காது கேட்காத மாற்றுத்திறனாளியை காதலிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை! - சைலன்ட் - ஜப்பான்

 











சைலன்ட்

டிவி தொடர்

ஜப்பான் - ஜே டிராமா 

ராகுட்டன் விக்கி ஆப்

 

பள்ளிப்பருவ காதல்கதை. பள்ளிப்பருவத்தில் உற்சாகமாக தொடங்கும் காதல்,  பின்னாளில் காதலனின் உடல்நலப் பிரச்னையால் பிரிந்து மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தொடங்குகிறது. அவர்களின் காதல் மீண்டும் தொடங்கியதா, ஒன்று சேர்ந்ததா என்பதே கதை.

ஒரு எபிசோட் ஒரு மணிநேரம் என மொத்தம் பதினொரு எபிசோடுகள் உள்ளன. காசு கட்டினால் விளம்பரத்தொல்லையின்றி பார்க்கலாம். இல்லையென்றால் விளம்பரத்தைப் பார்க்கவும் ஏராளமான டேட்டா செலவாகும்.

சௌக்கு என்ற சகுரா, பள்ளியில் படிக்கிறார். இவரை மினாட்டோ என்ற மாணவர் ஆவோவா என்ற தனது தோழிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்கு சகுராவைப் பார்த்த உடனே காதல் தோன்றிவிடுகிறது. சகுராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.  எப்போதும் பாப் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்கு ஸ்பிட்ஸ் எனும் இசைக்குழுவின் பாடல்கள் இஷ்டம். அதுவரை அப்படி பாடல்கள் கேட்காத ஆவோவா மெல்ல இசையின் வசமாகிறாள். சௌக்குவிடம் இரவல் வாங்கும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தனது படிப்பைத் தொடர்கிறாள். வகுப்பறையில் வெளியில் என சகுராவும் ஆவோவாவும் நிறைய பேசுகிறார்கள். வகுப்பறையில் ஆசிரியரே வந்து விரட்டும் அளவுக்கு பேசுகிறார்கள். ஆவோவா நிறைய பேசுபவள். சகுரா சிரித்தபடியே அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பான்.

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு சகுரா, ஒருநாள் ஆவோவிற்கு குறுஞ்செய்தி அனுப்புகிறான். எனக்கு காதலி கிடைத்துவிட்டாள். எனவே நாம் பிரிந்துவிடுவோம் என்று… ஆவோவா உடைந்து போகிறாள். எப்படி அவன் தனது காதலை தூக்கியெறிந்து தன்னையும் உடைத்துவிட்டு போனான் என அவளுக்குப் புரியவில்லை.

சகுரா அவளைத் தூக்கியெறிந்தாலும் அவன் நினைவாகவே டவர் மியூசிக் எனும் நிறுவனத்தில் பகுதிநேர பணியாளராக வேலை செய்கிறாள். காதல் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவத் தோழன் மினாட்டோ காதலனாக வருகிறான். அவனுடன் டேட்டிங் செல்கிறாள். வேலைக்காக அவளும், தம்பியும் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருநாள் சகுராவைப் பார்க்கிறாள். பெயர் சொல்லி அழைத்தும் அவன் நிற்காமல் சென்றுவிடுகிறான். அவளுக்கு குழப்பமாகிறது. எட்டு ஆண்டுகள் கழித்து பார்க்கிறான். காதல் வேண்டாம் என்பவன் தன்னை ஏன் புறக்கணிக்கிறான் என குழப்பமாகிறது ஆவோபாவுக்கு. பிறகு அவனை சந்தித்து கேட்கும்போது அவன் சைகை மொழியில் ஏதோ சொல்கிறான். அவளுக்கு ஒன்றும் புரிவதில்லை. பிறகு மறுமுறை சந்திக்கும்போதுதான் சகுராவுக்கு காது கேட்பதில்லை. அவனிடம் சைகை மொழியில் பேசினால்தான் புரியும் என்பதை அறிகிறாள். உண்மையில் அவனுக்கு எட்டு ஆண்டுகளில் எஎன்னவானது. இசையை எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பவனுக்கு காது கேட்காமல் போக என்ன காரணம் என்பதை தொடரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சைலன்ட் என்ற டிவி தொடரின் மையக்கதை, மாற்றுத்திறனாளிகள் பற்றியதே. அவர்களை நாம் எப்படி புரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது. அதை எப்படி மதிக்க வேண்டும் என்பதை பல்வேறு பாத்திரங்கள் வழியாக சொல்லுகிறார்கள். பார்க்க அழகாக இருக்கிறது. காது கேட்காதவர்களின் வாழ்க்கை, காதல், நட்பு எப்படி அமைகிறது என்பதை பார்வையாளர்களாக நாம் பார்த்து புரிந்துகொள்ளலாம்.

சகுராவுக்கு காது கேட்காமல் போனபிறகு, தனது குடும்பத்துடன் பேசுவதே கடினமாகிவிடுகிறது. படிப்பிலும், வேலையிலும் கூட அவனுக்குநிறைய சிக்கல்கள் உருவாகின்றன. பலரும் கேலி, கிண்டல் செய்வதால் மனதளவில் சுருங்கிப்போகிறான். அந்த நேரத்தில் நானா என்ற மாணவி அவனுக்கு உதவுகிறாள். அவனை அவள் காதலிக்கிறாள் என்பதை சகுரா உணர்வதில்லை. அவனுக்கு தான் இழந்த காதல், காதலி, நண்பர்களின் உலகத்தை எப்படியேனும் அடைய முடியுமா என்ற பரிதவிப்பு உள்ளது. தனது மனதிலுள்ள தவிப்பை நானாவிடம் பகிர்கிறான். அவள்தான் அவனுக்கு சைகை மொழியை சொல்லித் தந்து தினசரி வாழ்வை எளிதாக்குகிறாள்.

