மெக் அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

மரணத்தின் இடம் மற்றும் இறந்த காலத்தின் இயக்கம்: மெக்அலெக்ஸாண்ட்ரோஸ்டோனி மிட்செல் – 1980ஆங்கிலத்தில் - டான் ஃபைனாரு

தமிழில் - லாய்ட்டர் லூன்








கிரேகத்தின் செவ்வியல்தன்மை கொண்ட காலத்தை மக்கள் நினைவில் வைத்திருக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்கிறீர்கள். ஓ மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் இல் பயன்படுத்தப்படும் விஷயங்கள் அதன் புனைவு என்ற தன்மையில்தானா?

       கிரேக்கர்கள் நடுகற்களை வழிபட்டு அதன் பெருமை பேசி வளர்ந்த பாரம்பரியம் கொண்டவர்கள். புனைவுகளை மேலிரிருந்து கீழாக மக்களிடம் கொண்டு வந்து பேச, பயணிக்கும் வீரர்கள் படத்தின் மூலம் முயற்சித்தேன்.  படத்தில் தலைப்பு மிகச்சிறந்த அலெக்ஸாண்டர் என்று வைக்கப்படவில்லை. ஆனால் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் அறியாத பல வீரர்கள் போல கற்பனையான கதைகளில் வாழும் புகழ்பெற்ற ஒரு வீரர் ஒருவராவார். வரலாற்று அலெக்ஸாண்டரோடு ஒப்பிடுகையில் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை என்றாலும் இவர் வேறுபட்ட முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட முக்கியமான பிரபலமான ஒருவர் என்று கூறமுடியும்.

       1453 ஆம் ஆண்டில் துருக்கியரின் ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது உருவான ஒரு புரட்சி வீரர்தான் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் ஆவார். வாய்வழிக் கதைகளின் வழியே நூற்றாண்டுகள் கடந்தும் வந்துவிட்டார். ஒரு விடுதலை வீரர்(மெசியா) தம்மை மீட்க வருவாரென, மக்கள் ஏசுவிற்கு காத்திருந்தது போல ஆழமான நம்பிக்கை கொண்டு இருப்பதுதைத்தான் இக்கதைகள் நமக்கு தெரிவிக்கின்றன. படத்தில் ஏசுவின் வடிவத்திற்குப் பதிலாக, செயின்ட் ஜார்ஜ் ஒப்புமைப்படுத்தப்படுகிறார்.

       இப்படம் இரு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் அடிப்படையான கதைக்கான சூழலை உருவாக்கித் தந்து உதவிய மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் குறித்த  நூல் ஒன்று. சுற்றுலா வந்த ஆங்கிலேயக் குழுவை மாரத்தான் பகுதியில் பண்டிட்ஸ் குழு ஒன்று கடத்தினர். அந்த சுற்றுலாப்பயணிகளை விடுவிக்க,  சிறையில் இருக்கும் சிலரை மன்னித்து விடுதலை செய்யும்படி கேட்டார்கள். ஆனால் அரசு அதனைப் பெரிதாக கவனம் கொள்ளாமல் விட்டது, பரிமாற்றம் நிகழாது தடுத்துவிட்டது. பிறகு சுற்றலாப்பயணிகள் கொல்லப்பட்ட சடலமாக மீட்கப்பட்டது அரசுக்கு பெரும் அவப்பெயரைத் தேடித் தந்தது. துறைமுகத்தில் இங்கிலாந்து மனிதர்களின் போக்குவரத்தே தடுக்கப்பட்டது.

பிரிட்டிஷ் கதாபாத்திரங்கள் தங்கள் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் வருவது என்ற முறையில் இது மூன்றாவது படமாக உள்ளது. பயணிக்கும் வீரர்கள் படத்தில் அவர்கள் ஆங்கில கண்களுடன் உலகைப் பார்க்கும் தன்மை இருந்தது. அவர்களை ஆங்கிலேய காலனி ஆட்சி முறையை அமுல்படுத்தியவர்களாகவே கருதுகிறீர்களா? ஓமெக் அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தைப்பற்றி ஒரு விமர்சகர் விமர்சிக்கும் போது ஸெனோபோபிக் (அந்நிய நாட்டின் மீதான வெறுப்பு) என்று குறிப்பிட்டார்...

