தொழிலதிபரைத் தாக்கும் மாயவலி, மருத்துவருக்கு ஏற்படும் பதற்றக்குறைபாடு என இரண்டையும் இணைக்கும் காடு! ஃபாரஸ்ட்
ஃபாரஸ்ட் - கே டிராமா |
ஃபாரஸ்ட்
தென்கொரியா டிவி தொடர்
பதினாறு எபிசோடுகள்
ராகுட்டன் விக்கி ஆப்
தென்கொரியாவின்
சியோலில் நான்செங் என்ற முதலீட்டு நிறுவனம், ஆர்எல்ஐ என்ற பெருநிறுவனத்தின் பகுதியாக
இயங்கி வருகிறது. அதன் தலைவர் காங் சன் சியோக். அவருக்கு பாண்டம் பெயின் என்ற உளவியல்
குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டால், அவரது வலது கை தீயால் எரிந்து பொசுங்குவது போல
தோன்றுகிறது. நிஜத்தில் கை எரிவது போல வலியால் துடிக்கிறார். அப்போது அவர் மனக்கண்ணில்
ஒரு காடு தோன்றுகிறது. அதில் நெருப்பு பற்றுவது போல காட்சிகள் தோன்றுகின்றன. மருத்துவமனையில்
பான்டம் பெயின் தோன்றுவதற்கு காரணம், அவரது பால்ய கால பிரச்னைகள்தான். அதை தீர்த்தாலே
பிரச்னை தீரும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிற்கு அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.
அப்போது தொழில்ரீதியாக
அவர் மிர்யாங் எனும் காடு பற்றி அறிகிறார். அங்கு டேசங் எனும் தொழில்நிறுவனம் ரிசார்ட்
கட்டவிருப்பதாக அறிகிறார். அந்த திட்டத்தை காங் பெற நினைக்கிறார். தனது நிறுவனத்திடம்
அனுமதி பெற்று மிர்யாங் காட்டில் உள்ள தீயணைப்பு துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார்.
அதேநேரத்தில், காங் போலவே பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சிறுவயது சம்பவத்தால் பாதிக்கப்பட்ட
யங் ஜே என்ற மருத்துவர் காட்டிலுள்ள சிறு மருத்துவமனைக்கு வேலைக்கு வருகிறார். இருவரும்
வேறு மாதிரியான குணங்கள் கொண்டவர்கள். ஆனால் ஒரே வீட்டில் அறைகளை பிரித்துக்கொண்டு
வாழ்வதால், மெல்ல பழக்கமாகிறது. அதுவே காதலாகிறது.
யங் ஜேவிற்கு
காங்கை சியோலில் வைத்தே பார்த்திருக்கிறாள் என்றாலும் அவன் காட்டில் தீயணைப்புத் துறையில்
வேலை செய்வது புதிதாக இருக்கிறது. அவன் நோக்கத்தைப் பற்றி அவள் ஏதும் அக்கறை கொள்வதில்லை.
காங்கிற்கு காட்டில் தங்கியிருக்க இரண்டு காரணங்கள உண்டு. தனது உடல்நலக் குறைபாட்டை
சரிசெய்வதற்கான விஷயம் மிர்யாங் காட்டின் கடந்த காலத்தில்தான் இருக்கிறது என்பதைக்
கண்டறிவது. அடுத்து, காட்டை தனது லட்சியத்திற்கு ஏற்ப மாற்றி லாபம் அடைவது.
இந்த தொடரில்
முக்கியமான விஷயமாக பார்ப்பது, காங் சன் ஹயோக்கின் பாத்திரத்தைத்தான். இந்த பாத்திரம்
சுயநலமானது. ஆதரவற்று வளர்ந்து வந்த சூழ்நிலையால் தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக்கொள்ள
அத்தனை வழிகளிலும் முயன்று வெல்லும் குணத்தை கொண்டது.
இந்த பாத்திரம்,
தனது வழியில் இயங்குகிறது. யங் ஜேவை சந்திக்கும்போதுதான் நிறைய விஷயங்கள் மாறுகின்றன.
ஆனால் காங் தனது லட்சியத்தை கடந்த கால சம்பவங்களுக்காகவெல்லாம் மாற்றிக் கொள்ளவில்லை.
