நூல்வெளி2: பன்றித்தீனி

புதிய கலாச்சாரத்தின் சிறுவெளியீடான பன்றித்தீனி நூல் நாம் நடைமுறை வாழ்வில் உண்டுகொண்டு இருக்கும் நெஸ்லே பொருட்கள், கோககோலா, பெப்ஸி உள்ளிட்ட பொருட்களின் பின்னேயுள்ள அரசியல் முதற்கொண்டு அதனால் நமது உடல் என்னமாதிரியான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறது என்பது வரையிலும் தெளிவாக எடுத்துரைக்கிற நூலாக உள்ளது.
   
           நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைக்கு அரசு தடை விதித்துள்ளதைக் குறித்து தொடங்கும் கட்டுரை, அந்நிறுவனம் தனது பால் விற்பனைக்காக தென்னாப்பிரிக்காவில் புட்டிப்பால் சிறந்தது என்று கூறி பல லட்சம் மக்களை கொன்றழித்தது பற்றியும், அந்நிறுவனத்தில் நீர் வணிகம் எப்படி அப்பட்டமான நுகர்வுச்சூழலை உருவாக்கி ஏழை அடித்தட்டு மக்களை மெல்லக் கொல்லுகிறது என்பதையும் விரிவாகப் பேசுகிறது.

            கோலா பானங்கள் குறித்த கட்டுரை அவற்றின் அரசியல் லாபிகள் குறித்தும் தாராளமயமாக்கல் சூழலில் உள்ளே நுழைந்து இந்திய நிறுவனமான பார்லே நிறுவனத்தில் வியாபாரத்தை முற்றிலும் ஒடுக்கியதோடு அந்நிறுவனத்தின் குளிர்பானப் பிரிவையும் அடிமாட்டு விலைக்கு தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது குறித்தும் விரிவாக ஆழமாக பேசுகிற கட்டுரையாகும். இதில் இந்த இரு நிறுவனங்களுமே இந்தியாவில் இயற்கையாக கிடைக்கும் எலுமிச்சையோ, அல்லது திராட்சை உள்ளிட்டவற்றை தங்களது குளிர்பானங்களுக்கு பயன்படுத்தாமல், குறிப்பிட்ட ரகசியமாக பாதுக்காக்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு நமது நீரை எடுத்து மிக சகாயமான விலைக்கு தொழிற்சாலையை நிறுவி வேலைவாய்ப்பு என்ற பெயரில் அடிக்கும் அப்பட்டமான கொள்ளை குறித்துப் பேசும் கட்டுரை இது. இதே நோக்கில்தான் ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் கோலா நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு அந்நிறுவனம் அதனைத் தொடங்கும் நேரத்தில் அந்நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளை கண்டறிந்த மக்கள் அதைத் தடுத்து நிறுத்த முயன்றனர். தேர்தலில் வாக்கு போட்டபின் மக்கள் பிரதிநிதிதான் பன்னாட்டு நிறுவனப் பிரதிநிதி ஆகிவிடுவாரே! அமைச்சர் தன் கூலிப்படை போல செயல்படும் காவல்துறையை மக்கள் மீது ஏவி தன் நிறுவன விசுவாசத்தை பகிரங்கமாக அனைவருக்கும் தெரிவித்தார். பின் சட்டமன்றத்தில் கோலா நிறுவனத்திற்கு அனுமதியே தரவில்லை என்று புளுகுமூட்டையையும் அவிழ்த்தார். அது சரி, பணம் எஜமானன் ஆகும் போது, மக்களின் உயிருக்கு என்ன மதிப்பிருக்கப் போகிறது?
   கேரளா பாலக்காடு, ராஜஸ்தான்  என கோலா நிறுவனம் சென்ற இடங்களெல்லாம் நீரின்றி மக்கள் வறண்டு காய்ந்து போனார்கள். இது குறித்த தரவுகள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ள கட்டுரை இது.