       ஆங்கில கதாபாத்திரங்களை பயன்படுத்தினேன் என்றாலும், அவர்கள் பிரிட்டன் மற்றும் இதர நாட்டுக்காரர்களைப் போல எதையும் வெளிப்படுத்தியவர்களல்ல. பொதுவான தன்மையிலோ, கிரேக்க மக்களின் கோணத்திலோ அவர்கள் எந்த பிரச்சனையையும், அணுகியவர்களல்ல. அந்த சமயத்தில் கிரேக்க அரசை வெளிப்புறத்திலிருந்து ஆட்சி செய்துகொண்டிருந்தது. 1947 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கிரேக்கத்தினைப் பாதுகாக்கும் காவலர்கள் என்று கூறி பிரிட்டிஷ் அரசு தொடர்ந்து தனது ஆட்சியை நடத்தியது. எளிமையாக கூறவேண்டுமெனில் வலுவான வெளிநாட்டு அரசாக மாறி கிரீசைக் கைக்குள் வைத்திருந்ததோடு, அதன் வளங்களையும் அவர்கள் முதலீடுகளாக ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்கள்.  ஓ மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் சுற்றுலாக்குழு அப்பாவிகள்தான். குறிப்பாக, லேன் காஸ்டர் மன்னர் விக்டோரியா ராணியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். அப்பாவித்தனமும், கிரீசின் மீதும் அன்பும் கொண்டவர் என்றாலும், வெளியுலகத்தில் அதிகாரப் பொறுப்பினை தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கு அரசியல் விழிப்புணர்வுத் தன்மை அவரிடம் இல்லை.

நீண்ட கால செயல்பாடாக படத்தின் தொகுப்புப் பணி நடைபெறுகிறது எனும்போது இதனை பயணிக்கும் வீரர்கள் படத்தில் வரும் வரலாற்றுத்தன்மையோடு அளவிடலாமா? காலத்தின் மாறுபட்ட இடமாற்றம் என்பதை குறுக்குவெட்டாக ஆராயும் தன்மையினால் இது குழப்பமானதாக உள்ளதா?

       முதல் விஷயமாக, இந்தப்படத்தைப் பற்றி நான் கூறவிரும்புவது நான் உருவாக்கிய படங்களிலேயே இது எளிமையான படம் என்பதுதான். நவீன வடிவம் போல படத்தொகுப்பில் இது மேம்படுத்தப்படவில்லை. வரலாற்று நிகழ்வினூடே பெரும் தாவல்களை நிகழ்த்துவதுமில்லை. 1900 ஆண்டின் பிறப்பின்போது படம் தொடங்கி, சிறுவன் அலெக்ஸாண்டர் (மெக்அலெக்ஸாண்ட்ரோஸாக மாறுபவர்) ஒரு நகரத்தினுள் நுழைவதோடு படத்தின் இறுதிக்காட்சி நிறைவடைகிறது. நவீன நகரம் – நிகழ்கால ஏதேன்ஸ், கிராமம் குறித்த விஷயங்கள் என நூற்றாண்டு கால உலகம் படத்தில் வருகிறது. நகரத்தில் நுழையும் அலெக்ஸாண்டர் நூற்றாண்டு கால விஷயங்களை தன்னோடே கொண்டு வருகிறான். வாழ்க்கை அனுபவங்களான பாலியல், இறப்பு ஆகிய அனுபவங்களைக்கொண்டு சூரியன் மறையும் அந்திம நேரத்தில் உள்ளே நுழைகிறான். அங்கே பெரும் கேள்விக்குறி இருக்கிறது. எவ்வளவு நேரம் இரவு நீளும்? எப்போது விடியல் தொடங்கும் என்ற கேள்விதான் அது.