பெற்றோர்களின் தவறான வளர்ப்பால் சிலுவை சுமக்கும் இரட்டையர்கள்! இரட்டா - ஜோஜூ ஜார்ஜ்
இரட்டா -ஜோஜூ ஜார்ஜ், அஞ்சலி |
இரட்டா
ஜோஜூ ஜார்ஜ்
இடுக்கி மாவட்டத்திலுள்ள வாகாமன் காவல்நிலையம். அங்கு,
பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை ஒப்படைக்க விழா ஒன்றை நடத்துகிறார்கள். வனத்துறை
அமைச்சர் வருவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் காவல்நிலையத்தின் உள்ளே ஒரு கொலை நடக்கிறது.
அதை செய்தவர்கள் என அங்கு நிற்கும் மூன்று போலீஸ்கார்களைப் பிடிக்கிறார்கள். சந்தேகப்படுகிறார்கள்.
உண்மையில் யார் குற்றவாளி என கண்டறிவதே படம்.
இறந்துபோனவரான வினோத், வாகாமனில் உதவி ஆய்வாளர். அவருக்கு
சகோதரரான பிரமோத், அதே காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். இறந்தவரான வினோத், கொலையை
விசாரிக்கும் பிரமோத் இருவருமே இரட்டையர்கள். ஆனால், 17 ஆண்டுகளுக்கு மேலாக துவேஷமாக
வன்மத்தோடு வாழ்கிறார்கள். வினோத் கொல்லப்பட என்ன காரணம் என்பதை எஸ்பி விசாரிக்க, மூன்று
போலீஸ்காரர்களின் வாக்குமூலம் வழியாக கதை நகர்கிறது.
இறந்துபோன வினோத் பற்றிய காட்சிகள் படத்தில் அதிகம். அவர்,
மனதில் சகோதரர் பிரமோத் பற்றிய ஒரு தீராத கோபம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை காவல்நிலையத்தில்
அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், விசாரணையில் பிரமோத்தைக் கூட கொலை செய்திருக்க
வாய்ப்புண்டு என்ற ரீதியில் சந்தேகப்படுகிறார்கள்.
குழந்தை வளர்ப்பு என்பது, பிள்ளைகளின் பின்னாளைய மனநிலையை,
ஆளுமையை வளர்த்தெடுப்பதில் எந்தளவு முக்கியம் என்பதைக் கூறியிருக்கிறார்கள். ஒருவர்
வளரும் சூழ்நிலையைக் காரணம் காட்டி அவரின் குண இயல்புகளைக் கூறலாம். அல்லது அதையும்
தாண்டி ஒருவர் நல்லவிதமாக வளர்ந்துவிட்டார் என பாராட்டலாம். இந்த இரண்டு விஷயங்களுக்கும்
எடுத்துக்காட்டுகளை காட்ட மனிதர்கள் உண்டுதான்.
வினோத், பிரமோத் என இருவரும் அப்படித்தான் வளர்கிறார்கள்.
வினோத் திமிரும், கோபமும், காமமும், குடி நோயாளியாகவே படம் நெடுக வருகிறார். அவர் சிறுவயதில்
வெறுத்த தந்தையைப் போலவே மாறுவதுதான் அவரது வாழ்வின் பெரும் சோகம். தனியாக வாழ்ந்துவருபவர்
சற்றே மாறுவதற்கான சந்தர்ப்பமாக கிறிஸ்துவப் பெண் வருகிறார். வினோத், இவரை குடும்ப
வன்முறை வழக்கு தொடர்பாக சந்திக்கிறார். அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு கூட்டி வந்து தங்க வைக்கிறார்.
கிறிஸ்துவப் பெண் காரணமாக மெல்ல வினோத்தின் குணத்திலும்
மாறுதல்கள் தொடங்குகிறது. முதல்முறையாக, பெண்ணின் உடலுக்காக அல்லாமல் அவளது மனதை வெற்றிக்கொள்ள
நினைக்கிறார். இந்த காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வாழ்க்கை என்பது நிகழ்காலம்
மட்டுமல்ல. கடந்தகாலத்தில் நாம் செய்த தவறுகளுக்கான விளைவையும் உள்ளடக்கியதுதானே? அப்படி
வினோத் தான் செய்த மாபெரும் தவறு ஒன்றை தெரிந்துகொள்கிறார். அது என்ன என்பதே இறுதிக்காட்சி.
சகோதரரான பிரமோத்தை வீழ்த்த பல்வேறு காரியங்களை வினோத்
செய்கிறார். வெளிமாநிலத்திலுள்ள பிரமோத்தின் பிரிந்துவாழும் மனைவியைக் கூட சென்று பார்க்கிறார்.
கணவர் மீது புகார் கொடுக்க விருப்பமாக என கேட்கிறார். ஆனால் அவர் மறுத்துவிடுகிறார்.
ஆனால் பின்னாளில் வினோத் செய்யும் பின்விளைவு அறியாத செயல், பிரமோத்தின் வாழ்க்கை முழுக்கவும்
சுமக்கவேண்டிய சிலுவையாக மாறுகிறது.
இரட்டையர்களாக இருப்பதில் பலமும் பலவீனமும் ஒன்றுண்டு.
ஒருவர் போல இன்னொருவர் நடிப்பதும், தண்டனை பெறுவதும் அதில் முக்கியமானது. அந்த வகையில்
தனது உருவத்திற்காகவே பெரிய சிலுவையை பிரமோத் வாழ்க்கை முழுக்க சுமக்கும்படி சூழ்நிலை
உருவாகிறது.
குடிப்பழக்கம் அதிகமாகி மனைவி பிரிந்துவிட தனியாக வீட்டில்
வாழ்கிறார் பிரமோத். பிறகு குடிப்பழக்கத்தை கைவிட்டு, திருந்துகிறார். மாரடைப்பு காரணமாக
மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்போது, போனில் தான் செய்த தவறுகளுக்கு மனைவியிடம்
மன்னிப்பு கூட கேட்கிறார். மனைவியையும், மகளையும் இசை நிகழ்ச்சியில் பார்த்ததாக கூறுகிறார்.
அவர்களைப் பார்க்க விருப்பம் தெரிவிக்கிறார். பிறகு, படம் நிறைவு பெறும்போது கூட அதே
இசைநிகழ்ச்சி காட்டப்படுகிறது. ஆனால் பிரமோத் அதைப் பார்க்கவே சங்கடப்படுகிறார். எதற்காக
என்பதைப் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
குற்றவுணர்ச்சி எனும் சிலுவை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக