறிஸ்டி 2023 மலையாளம்






கிறிஸ்டி

இயக்கம் ஆல்வின் ஹென்றி

திரைக்கதை – பென்யாமின், ஜிஆர் இந்துகோபன்


மாணவன் தன் ட்யூசன் ஆசிரியையைக் காதலிக்கும் கதை. பூவார் எனும் கடற்கரை கிராமத்தில் நடக்கிறது.

கதை, ராய் என்ற மாணவனின் பார்வையில் நடைபெறுகிறது. இதனால் அவனது பார்வையில்தான் ட்யூஷன் ஆசிரியையை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.  சுமாரான படிப்பு, அதிக நேரம் நண்பர்களுடன் விளையாட்டு, நடனம் ஆடுவது என சுற்றுவதுதான் ராயிற்கு விருப்பம். ஆனால் தேர்வில் வெல்ல கொஞ்சமேனும் படிக்கவேண்டுமே? ஜாலி, கேலி மட்டுமே போதாது அல்லலவா? எனவே, பெற்றோர் அவனுக்கு ட்யூஷன் சொல்லித்தர கிறிஸ்டி என்ற ஆசிரியையை ஏற்பாடு செய்கிறார்கள்.

ராய்க்கு முதலில் கிறிஸ்டி ஜோசப்புக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. பிறகு மெல்ல அவள் சொல்வதைக் கேட்டு படிக்கிறான். பரீட்சையிலும் படித்து வெல்கிறான். அதேசமயம் கிறிஸ்டி சேச்சியுடன் அவன் பழக்கமும் தொடர்கிறது. அவன், அவள் தேர்வுக்குச் செல்ல, உறவினர் திருமணத்திற்கு செல்லவென பல்வேறு உதவிகளைச் செய்கிறான். அவள் சிரிப்பதை, நட்பாக பேசுவதை காதலென நினைத்துக்கொள்கிறான். கிறிஸ்டிக்கு மாலத்தீவில் ஆசிரியையாக வேலை கிடைக்கிறது. பிரிவுத்துயரால் தவிப்பவன், அவளை அங்கு சென்று பார்த்துவர நினைக்கிறான். அதை செய்ய நினைக்கும்போது ஏற்படும் பிரச்னைகள்தான் இறுதிப்பகுதி.

ராயின் பார்வை வழியாக பார்ப்பதால் கிறிஸ்டிக்கு குறைந்த காட்சிகள்தான் உள்ளன. அதாவது, அவளை நாம் புரிந்துகொள்ள குறைவான வாய்ப்புகள்தான் உள்ளன. கதை முடிந்தபிறகும் நாம் கிறிஸ்டியைப் பற்றி  அவள் என்ன யோசிப்பாள், மனதில் என்ன நினைப்பாள் என யோசித்துக்கொண்டே இருப்போம். இயக்குநர் இப்படி பார்வையாளர்கள் நினைக்கவேண்டும் என காட்சிகளை கோத்திருப்பார் போல.

கிறிஸ்டி, கணவரை விட்டு பிரிந்து வந்து புகைப்படங்களை கத்தரிக்கோலால் வெட்டிக்கொண்டிருப்பாள். இதைத்தான் ராய் முதலில் பார்ப்பான். கிறிஸ்டி, அந்த புகைப்படங்களை தீயில் போட்டு எரிவதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அடுத்து, ட்யூஷன் எடுக்க காத்திருக்கும் ராய்க்கு விவாகரத்து பெற்றுவிட்டதாக லட்டு வாங்கி வந்து கொடுப்பாள், யாரும் வாங்க மாட்டார்கள். ஆனால் ராய் வாங்கிக்கொண்டு தோள்களைக் குலுக்கிக் கொண்டு சாப்பிடுவான். திருமணம் பற்றி தன் அப்பாவிடம் ஒரேமுறைதான் கோபமாக பேசுவாள்.

‘’நான் கேக்காம எனக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. நான் வேலைக்கு போயிருந்தேன்னா, பணம் சம்பாரிச்சிருப்பேன்’’ என கோபத்துடன் கூறுவாள். அவள் அப்படி கூறிவிட்டு வீட்டுக்குள் வரும்போது ராய் அங்கே காத்திருப்பான். அதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

கிறிஸ்டிக்கு குடிநோயாளியாக உள்ள அப்பா, சகோதரனுக்கு ஆதரவாக பேசும் அம்மா, பாட்டி என வாழ்கிறார்கள். பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தாலே போதும். அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நினைக்கும் குடும்பம். இந்த நேரத்தில் அங்கிருந்து விலகிச் சென்று தனக்கென தனி வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள கிறிஸ்டி நினைக்கிறாள். அதை செய்தும் காட்டுகிறாள்.

கிறிஸ்டி தனது பெற்றோரின் குறிப்பாக அப்பாவின் விருப்பத்தின் காரணமாக மணம் செய்துகொள்கிறாள். ஆனால் அது அவளுக்கு நிம்மதியான சந்தோஷமான குடும்ப வாழ்க்கையாக இல்லை. குடும்ப வன்முறையாக மாறுகிறது. இதனால் அந்த உறவை தைரியமாக உதறிவிட்டு தனது வாழ்வை சுதந்திரமாக வாழ நினைக்கிறாள். இதற்கான முயற்சிகளை செய்யும்போதுதான் ராய் உள்ளே வருகிறான். கிறிஸ்டி ‘’அவன் நட்பு தனக்கு மோசமான நிலையில் முக்கியமானது’’ என ஒருமுறை கூறுகிறாள்.

ராய் காதலை சொன்னபோது அதற்கு ஆம், இல்லை என்று கிறிஸ்டி கூறுவதில்லை. வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கும்போது அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருப்பதில்லை.

கிறிஸ்டிக்கு தனது குடும்பம் சார்ந்து இல்லாமல் தனியாக நின்று நிரூபிக்க வேண்டியதிருக்கிறது. அதற்காக முயல்கிறாள். படத்தில் காட்சிரீதியாக நிறைய குறியீடுகள் உள்ளன.

மேத்யூஸ், மாளவிகா மோகனன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளன. பிற துணைப் பாத்திரங்களும் படத்திற்கு என்ன அவசியமோ அந்தளவு நடிப்பைகொடுத்துள்ளனர்.

ஆல்வின் ஹென்றியின் காட்சிகளிலிருந்து காட்டாத விஷயங்களை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.  ஆனந்த் சி சந்திரனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தை தனித்துவமாக மாற்றுகிறது.  காட்டிய விஷயங்களிலிருந்து காட்டாத விஷயங்களை யூகித்து புரிந்துகொண்டால் மட்டுமே படம் புரியும். இல்லையென்றால் வளரிளம் பருவ நிறைவேறாத காதல் என்று மட்டுமே ஒருவர் புரிந்துகொள்வார்.

கோமாளிமேடை டீம்

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்