சமூகத்தின் முன் எழுப்பப்படும் கேள்விகள்தான் க்யூ: சஞ்சீவ் குப்தா
உத்திரப்பிரதேசம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த இயக்குநர் சஞ்சீப் குப்தா தனது க்யூ(q) படத்திற்கு 2015 ஆண்டிற்கான கொலுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது பெற்றிருக்கிறார்.
தங்களின் படமான க்யூ எதைப்பற்றியது?
8000 ரூபாய்க்கு விற்கப்படும் எட்டு வயதான சிறுமியின் பயணம் குறித்தது ஆகும். விலைக்கு விற்கப்பட்ட சிறுமி மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு குடும்பத்துடன் வாழ்கிறாள். அந்த குடும்பத்திற்கென ஒரு இலக்கு உள்ளது. ஆனால் சிறுமிக்கு வரும் காய்ச்சல் காரணமாக அந்த இலக்கு தவறுகிறது. அங்கு வாழும் ஒரு பெண்மணிக்கு அவளோடு எந்த உறவும் ஏற்படாமல் பிரிக்கப்பட்டு இருக்கிறாள். அவளின் குழந்தையோடு சிறுமிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு என்னவானது என்பதுதான் படம்.
க்யூ என்று உங்கள் படத்திற்கு பெயர் வைத்ததன் காரணம் என்ன? க்யூ எதைக் குறிக்கிறது?
இதில் பல கேள்விகள் சமூகத்திற்கு முன்பாக எழுப்பப்படுகிறது என்பதால் அதன் அடையாளமாய் படத்தின் தலைப்பு க்யூ என்பதாக உள்ளது. 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் இறுதி 20 நிமிடங்கள்தான் பார்வையாளர்களுக்கு முழுப்படத்தையும் புரிந்துகொள்ள உதவும் பகுதி என்று கூறலாம். பார்த்த உடனேயே இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
தங்களின் கல்விப்பின்னணி குறித்து கூறுங்கள்.
2006 இல் இந்தூர் ஊடக கல்லூரியில் எனது படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். பிறகு மும்பை சென்று படம் இயக்க முயன்றபோதுதான் படிப்பிற்கும் யதார்த்த விஷயங்களுக்குமான இடைவெளியை அறிந்துகொள்ள முடிந்தது. எனவே பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் வேலை செய்து படங்களை உருவாக்குவது குறித்து சிறிது சிறிதாக அறிந்துகொண்டேன். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு என் முதல் படத்தை உருவாக்கியுள்ளேன்.
உண்மையான வாழ்க்கை நிகழ்வை கொண்டு உருவாக்கப்பட்ட கதையா இப்படம்? ஏன் வேறு கதைக்கருக்களை நீங்கள் பரிசீலனை செய்யவில்லையா?
இது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவமல்ல. ஆனால் நடக்கும் வாய்ப்பு கொண்ட கதை இது. எனக்கு சமூகத்திற்கான விஷயங்கள் தேவைகள் நிறைவேற்றுவது பிடிக்கும். என்னுடைய பணி அனுபவத்தில் இதுபோன்ற கதைக்கருவை யாரும் கையாளவில்லை. குழந்தைகளோடு இணைந்த கதை என்பது தற்செயலானது அல்ல.
படத்தின் நோக்கமாக நீங்கள் கருதுவது என்ன?
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் முக்கியமானதுதான் என்று படம் கூறுகிறது. உங்களது பலன்களுக்காக மற்றவர்களை பயன்படுத்துவது தவறு என்று படம் கூற விழைகிறது. இதனை வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் வாழு, வாழவிடு என்று என்று கொள்ளலாம்.
கொலுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது கிடைத்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் இந்த விருது முக்கியமானது என்றே கூறுவேன். இந்த அமைப்பு வழங்கும் விருது ஆண்டிற்கு ஒரு முறை சிறந்த அறிமுக இயக்குநர் என்னும் பிரிவில் வழங்குகிறார்கள் என்பதிலேயே சிறப்பான விருது என்று கூறலாம்.
ஆங்கிலத்தில் : மணிகண்டன் கே.ஆர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 12.8.2015
தமிழில்: லாய்ட்டர் லூன்