இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

 



 




 


இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்?

காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது.

வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 805ஆக உள்ளது.

மராத்வாடாவில் வசிக்கும் 65 சதவீத மக்கள் வேளாண்மையையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பிறர், வேளாண்மையைக் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தொழிலாக செய்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் பயிர் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பு, விவசாயிகளை கடுமையாகப் பாதித்துள்ளது.

‘’ஏற்கெனவே, வேளாண்மைத்துறையில் இயங்கிய விவசாயிகள் வறுமையாலும், பல்வேறு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தார்கள். விவசாயிகளின் மீது பல்வேறு அடுக்குகளாக அழுத்தங்கள், சுமைகள் இருந்தன என்பதன் பிரதிபலிப்பாகத்தான் அவர்களின் தற்கொலை மரணங்களைப் பார்க்கவேண்டும்’’ என விவசாயிகள் சங்கத் தலைவரான ஜோகிந்தர் சிங் கூறினார்.

 

2022ஆம் ஆண்டு பெய்த அதீத மழைப்பொழிவால் எட்டு லட்சம் ஹெக்டேர்களிலுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலும் மராத்வாடா, விதர்பா பகுதிகளிலுள்ள இருபத்து நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

நெல், சோளம், சோயாபீன்ஸ், பருத்தி, பட்டாணி, வாழை மற்றும் காய்கறிகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக மாநில வேளாண்மைத்துறை தகவல் தெரிவித்தது. மராத்வாடா பகுதியில் மட்டுமே அரைப்பகுதி பயிர்கள் சேதமடைந்திருந்தன.

அதிகரித்த தற்கொலை சதவீதம்

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தேசிய குற்ற ஆவண அமைப்பு, தனது அறிக்கையை வெளியிட்டது. இதில், வேளாண்மைத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 5,563 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 9 சதவீதம் உயர்ந்திருந்தது. தற்கொலை எண்ணிக்கை அடிப்படையில்,  மகாராஷ்டிரா (1,424), கர்நாடகா (999), ஆந்திரப் பிரதேசம் (584) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

‘’பருத்தி பயிரிடும் வட்டாரங்களில், விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. பயிர்கள் விளைச்சல் குறைவு, உற்பத்திச் செலவு கூடுவது, சந்தை விலை வீழ்ச்சி ஆகியவை விவசாயிகளை மீளமுடியாத கடன் வலையில் சிக்க வைக்கின்றன.

பெருந்தொற்று முடக்க காலத்திலிருந்து விவசாயிகள் இன்னும் மீண்டு வரவில்லை. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தை, சரியானபடி மேம்படுத்தி விவசாயிகளிடம் அரசு கொண்டுபோயிருந்தால் காலநிலை மாற்றத்தை விவசாயிகள் எதிர்கொள்ள முயன்றிருக்க உதவியிருக்கலாம். வறண்ட நிலப்பரப்பில் கிடைத்த குறைந்தளவு நீரையும் சரியாகப் பயன்படுத்திருக்க முடியும்’’ என்றார் வேளாண்மை கொள்கை ஆராய்ச்சியாளரான இந்திரா சேகர் சிங்.

மத்திய அரசு, விவசாயிகளுக்கு வழங்கும் நேரடி பணப்பட்டுவாடா (Direct Benefit Transfer) மூலம் அதிக பாசன நீரை செலவழிக்கவேண்டிய பிடி பருத்தி, கரும்பு ஆகியவற்றைக் கைவிடச்செய்திருக்கலாம். இப்பயிர்களுக்கு பதிலாக குறைந்தளவு நீரில் வளரும், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சிறுதானியம், எண்ணெய்வித்துகள், பருப்பு வகைகளை விளைவிக்க ஊக்கப்படுத்தலாம்.

காலநிலை மாற்றத்தையோ, சந்தை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியையோ வங்கிகள் சரியாகப் புரிந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை. இதனால் விவசாயிகள், உள்ளூர் வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பயிர்களைப் பயிரிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

வேளாண்மை : இந்தியாவின் முதுகெலும்பு

இந்தியாவில் 50 சதவீத மக்கள், வேளாண்மைத் துறையை தம் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. சிறு, குறு விவசாயிகள் பயிர்களின் விலை வீழ்ச்சி, உயரும் போக்குவரத்து மற்றும் கிடங்குச் செலவுகளால் நசுக்கிப் பிழியப்பட்டு வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுபேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்த விவசாயிகளின் தற்கொலை, வேளாண்மைத்துறையில் ஏற்பட்டு வரும் பல்வேறு பிரச்னைகளை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.

கடந்த ஆண்டு, மோடி அரசு கொண்டு வந்த வேளாண்மைச் சட்டங்கள் நாடு முழுவதும் விவசாயிகளின் கண்டனத்தைப் பெற்றது. சட்டத்தை திரும்ப பெறக்கோரி தீவிரமான போராட்டங்களை நடத்தினர். இந்த வேளாண்மைச் சட்டங்கள், வேளாண்மைத் துறையை நவீனப்படுத்துவதை லட்சியமாக கொண்டவை.

‘’’மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் சமநிலை இன்றி, பாதுகாப்பும் இன்றி  தடுமாறி வருகிறார்கள். அங்கு, பஞ்சாப்பில் உள்ள விவசாயிகளின் அளவை விட குறைவான அளவில்தான் விவசாயிகள் பயிர்களை உற்பத்தி செய்கின்றனர். அதிகரிக்கும் கடன் தொகையும், காலநிலை மாற்றமும் ஆண்டுக்காண்டு அவர்களது துயரத்தை அதிகரித்து வருகிறது. விவசாயப் பயிர்களின் உற்பத்தி செலவு கூடிக்கொண்டே செல்வதால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை பற்றி மத்தியில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கவலைப்படுவதே இல்லை ’’ என்றார் கிராந்தி கிஸான் சங்கத்தின் தலைவரான தர்ஷன் பால் சிங்.

விவசாயிகளுக்கு கிடைக்கும் சந்தை விலையும், அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையும் பொருத்தமாக இருப்பதில்லை என விவசாய குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. சந்தையில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு வழங்கப்படும் விலை சரிந்தால், அரசு விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் விலையே ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ ஆகும்.

‘’சந்தையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை, அவர்கள் பயிர்களுக்குச் செய்த உற்பத்தி செலவுகளுக்கு கூட ஈடாக இருப்பதில்லை. எனவே, விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே கணிக்க முடியாத பருவங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இப்போது காலநிலை மாற்றத்தாலும் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். வேளாண்மைத் துறையில் தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்றார் பாரதீய கிஷான் சங்கத்தின் பெண்கள் பிரிவு தலைவரான, கேட்கி சிங்.

அரசின் தகவல்படி நாட்டில் இருபங்கு மக்கள் (1.3 பில்லியன் மக்கள்) விவசாயத்தை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்களிப்பு 17 சதவீதமாக (2.3 ட்ரில்லியன் டாலர்கள்) உள்ளது என தெரிய வருகிறது.

 

SOCIETYINDIA/

India: Why are suicides among farmers on the increase?/Murali Krishnan New Delhi

09/04/2022September 4, 2022 


கருத்துகள்