நூல்வெளி2: கங்கையாக மாறும் கங்கவ்வாவின் கதை
கங்கவ்வா கங்கா மாதாகன்னட மூலம்: சங்கர் மோகாசி புணேகர்இந்தி வழி தமிழ்: எம்.வி. வெங்கட்ராம்வெளியீடு : நேஷ்னல் புக் ட்ரஸ்ட்
சங்கர் மோகாசி புணேகர் |
இந்த நாவலின் தொடக்கத்தில் கங்கவ்வா காசி விஸ்வநாதரை சென்று பார்த்துவிட்டு திரும்புகையில் ஏறத்தாழ அவளது வாழ்க்கையில் அவளது கடமைகளை பெருமளவு திருப்தியாக முடித்து விட்டிருக்கிறாள். அப்போதே அவளுக்கு கங்கையில் குதித்து உயிரை விடத் தோன்றுகிறது. ஆனால் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு எளிதில் யார் வெளியேறிவிட முடியும்? தன் மகனது திருமணம், வளமான வாழ்க்கையை கண்டுவிட்டு பின்தான் இறப்பு என்று நினைத்து வீட்டிற்கு கொண்டுவ ரும் கங்கை நீரைக் கூட வாழவேண்டும் வாழ்வேன் என்று தைரியமாக நடு இரவில் ரயிலிலிருந்து கீழே கவிழ்த்துவிடுகிறாள். இதை வாசிக்கும் போது கதை முடிந்து விட்டது போல் தோன்றும். ஆனால் கதை தொடங்குவது இதிலிருந்துதான்.
கங்கவ்வா, பகதூர் தேசாய், கங்கவ்வாவின் தம்பி ராகப்பா ஆகிய மூன்று குடும்பங்களைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது. கங்கவ்வாவின் கணவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு செயலை செய்துவிடுகிறார். பின் அதைக் குறித்து நினைத்து நினைத்து வருந்தி இறந்துவிடுகிறார். அதற்கு பிறகு விதவையான கங்கவ்வா தனது உறவினர்கள் யாரையும் எதிர்பார்க்காது தன் உழைப்பினால் தன் மகனையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்கிறாள். அவளது மகனான கிருஷ்ணா இயல்பிலேயே குழந்தைமை கொண்டவனாக வெளியுலகத்தின் எவ்வித தந்திரமும் தெரியாமல் இருக்கிறான். அப்படியே அரசு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தாசில்தார் அலுவலகத்தில் குமாஸ்தாவாகிவிடுகிறான். சராசரியான பலவீனங்கள் பலவும் கொண்ட இவர்தான் இக்கதையில் நாயகன்.
அப்போதுதான் கிராமத்திலிருந்து தார்வார் தொழில் விஷயமாக வரும் கங்கவ்வாவின் தம்பியான ராகப்பாவிற்கு தனது தங்கையின் மகன் நல்ல வேலையில் இருப்பது தெரிந்து அவனை தன் மூத்த மகள் ரத்னாவிற்கு திருமணம் செய்ய ஆசை உருவாகிறது. ஆனால் கங்கவ்வா தனது கணவர் இறப்பிற்கு ராகப்பாதான் காரணம் என்று உறுதியாக நம்புகிறாள். அவளின் துவேஷமான பேச்சைக் கேட்டு முதலில் அரண்டு வீட்டை விட்டு வெளியேறும் ராகப்பாவிற்கு அக்காவினை வென்று அவளைத் தனியாக நிற்க வைக்க வேண்டும் என்று வன்மம் கிளம்புகிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் ஈட்டுகிறான். ஆனால் கங்கவ்வா ராகப்பாவின் அக்கா அல்லவா? இதை எதிர்த்து அவள் என்ன செய்கிறாள்?
அவளது பக்கத்து வீட்டுக்காரரான பகதூர் தேசாய் கங்கவ்வாவுக்கு குறிப்பிட்ட தருணங்களில் கேட்கும் பணத்தைத் தருகிறார். என்ன காரணத்திற்காக என்று அவரது இரண்டாவது மகனான வசந்தராவிற்கு சந்தேகம் வருகிறது. கேட்டால் அது உனக்கு அவசியமில்லை என்று அவனது அம்மா கூறுகிறாள். கிருஷ்ணாவின் வளர்ச்சி சாத்தியமானது குறித்து கடும் பொறாமையில் சிக்கித் தவிக்கும் வசந்தராவ் இயல்பிலே குறுக்குப்பாதைகளை தேடும் புத்தி சமநிலை இல்லாதவன். அதன் பிறகு அவன் என்ன செய்தான்? இறந்த காலத்தில் ராகப்ப்பாவிற்கும் அவனது தம்பி வெங்கிடுவுக்கும் கிருஷ்ணாவின் தந்தை சுவாமிராயிற்கும் என்ன நிகழ்ந்தது? அந்த இறந்த காலம் ராகப்பாவை வலுவிழக்கச் செய்கிறது? என்பது குறித்து நீங்கள் அறிய நூலை அவசியம் படிக்கவேண்டும். இதில் வரும் கதாபாத்திரங்களின் வலுவான கட்டமைப்பு வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத ஒன்று. ஏறத்தாழ ஆங்கில குணாதிசயங்கள் கொண்ட இந்திய கதாபாத்திரங்கள் என்று கூறலாம்.
