உடலைத் தீய்க்கும் பாலைவனப் பயணத்தில் இயற்கையைப் புரிந்துகொள்ளும் பெண்! தடங்கள் -ராபின் டேவிட்சன்

 
தடங்கள்

ராபின் டேவிட்சன்

தமிழில் – பத்மஜா நாராயணன்

எதிர் வெளியீடு

 

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி, ஆஸ்திரேலியாவின் பாலைவனத்தை தனியாக கடக்கிற பயணத்தை, அதற்கான திட்டமிடலை, போராட்டத்தை க்கூறுகிற கதை இது.

நூல் மொத்தம் 300 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த பக்கங்கள் முழுவதும் ஒட்டகங்கள், அவற்றை வளர்ப்பது, பாதுகாப்பது, பராமரிப்பது பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. டூக்கி, கோலியாத், ஜெலிகா ஆகிய ஒட்டகங்களோடு ஆசிரியருக்கு இருக்கும் உறவானது, மனிதர்களோடு இருக்கும் உறவை விட உறுதியானதாக மாறுகிறது. டிக்கிட்டி எனும் பெண் நாயை ஆசிரியர் இழக்கும் சமயம், ஆசிரியரின் மனதிற்குள் நடக்கும் விரக்தி, வெறுமை நம்மையும் பற்றிக்கொள்கிறது.

பாலைவனப் பரப்பு மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை  விளக்கும் பகுதிகள் சிறப்பாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன. வெப்பம், மிக அதிக வெப்பம், தாங்க முடியாத வெப்பம் என்பதே அங்கு பயணிப்பவர்கள் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை. இந்த நிலையில் ஒருவர் சந்திக்கும் அனுபவங்கள் என்னவாக இருக்கும்? காட்டு ஒட்டகங்களின் தாக்குதல், சுற்றுலா பயணிகளின் நாகரிகமே இல்லாத புகைப்பட வேட்கை,  வழிப்பாதையை தவறவிடுதல், உணவு பற்றாக்குறை, நோய் என அனைத்து பிரச்னைகளையும் ராபின் டேவிட்சன் சந்திக்கிறார். பயணம் தொடங்கும்போது இருந்த இயல்பும், பயணத்தை முடிக்கும்போது இருக்கும் இயல்பும், புரிந்துகொள்ளலும் வேறுவகையாக இருக்கிறது.

நாவல் பயணத்தைப் பற்றியதுதான். அதில், பயணம் நெடுக ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கு நேரும் புறக்கணிப்பு, அவர்களது சொந்த நிலத்தை விட்டு திட்டமிட்டு அரசால் விரட்டப்படுவதை விவரித்துள்ளார் ஆசிரியர். பிட்ஜன்ஜாரா மொழியில் சில வார்த்தைகளே பேசத் தெரியும் நிலையில், அம்மக்கள் ஒட்டகத்தோடு பயணிக்கும் பெண்ணுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறார்கள். இயற்கையோடு இயற்கையாக கலந்து வாழ்வதை எட்டி என்ற பழங்குடி பாத்திரம் மூலமே ராபின் கற்றுக்கொள்கிறார்.

எதற்காக பாலைவனத்தை கடக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம் என ஆசிரியர் சிலசமயங்களில் யோசிக்கிறார். தன்னை புகைப்படம் எடுக்கும் பத்திரிகையாளர்களை, சுற்றுலா பயணிகளை வெறுக்கிறார். சில சமயங்களில் மறைவில் ஒளிந்துகொள்கிறார். இந்த மனநிலை பற்றி யோசிக்கும் சமயங்களில், தனது வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இழப்பது, ஊக்கம் பெறுவது என்ற சந்தர்ப்பங்களில் நாவலில் வரும் விவரிப்புகள் சிறப்பாக உள்ளன.

பாலைவனப் பயணத்தை முடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தனது பயணம் பற்றிய நூலை எழுதுகிறார். இதைப்பற்றிய நூலின் பின்குறிப்பும் உள்ளது.

ஒரு பயணம் ஒருவருக்கு என்ன மாதிரியான அனுபவங்களைத் தரும், இயற்கையோடு இசைந்து வாழ்வது சாத்தியம்தானா, பிறர் மீது காட்டும் அக்கறை பற்றிய ஏராளமான கருத்துகளை கூறிச்செல்கிறது தடங்கள் நாவல்.

மனதை தீய்க்கும் வெயில்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

நான்காவது காட்சி