ஆவோபாவுக்கு சகுராவுக்கு நடந்த பிரச்னையை புரிந்துகொள்வது தடுமாற்றமாக இருக்கிறது. ஆனால் தன்னை ஏமாற்றவில்லை. அவனுக்கு பெண்தோழியும் இல்லை. நோய் காரணமாக தன்னை விட்டு விலகி இருந்தான் என்று உண்மை தெரிந்தபிறகு, அவள் சைகை மொழியைக் கற்க பயிற்சி வகுப்பில் சேர்கிறாள். சகுராவுடன் உரையாடவென நேரத்தை செலவிடுகிறாள். மீண்டும் காதலிக்க நினைக்கிறாள். பிறர் கேட்கும்போது அது டேட்டிங் இல்லை. ஒன்றாக போய் சாப்பிட்டோம் என்கிறாள். அவளைச்சுற்றியுள்ள அனைவருக்குமே அது  காதல் என்று தெரிகிறது. ஏன் ஒருகட்டத்தில் அவளின் காதலைத் தெரிந்து அவளின் தம்பி ஹிகாரு கூட சகுராவிடம் பேசுவதற்கு சைகை மொழி நூல்களை சகுராவின் தங்கையிடம் கடன் வாங்குகிறான். ஒருவருக்கொருவர் பிறர் மீது காட்டும் நேசமும் அன்பும் தொடரை அற்புதமானதாக்குகிறது. நானா தான் கொண்டுள்ள தவறாக கருத்தை திருத்திக்கொண்டு சைகை மொழி கற்றுத் தரும் ஆசிரியரை மீண்டும் காதலிக்கத் தொடங்குகிறாள். அதுபற்றி அவள் சகுராவிடம் பேசும் உரையாடல் முக்கியமானது.

 சகுரா, ஆவோபா ஆகியோரை சுற்றியிருப்பவர்களுக்கு உள்ள ஆசாபாசங்கள் இருவரது உறவையும் பாதிக்கிறது. குறிப்பாக ஆவோபாவை சுற்றியிருப்பவர்கள். இவர்கள் குறையே இல்லாதவனான மினாட்டோவை அவள் மணக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

மினாட்டோவைப் பொறுத்தவரை அவன் தன் காதலை தொடக்கத்தில் பாதுகாத்துக்கொள்ள நினைக்கிறான். ஆனால், சகுராவைப் பார்த்தபிறகு, அவனைப் பற்றியே ஆவோபா பேசுகிறாள். அவனது கஷ்ட நஷ்டங்கள், பிரச்னைகள், எதிர்கொண்ட அவமானங்கள் என… இதனால் சகுராவிடம் கூட வெளிப்படையாக ஆவோபா முன்னாள் காதலியாக இருந்தாலும் எனக்கு விட்டுக் கொடுத்துவிடு என்று சுயநலமாக பேசியவன், பின்னாளில் தனது காதலை துறக்கிறான். சந்தோஷமாக இரு என மனதிற்குள் நினைத்தபடி நாம் பிரிந்துவிடலாம் என ஆவோபாவிடம் கால்பந்து மைதானத்தில் பேசும் காட்சி அற்புதமானது.

காதல் போனபிறகும், ஏற்படும் பூசல்களை தீர்க்க ஆவோபா சந்தோஷமாக இருக்கவேண்டுமென நினைக்கும் நண்பனாக இருக்கிறான்.

நானா, சைகைப் பள்ளி ஆசிரியர், ஆவோபாவின் தம்பி ஹிகாரு, சகுராவை பாதுகாக்க நினைக்கும் அம்மா, பாசமான தங்கை, சகுராவின் பள்ளி விளையாட்டு ஆசிரியர், ஆவோபாவின் அம்மா என தொடரில் பார்த்து வியக்கும் பாத்திரங்கள் நிறைய உண்டு. 

காது கேட்காதவர், அதுபோல குறைபாடு கொண்டவரைத்தான் மணம் செய்துகொள்ளவேண்டுமென கட்டாயமில்லை. தனது குறைபாட்டை புரிந்துகொண்ட இயல்பான ஒருவரைக்கூட மணம் செய்துகொள்ளலாம். அதற்கு புரிந்துகொண்ட அன்புமனம் மட்டுமே தேவை என செய்தி சொல்லுகிறது சைலன்ட் டிவி தொடர்.

கோமாளிமேடை டீம்

---------------

Language: Japanese

Profile

  • Drama: Silent
  • Romaji: Silent
  • Japanese: silent
  • Director: Hiroki Kazama
  • Writer: Miku Ubukata
  • Network: Fuji TV
  • Episodes: 11
  • Release Date: October 6 - December 22, 2022 --
  • Runtime: Thursday 22:00-22:54
  • Ratings: 7.6%
  • Language: Japanese
  • Country: Japan
  • https://asianwiki.com/Silent_(Japanese_Drama)

கருத்துகள்