பயம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி

 
ஜே கிருஷ்ணமூர்த்தி

தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலில் இருந்து…

தமிழாக்கம்வெற்றியும் பயமும்

பள்ளி, கல்லூரியை நிறைவு செய்பவர்கள் அதுவரை படித்துக்கொண்டிருந்த நூல்களை தூக்கிப் போட்டுவிடுவார்கள். இனிமேல் எதையும் படிக்கவேண்டாம் அல்லது கற்க வேண்டாம் என மனதில் நினைக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய புத்தகங்களைப் படித்து அறிவுக்கே அடிமையாகிறார்கள். எவ்வளவு நாட்கள் ஒருவர் அறிவைத் தேடுகிறாரோ அந்தளவு அவர் வெற்றியை நோக்கி செல்கிறார். போட்டியிடும் மனப்பான்மை உருவாக, வேகமாக  முன்னே செல்கிறார். இதனால் மக்களுக்கு இடையில் உணவைப் பெறுவதற்கான கடும் போராட்டம் தொடங்குகிறது.

வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு என நினைக்கும் வரை நம் மனதிலுள்ள பயத்தை நம்மால் அழிக்க முடியாது. வெற்றி பெறுவதற்கான வேட்கை ஏற்படுவதே தோல்வி பயத்தால்தான். எனவே, இளைஞர்கள் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. வெற்றி பெறும் நோக்கம் என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அது டென்னிஸ் விளையாடும் மைதானம் தொடங்கி தொழில்துறை, அரசியல் என மாறிக்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் வரிசையில் முதலிடத்தை பிடிக்க நினைக்கிறோம். இந்த ஆசை நமக்குள்ளும், பிறரோடும் ஏராளமான முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. இதுவே மக்களுக்கு இடையில் கடும் போட்டி, பகை, போரை உருவாக்குகிறது.

பழைய தலைமுறையைப் போல வெற்றியும் பாதுகாப்பும் வேண்டுமென இளைஞர்கள் விரும்பினால், தங்களை தனியாகப் பிரித்து உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போது, அவர்கள் பொறுப்புணர்வு கொண்டவர்களாகவும், சமூகத்திற்கு இல்லை என்று பதிலளிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் மனதில் நினைக்கும் ஆசைகளே சுவர்களாக எழும்பி நிற்கும். அதற்குள்ளாக சிக்கி, அதிகார வளையத்தை விட்டு மீள முடியாமல் மாட்டிக்கொள்வார்கள். தன்னைத் தனியாக பிரித்து அறியக் கூடியவர்கள் தன்னைப் பற்றிய தேடுதல், விசாரணைகளை செய்து புரிந்துகொள்வார்கள். நல்ல வேலை, செல்வச் செழிப்பான திருமணம், வெற்றிகரமான தொழில் வாழ்க்கை, என்பதெல்லாம் ஒருவருக்கு மிகவும் பாதுகாப்பு தரக்கூடியவை. பாதுகாப்பு என்ற வகையில் மேற்சொன்ன அம்சங்கள் இடம்பெறும்.

வயதானவர்கள், இளைஞர்கள் என இரு பிரிவினருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இருவருமே தங்கள் ஆசைகளில், மதிப்பீடுகளில் மாட்டிக்கொள்பவர்கள்தான். முதிர்ச்சி என்பது ஒருவருக்கு வயதாவதால் வருவதல்ல; புரிந்துகொள்ளுதலால் வருவது…ஒருவர் தன்னைப் பற்றிய தேடுதலைச் செய்வது இளமையாக இருக்கும்போது எளிமையானது. ஆனால் வயதாகும்போது வாழ்க்கைக்கான சிக்கல்கள், முரண்பாடுகளால் ஒருவர் அலைகழிக்கப்படுகிறார். இறப்பும் வெவ்வேறு வடிவங்களில் அவருக்காக காத்திருக்கிறது. இப்படி கூறுவதால் வயதானவர்களால் தங்களைப் பற்றிய தேடுதலை செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. அச்செயலைச் செய்யும்போது நிறைய சவால்களை எதிர்கொள்ளுமாறு சூழ்நிலைகள் இருக்கும்.

வயது வந்தோர் பலரும் முதிர்ச்சி இன்றி குழந்தைத்தனமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இப்படி இருப்பது உலகளவில் குழப்பத்தையும், சிக்கலையும் ஏற்படுத்துகிறது. வயதானவர்கள் பொருளாதாரத்திற்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் அவர்களின் செயல்பாடுகள் அறமதிப்பீடுகள் இல்லாமல் உள்ளன. நமக்கும், நம்முடைய வாழ்க்கை மாறுவதற்கும் பிறரை எதிர்பார்த்து காத்திருப்பது மிகப்பெரும் பலவீனமாக மாறியுள்ளது. மற்றவர்கள் புரட்சி செய்து குரல் உயர்த்தி தங்களுக்கென ஒரு விஷயத்தை பெறும்வரை, நம்மில் பெரும்பான்மையானவர்கள் ஏதும் செய்யாமல் அமைதியாக காத்திருக்கிறார்கள்.

மக்கள் அனைவரும் வெற்றி, பாதுகாப்பு என இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். பாதுகாப்பு தேவை என்றால் நமக்கு வெற்றி வேண்டும். பலரின் தேர்வு புத்திசாலித்தனம் என்பதல்ல என்பதால், இந்த முயற்சி ஒருங்கிணைந்த இயல்பில் இருப்பதில்லை.  ஒருவர் இனம், மதம், சாதி, அரசியல் என தன்னுடைய மனதில் உள்ள முன்முடிவுகளை அறிந்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது சாத்தியமாகும். இவற்றை அறியும் ஒருவர் தன்னுணர்வை தனியாக அணுக முடியும்.

‘’ஒரு மனிதருக்கு முழுமையான மேம்பாடு தேவை என்றால், அவரின் முழுமையான திறனை அவர் உணர்ந்துகொள்ள உதவி செய்யவேண்டும். ஒருவர் அறிவியலாளர் அல்லது தோட்டக்காரர் ஆவாரா என்பது மாதிரியான ஒப்பீடுகள் ஒருவரின் செயல்திறனை  முழுமை செய்வதைத் தடுத்துவிடும். தோட்டக்காரர், தனது செயல்திறனோடு முழுமையாக உழைப்பதைப் போலவே அறிவியலாளரும் தனது துறையில் உழைக்கிறார். இங்கு ஒப்பீடே தேவையில்லை.  ஒருவரின் முழுமையான செயல்திறனை உணர்ந்துகொண்டால் சமூகம் சமநிலை கொண்டதாக மாறும். சரியான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கும்போது சமூகம் அல்லது வேறு வழிகளில் சமநிலை சீர்திருத்தங்களை உருவாக்க வேண்டியதில்லை. உண்மையில் ஒப்பீடு மூலமாக பொறாமைதான் உருவாகிறது. ’’

லைஃப் அகேட் – தொடக்க கட்டுரை

 

 நன்றி 

டெனர்.காம்


கருத்துகள்