ஆனால் அவனுக்கு யங் ஜேவின் காதலும் அன்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அதை அவன் முக்கியமாக
நினைக்கிறான். எனவே, இறுதியாக மருத்துவ முடிவுகளை அவன் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தினான்
என்பதை யங் ஜே அறிகிறாள். அதை அவள் கூறும்போது
அவன் சற்று சலனமாகிறான். பிறகு வீட்டை விட்டு வெளியேறிச் செல்கிறான். முதல்முறையாக
சுயநலத்தை விட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கான
செயல்களைச் செய்கிறான். அதை அவனே ஜேவிடம் ஒருமுறை நேர்மையாக சொல்கிறான். காதலை
மீட்கவெல்லாம் கிடையாது. அதேசமயம் காங், யங் ஜே இருவரின் காதல் காட்சிகள் நன்றாக உள்ளன.
யங் ஜே, கொஞ்சம்
லூசுத்தனமாக பாத்திரமாக முதலில் தெரிந்தாலும், மிகை நடிப்பாக இருந்தாலும் ஓரளவுக்கு
அதை ஏற்கிறோம். வேறுவழியில்லை. டிவி தொடர் மிகவும் நெருக்கடியான சிக்கலான விஷயத்தை
பேசுகிறது. அதற்கு சற்றேனும் பிரேக் வேண்டுமே? யங் ஜேவின் நடிப்பு, தொடக்கத்தில் மிகை
நடிப்பு போல தெரிந்தாலும் தொடரின் பின்பகுதியை அவர்தான் தாங்குகிறார். தொடரில் இவருக்கு
அடல்ட் காமெடி வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள். நாயகி, குழந்தையின் முகமும், குமரியின்
வளமுமாக பார்க்க அவ்வளவு அழகு. எந்த உடை அணிந்தாலும் அழகி அழகிதானே. வண்ண உடைகள் அணிந்தால்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
தொடரில் இயற்கை
வளத்தை காப்பது, இயற்கை வளத்திற்காக அங்கு வாழும் மக்களையே கார்ப்பரேட் நிறுவனங்கள்
கொல்ல முயல்வது, அதற்கு உள்ளூர்காரரை பயன்படுத்துவது, ஊடகங்கள் காசு வாங்கிக்கொண்டு
அமைதியாக இருப்பது என நிறைய விஷயங்களைப் பேசுகிறார்கள். நாயகன் இறுதியாக சொல்லும் வசனத்திலும்
ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். ‘’நீ திரும்ப விடுதலையானாலும் நான் பணத்தை செலவழித்து
திரும்ப உன்னை சிறையில் அடைப்பேன். உன்னை சிறையில் வைத்திருப்பதே என் வேலை’’ . ஒருவகையில்
அங்குள்ள நீதித்துறை அப்படித்தான் செயல்பாட்டில் உள்ளதோ என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காட்டுத்
தீ உருவாகுவது, அதை தடுப்பது என பலவும் பேசிக்கேட்டிருப்போம். ஆனால் காட்டுத்தீயை அணைக்கும்
வீரர்கள் உடல், மனநிலை எப்படி உள்ளது, என்னென்ன பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள் என்பதையெல்லாம்
விளக்கியிருப்பது தொடரை தனித்துவமாக்குகிறது.
நாயகன் காங்கைப்
பொறுத்தவரை இயல்பான நடைமுறை தெரிந்தவன். நல்லது செய்யவும் கெட்டது செய்யவும் இரண்டுக்கும்
பணம் தேவை. அதைக் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என புரிந்துகொள்கிறான். எனவே, சியோல்
வேலையை செய்தபடி மிர்யாங் காட்டிற்கு தனது மருத்துவக் காதலியைப் பார்க்க வந்து செல்வதோடு
கதை நிறைவடைகிறது. இயற்கை சூழல் சார்ந்த டிவி தொடரை காதல் பெருக பார்க்கவேண்டுமென நினைக்கிறீர்களா,
தாராளமாக ஃபாரஸ்டை கிளிக் செய்து பார்க்கலாம்.
கோமாளிமேடை
டீம்
----------------------------------------------
Genres: Medicine, Drama
First episode date: 29 January 2020 (South Korea)
Writers: Lee Seon-yeong
Final episode date: 19 March 2020
Language: Korean
கருத்துகள்
கருத்துரையிடுக