சுலைமான், உதயபுரம் மாளிகையின் தம்புராட்டியை காதலித்தால்... - உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா

 





உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா

உதயபுரம் சுல்தான் -மலையாளம்




உதயபுரம் சுல்தான்

மலையாளம்

திலீப், ப்ரீத்தா, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார், அம்பிகா



அவிட்டம் நாராயண வர்மா உதயபுரம் மாளிகையைச் சேர்ந்தவர். அரச வம்சம். இவரது குடும்பத்தில் இருந்து மாளவிகா என்ற பெண், அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீம் காதலனை நம்பி வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். 

இந்த திருமணத்தால் மாளவிகாவின் அண்ணன்மார்கள் அப்துல் ரஹ்மானின் கால்களை அடித்து சிதைக்கிறார்கள். இதனால் உருவான பகை, தீர்வதாக இல்லை. மாளவிகாவின் சொத்து தொடர்பாக, வழக்கு போடப்பட்டு  நீதிமன்ற படியேறுகிறது. அதில் மருமகன் ரஹ்மான் வெல்கிறார். மாமனார் வர்மா தரப்பு தோற்கிறது. அதேசமயம், ரஹ்மான் - மாளவிகாவின் மகன் சுலைமான், வாய்ப்பாட்டு கலைஞன். சந்தர்ப்ப சூழல் காரணமாக தனது தாத்தாவின் வீட்டுக்கு உதயபுரம் மாளிகைக்கு வருகிறான். அங்கு, ஒரே பெண் வாரிசான கோபிகாவுடன் காதலாகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதே கதை.

திலீப், ஜெகதி ஶ்ரீகுமார், இன்னொசன்ட் இருக்கும்போது காமெடிக்கு என்ன குறை…. கொச்சி ஹனீபாவும் முரட்டுத்தனமாக புத்திசாலியாக நகைச்சுவையை சலீம்குமாருடன் இணைந்து செய்கிறார்.

நம்பூதிரிகள் தனது பூணூல் சார்ந்து சாதி பார்த்து முஸ்லீம்களை எப்படி அவமானப்படுத்துகிறார்கள், அதுவும் கலை சார்ந்த விஷயத்தில் அவர்களை சதி செய்து தோற்கடிக்க முயல்வதைப் பற்றி காட்சியாக்கி இருக்கிறார்கள். நாராயண வர்மாவின் வீட்டிலும் சாதி சார்ந்த பெருமிதங்கள் உண்டு. ஆனால் அக்கருத்துகளை வர்மா,  இறுதியில் மாற்றிக்கொள்ளும் காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் சுலைமான் பாடும் மேடை பாட்டு, கோவிலில் பாடுவது, கோபிகாவுடன் போட்டியில் தோற்றதாக மாப்பு கேட்டு பிறகு, அதே பாட்டை விஸ்தாரணமாக பாடுவது ஆகிய காட்சிகள் சிறப்பாக உள்ளன. கதை சார்ந்து சுலைமான், அம்மா மாளவிகாவிடம் சங்கீதம் கற்ற கலைஞன். அம்மாதான் குரு.

படத்தில் திலீப் சுலைமானாக இருந்து நம்பூதிரி பிராமணனாக தன்னை காண்பிக்க செய்யும் பிரயத்தனங்கள், காரியஸ்தரான இன்னொசன்ட், பரசு நம்பூதிரியான ஜெகதி ஆகியோருடன்  செய்யும் நகைச்சுவை பிரமாதமானவை.

இறுதியாக, சுலைமான் (திலீப்) தன்னோடு வந்துவிடும்படி கோபிகாவைக் கேட்கும் காட்சி, கோபிகாவின் தந்தையை கீழே தள்ளி, அவரின் காலை சிதைக்க  சுலைமானின் அப்பா ரஹ்மான் முயல்கிறார்.  வேண்டாம் என அவரைத் தடுத்து அதற்கு  சுலைமான் சொல்லும் காரணம், இறுதியாக இன்னொசன்டிடம் தங்கியிருந்த வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டு உணர்ச்சிகரமாக பேசும் காட்சி.. பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

திலீப்பைத் தாண்டி தனது நடிப்பால் ஈர்ப்பவர், அவிட்டம் திருநாள் நாராயண வர்மா பாத்திரத்தில் நடித்த நரேந்திர பிரசாத். தனது மகளைப் பிரிந்த துயரம், அதேசமயம் மருமகனால் நேரும் பிரச்னைகள் என அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மகளிடம் இறுதியாக மன்னிப்பு கேட்டு பேசுவது, கோபிகாவை சுலைமானுக்கு மணம் செய்விக்க ஒப்படைத்து. அதை மறுக்கும் மகன்களிடம் உருக்கமாக பேசுவது என சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை தெலுங்கில் விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா நடிப்பில் பார்த்ததாக நினைவு. ஜனப்பிரியனின் நடிப்பை மலையாளத்தில் பார்த்து ரசிப்பது தனித்துவமானது. படம் யூட்யூபில் உள்ளது. பாருங்கள்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்