கங்கவ்வாதான் கங்கை நதி போல இருக்கிறாள். தனது தம்பி ராகப்பாவின் சொல் கேட்டு ஆடும் கிருஷ்ணனை மன்னிப்பதாகட்டும், தேசாயிடம் உருகி அழுதாலும் பணத்தை சேமித்து தன்னைத்தவிர யாருக்கும் தரக்கூடாது என்று காட்டும் உறுதியிலும், தன் கணவன் இறப்பு குறித்த விஷயங்களில் அவள் ராகப்பா மீது காட்டும் துவேஷமும் வாசிப்பவர்கள் மனதில் எளிதில் நீங்காத ஒன்று.
தேசாய் என்பவர் இதில் நிலவுடைமை சமுதாயம் சார்ந்த ஒருவர். மிக அத்தியாவசியமான தருணங்கள் தவிர மற்ற தருணங்கள் எதிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இல்லாத அவர் கங்கவ்வாவிற்கு உதவிய காரணத்திற்காக ராகப்பாவின் விரோதத்திற்கு உள்ளாகி அவனுக்கு நேருக்கு நேரான எதிரியாக மாறி நிற்கிற சூழ்நிலையும் வருகையில் அவர் காட்டும் நிதானம் நேர்த்தியான உரையாடல்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு பகைவனோடு பகைவனாக மாறி நிற்கும் வசந்தராவையும் ராகப்பாவோடு சேர்த்து எப்படி சமாளிக்கிறார் என்பது நாவலின் மிக முக்கிய பகுதி.
நாயகன் கிட்டி கிருஷ்ணன் என்றாலும் உண்மையில் அதிக பக்கங்களில் நிரம்பி பலருக்கும் கடும் நெருக்கடிகள் கொடுத்து நான் மட்டும் தோற்கவே கூடாது என்று சங்கல்பமேற்கும் ராகப்பாதான் நாவலின் அசைக்கமுடியாத நாயகன் என்றே கூறலாம். நீதி, அநீதி எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டுத்தான் நான் தொழில் செய்யத் தொடங்கினேன் என்று கூறும் நெஞ்சுரம் கொண்டவன் ராகப்பா. ஆனால் நினைத்துப் பார்க்கமுடியாத கொடுமையானவன் அல்ல ராகப்பா. எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை அவமானப்படுத்தியவர்களை மன்னிப்பதேயில்லை.எதிலும் கீழிறங்கக்கூடாது என்று இருப்பவனை அவன் நேசிக்கும் ஓர் உயிர் இறந்துபோகும் சமயம்தான் கீழே வீழ்த்துகிறது திரும்பி எழவே முடியாதபடி. இறுதியில் இறக்கும்போதும் தான் உங்களிடம் தோற்கவில்லை என்று தன்னை எதிர்த்தவர்க்கு கடிதம் எழுதி அனுப்பவிட்டு சாகும் நெஞ்சுரம் கொண்டவன் ராகப்பா. தன்னைச் சார்ந்தவர்களையும் கூட தன் திட்டத்தில் ஒரு பகுதியாக சேர்த்து தன் எதிரிகளை (அக்கா கங்கவ்வா, தேசாய்) வீழ்த்து திட்டமிட்டபோதும் அது நிராசையாவதோடு அவனது மனதிலும் கடும் பாதிப்பை நிகழ்த்திவிட்டுச் செல்கிறது. காரணங்களைத் திட்டமிடும் அவனுக்கு விளைவுகளின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதில் ஆள்பலமும் ஆன்ம பலமும் பற்றாமை ஏற்பட வீழ்ச்சி கடும் வேகத்துடன் ஏற்படுகிறது. இறுதியில் தேசாயிடம் மன்றாடும் நிலையும் ஏற்படுகிறது. அதற்கான எந்தச் சுவட்டையும் அவர் எழுதிய கடிதத்தில் பார்க்க முடியாது. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் விழிக்கும் மனசாட்சி கடந்த காலத்தின் வழியே ராகப்பாவை உற்றுப்பார்க்க, அவன் குற்றவுணர்ச்சி தாங்காது பிதற்றி பிதற்றி மன உளைச்சலில் இறந்து போகிறான். ஏறத்தாழ அனைத்து கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளை இயக்குபவனே ராகப்பாதான் என்று கூறலாம்.அவனது இறப்பையும் கூட இந்த வகையிலே பாவத்தின் சம்பளம் என்றே கொல்லலாமா என்று கூற முடியுமா என்று தெரியவில்லை ஆனால் அதை நம்மால் எளிதாக எடுத்துக்கொள்ள முடிகிறது. கடந்த கால நினைவுகளின் பிரவாகம் இறுதியில் ராகப்பாவை தன்னோடே இழுத்துச் செல்கிறது என்று கருதிக்கொள்ளலாம்.
இறுதிப்பகுதியில் நிகழும் இரு மரணங்கள் நமக்கு வேறு வழியேயில்லை என்பதுபோல் வாழ்க்கையை அருகில் காட்டுகிறது. கங்கவ்வா தன் மருமகளோடு அதிக பிணக்குகள் இருந்தாலும் மெல்ல அவற்றுக்கு பழகி கொள்கிறாள். அனைவரும் மெல்ல புதிய சூழலுக்கு பழகத் தொடங்குகிறார்கள். நாவல் முடிவது போலத் தோன்றும். ஆனால் அச்சுதராவ் கடிதம் வழி தொடங்குவது போல்தான் எனக்குப் படுகிறது.