     அடுத்து இயற்கை உணவு என்று புதிய வகை வணிக உத்திகள் நம் சந்தையில் ஊடுருவியுள்ளன. ஏறத்தாழ இதை ஒரு பயமுறுத்தல் வணிகம் என்று கூட சொல்லமுடியும். உரமிடாத உணவு தானியங்கள் ஏழை மக்களுக்கு கைக்கு எட்டாத தொலைவில்தான் இன்றும் உள்ளன. சாதாரண மனிதன் ஒருவன் தன் அறிவின் மூலம் ஓரளவு தூயதை அடையாளம் கண்டுவிட முடியும். அதாவது அதிக வேதிப்பொருட்கள் கொண்ட விளம்பரப்படுத்தப்படும் குளியல் சோப்பு என்பதைத் தவிர்த்து சர்வோதய சங்கத்தில் விற்கப்படும் விதிமுறைக்குள்ளான வேதிப்பொருட்களினால் உருவாக்கப்படும் சோப்பு அவை சார்ந்த பொருட்கள் என்று தேடிப் பெறலாம். ஆனால் வசதி படைத்தவர்கள் இயற்கை சார்ந்தது, வேதிப்பொருட்கள் இல்லை என்று கூறுவது பொருட்களை வாங்குவது என்பது தங்களின் பொருளாதாரம் சார்ந்து யோசிக்கின்ற சிந்தனையே என்று கூறும் கட்டுரை இது.

         காவிக்கட்சி தன் கொள்கையை தன்னளவில் வெகு தைரியமாக ஆணவப்போக்குடன் முன்னெடுத்து வருவதைக்கூறும் கட்டுரைதான் முட்டைக்குத் தடை. மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஹரியானா என காவிக்கட்சி அரசாளும் பல மாநிலங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்படுவது குறித்து எ வ்வித கவலையுமில்லாமல் அரசு சர்வாதிகாரமாக முட்டைக்கு தடை விதித்துள்ளது.  முட்டை என்பது எளிமையான ஒரு சரிவிகித உணவாக பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிய உணவில் அனுமதிக்கப்படும் நிலையில் இந்த தடை வளரும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பலத்தை ஏற்படுத்தித் தரும்? என்பது முரட்டு பாசிசவாதிகளுக்கே வெளிச்சம். இந்த கட்டுரையை படித்து அவ்வளவு எளிதில் நம்மால் கடந்துவிட முடியவில்லை. இதுபோன்ற பழமைவாத முறையில் ஆட்சியாளர்கள் நிலப்பரப்பினை அங்கு வாழும் ஏழை மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் திட்டங்களைத் தீட்டி யாரை அவர்கள் குளிர்விக்க நினைக்கிறார்கள் என்ற கோபம் வராமல்  இந்த கட்டுரையின் இறுதி வரியை உங்களால் வாசிக முடியாது.

   அஜினமோட்டோ , சப்பை மூளை தொப்பை வயிறு, மெக்டொனால்டு என பல கட்டுரைகளும் பேசுவது நாம் உணவு குறித்து எவ்வளவு கவனமாக இருக்கிறோம்? என்பதைக் குறித்தே. அரசு எந்த நிறுவனத்தையும் அனுமதிப்பதோடு சரி, அவற்றினை எந்த அளவிலும் தரச்சோதனைக்கு உட்படுத்துவதில்லை என்பதை நாம் மேகி விவகாரத்திலேயே அறிய முடியும். நாட்டுமக்களின் நலனில் ஆர்வம் அந்த மட்டுக்குத்தான் அரசுக்கு இருக்கிறது. மேலும் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து வாடிக்கையாளர்களான மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் என்பதுதான் சரியான தற்காப்பாக இக்காலத்தில் இருக்கமுடியும். ஏனெனில் இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் இறந்தால் அது பெரும் விவகாரமாக உருவெடுக்கும். ஆனால் இந்தியாவில் அது வெறும் எண்கள்தான். அதுவும் குறைவாக குறிக்கப்படும் எண்கள்தான். மேலும் இறக்கும் மக்கள் மாசுபட்ட நச்சு உணவினால்தான் இறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று எளிய மக்களின் தன்மானத்தை சிதைக்கும் வகையில் அமைச்சர்கள் நெஞ்சிலே நீதியில்லாமல் பேச முடியும். ஏனெனில் இது இந்தியா!

விழிப்புணர்வாக இருப்பது குறித்தும் நிறுவனங்களின் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரையிலான பல்வேறு கட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கமாக பேசுகிறது இந்நூல்.