நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்
நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன்
வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும்
செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து
அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது
வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான்
குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்?
ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள்
இதற்கு கூறிய பதில்களும் என்னென்ன சொல்றான்
பாருங்க என்ற ரீதியில் இருந்தன.
ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான்
45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம்
42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகள்
முயன்றும் காவல்துறையால் குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை.
பதினேழு வயது ஜெசிகா, கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில்
கடைசியாக இணைந்தார். உள்ளூர் நாடக குழு ஒன்றில் பங்கேற்று நடித்துவிட்டு, இரவில்
45 சாலையில் வந்தவர், தனது வீடு போய் சேரவில்லை. ஜெசிகாவின் அப்பா, மகளை தேடிவந்தபோது
மகள் ஓட்டி வந்த வண்டி மட்டுமே வெறுமையாய் நின்றிருப்பதைப் பார்த்தார். காவல்துறையில்
புகார் செய்தார். அதற்குமேல் அப்பா செய்வதற்கு ஒன்றும் இல்லை. காவல்துறையும் எல்லாம்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற சமரச நிலைப்பாட்டையே எடுத்தது.
‘’ குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது
நம் தரித்திரம். அதனால் என்ன குற்றவாளியை உருவாக்குவோம். நாளை அதுதான் சரித்திரம்’’
என ராபர்ட் ஆபெல் என்பவரை குறிவைத்தது. இவர் நாசாவில் வேலை
செய்த பொறியாளர். இவரது குதிரைப்பண்ணைக்கு அருகில் உள்ள இடத்தில் இரண்டு பெண்களின்
பிணங்களை காவல்துறை கண்டறிந்தது.
ராபர்ட் பண்ணை அருகே இருந்ததால், அவர் எப்படிப்பட்டவர்
என்ன காவல்துறை கட்டம் கட்டிப் பார்த்தது. முன்னாள் மனைவியிடம் பேசியதில், அளவுக்கு
அதிகமாக கோபப்படுவார், குதிரைகளை அடிப்பார் என தகவல் சொன்னார். நிச்சயமாக விவாகரத்து
செய்தவனை பழிவாங்கவே திட்டமிட்டு பதில் சொல்லியிருக்க வேண்டும். கூடவே, ராபர்டிடம்
பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் உண்டு எனவும் சொன்னார். இந்த வகையில் 6 ஆயிரம் புகைப்படங்களை
காவல்துறை கைப்பற்றியது. அதிலும் கூட அவரது பண்ணை அருகில் கிடந்த இரு பெண்களின் புகைப்படங்கள்
இல்லை. இருந்தாலும் காவல்துறை அவரை குற்றவாளி என 45 நெடுஞ்சாலை வழக்கில் பகிரங்கமாக
தெரிவித்துவிட்டது. பொதுவாக ஒருவரை குற்றவாளி என சாட்சிகள், ஆதாரங்கள் இருந்தால் கூறலாம்.
இப்படி முன்னாள் மனைவியின் வன்ம வாதங்களை கருத்தில்
கொண்டும், தனது இயலாமையை மறைக்கவும் காவல்துறை செய்த வேலையால் ராபர்ட் ஆபெலின் தினசரி
வாழ்க்கை நரகமானது. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் அவரை கொலையாளி, குற்றவாளி என வசைபாட, மிரட்டத் தொடங்கினர்.
அவரின் வீட்டு போனுக்கு குரல் பதிவு அழைப்புகள் வரத் தொடங்கின. எல்லாமே மிரட்டல் அழைப்புகள்தான்.
45 நெடுஞ்சாலை வழக்கில் பாதிக்கப்பட்ட ஒருவர், ராபர்டின் வீட்டுக்கு துப்பாக்கியோடு
வந்து மிரட்டினார், அத்தோடு ஓவர் டைமாக போன் அழைப்பு மிரட்டல்கள் தனி. லீக் சிட்டி
எனும் ராபர்ட் வாழும் நகரின் காவல்துறை ராபர்ட்டிற்கு ஏற்பட்ட பிரச்னைகளைப் பற்றி கவலையே
படவில்லை. அவர் குற்றவாளி என காவல்துறை உறுதியாக நம்பியது. இந்த நேரத்தில் ராபர்ட்
தானாகவே முன்வந்து பாலிகிராப் சோதனைக்கு ஒப்புக்கொண்டார். அதை பத்திரிகைகளில் வர வேற்பதாக
லீக் சிட்டி காவல்துறை தலைவர் பேசியது, இன்னும் சங்கடமானது. பொதுவாக சீரியல் கொலைகாரர்கள்
பாலிகிராப் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பது அன்று சகஜம். அப்படித்தானே இது என வலைப்பேச்சு
அந்தணன், செய்யாறு பாலு வகையறாக்கள் பொங்கினர்.
நகர காவல்துறையின் பாலிகிராப் சோதனையை மக்கள் ஒரு
பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு தனியார் டிவியில் செய்த பாலிகிராப் சோதனையை,
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் செய்தனர். அதில் அவர் குற்றவாளி அல்ல என நிரூபணமானது.
துப்பாக்கியோடு ராபர்ட்டின் வீட்டுக்கு வந்து மிரட்டியவர், தான் அவரை மிரட்டியது தவறு
என மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு, வேறுவழியின்றி காவல்துறையும் தன்னை அதுவரை காத்து
வந்த எல்லை கருப்பு சாமியான, ராபர்ட்டை வேறுவழியின்றி விட்டுக்கொடுத்தது. இப்படி கிடைத்த
நேரத்தில் குற்றவாளியை காவல்துறை கண்டுபிடித்ததா என்று கேட்டால் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக