உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான் தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க்

உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான்தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க்எட்னா ஃபைனாரு – 1991

ஆங்கிலத்தில்: டேன் ஃபைனாரு
தமிழில்: லாய்ட்டர் லூன்








தற்போது நீங்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்திருக்கிறீர்கள் – அதாவது தொலைக்காட்சி நிருபராக இருக்கும் முக்கிய கதாபாத்திரம் ஒருவர் குறித்து உருவாகியிருக்கும் உங்களது படத்தினைக் குறித்து உரையாடலாம். தொலைக்காட்சி பார்ப்பது என்பதில் உங்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றே படுகிறது.

      ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? அண்மையில் தி பேட்டில்ஷிப் பொடம்கின் படத்தை தொலைக்காட்சியில் பார்க்க முனைந்தேன். ஆனால் அது விரைவிலேயே இயலாத ஒன்றாக மாறிவிட்டது. பெர்க்மன் படம் தொலைக்காட்சியில் பார்க்க பொருத்தமாக இருக்கும். வலிமையான உணர்ச்சிகள், ஏராளமான அண்மைக்காட்சிகள் என உள்ளே உள்ள விஷயங்களை அவை தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டாலும் எதுவும் இழக்கப்படாது உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம். ஆனால் ஒரு படம் மிகுதியான அளவு அமைதியை நீண்ட நேரம் கொண்ட இயற்கைக் காட்சிகளை வசனங்களுக்கு இணையா க கொண்டிருக்கும் படத்திற்கு தொலைக்காட்சி முழுமையாக நியாயம் வழங்கிவிட முடியாது. இங்கு நான் என் படங்களை மட்டும் பேசவில்லை. பெரும் பொருட்செலவில் உருவாகும் வரலாற்றுப் படங்களைக் குறித்தும்தான் பேசுகிறேன். தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க் படத்தில் வரும் திருமணக்காட்சி குறித்து அனைவரும் கேட்கிறார்கள். திரையரங்கில் அமைதியாக பார்த்தால் மட்டுமே வசனமே இல்லாத அப்பகுதியின் தன்மையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். சிறியளவு சத்தம் வந்தால் உதாரணமாக அவர்கள் நாற்காலியை நகர்த்தும் ஒலி கூட அக்காட்சியின் தன்மையை உள்வாங்கிக்கொள்ளும் தன்மையை தடுத்துவிடும். அமைதி என்பதை வசனத்திற்கு உண்டான அர்த்தத்துடன் கவனிக்க வேண்டும்.
      தொலைக்காட்சியின் முன்பு குழந்தைகள் அழுவதும், கைபேசிகள் ஒலிப்பதுமாக இருந்தால் படம் பார்த்து அதனை உள்வாங்கிக் கொள்ள அங்கே அமைதி என்பது எங்கே இருக்கிறது?

படத்தின் கதை கூறும் முறை என்பது தொலைக்காட்சி நிருபரின் பார்வையில் இருக்கிறது. இதை ஒரு தந்திரமாக கொண்டு இருக்கிறீர்களா?

      உண்மை என்னவென்றால் எனக்கு அந்த தொலைக்காட்சி நிருபரின் பார்வை என்பது இதுவரை நான் ஈடுபடாத ஒன்று. அண்மைக் காட்சிகள் என்பவை பொதுவாக என் படத்தில் இடம் பெற்றிருக்காது. ஜொனமொரியாவ் தன் கணவன் இறந்து போனதை அறிவிக்கும் காட்சி, தொலைக்காட்சி குழுவை உருவாக்கிய மனிதனை தனக்கானவன் அவனல்ல என்று கூறும் காட்சிகளை நீளமான அண்மைக்காட்சிகள் தொலைக்காட்சி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு உண்மையிலேயே நன்றி சொல்லவேண்டும். அண்மைக் காட்சிகள் என்பதை அந்த சூழலுக்கு அவசியம் என்பதோடு,  கேமராவின் இயல்பான நகர்வை திடீரென நடுவில் கலைக்க விரும்பவில்லை. தொலைக்காட்சிகள் நிருபர் என்பவரை சுற்றி கதை நகர்வதற்கு சில துணைக்காரணங்களும் உள்ளன. தொலைக்காட்சி நிருபர் என்பதில் இப்படத்தில் தான் சந்தித்து பதிவு செய்த மனிதர்கள் குறித்தும் தனது செயல்பாடுகள் குறித்தும் கறாரான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பவராக இருக்கிறார். தொலைக்காட்சி மாதிரி இல்லாமல் சினிமாவில் இருளான பகுதிகள் குறித்து கதை மற்றும் உள்ளிருக்கும் மனிதர்கள் குறித்தும் விரிவாக பேசமுடிகிறது.

மூடுபனிக்காலம் படமானது மிக அந்தரங்கமான தனி வாழ்க்கைக்குரிய படமாக உள்ளது. இந்தப் படத்தில் நீங்கள் தங்களுடைய பார்வைகளை முன்னெடுப்பதை தள்ளி வைத்திருக்கிறீர்கள்.

      முதலில் இது ஒரு வேறுபட்ட திரைப்படம். அதிக வரலாறு, நம்பிக்கை, கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டது. தொலைந்து போன மனிதனைச் சுற்றி மெல்ல உருவாகும் மர்மமான விஷயங்கள் குறித்து இங்கு குறிப்பிடவில்லை. எனவே இந்தக் காரணங்களுக்காகவே இந்த மனிதரோடு நீங்கள் நெருக்கமாக இணையமுடியாமல் போகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் அண்மைக்காட்சி என்பது நேர்மையற்றவையாக, அந்தரங்கத்தில் அத்துமீறி உள் நுழைவதாக மாறி அவர் விரும்பாவிட்டாலும் அவரை உலகிற்கு வெளிக்காட்டுவதாக அமைகிறது. இந்த முறையில் அவரின் ரகசியங்களை யாரிடமும் வெளியிடாமல் பெருமளவு அவரது முடிவுகளை மறைப்பதன் மூலம் உண்மைக்கும் புனைவுக்கும் இடையில் உள்ள அவரது யாரும் இதுவரை அறிந்திராத பகுதி பாதுகாப்பாக இருக்கும்.
உங்களது ஒவ்வொரு புதிய படமும் விதியினால் இடம் மாறிய மனிதர்கள், குடிபெயர்ந்த மனிதர்கள், அகதிகள் குறித்து அதிகம் பேசுவதாகத் தோன்றுகிறது. மூடுபனிநிலம் படத்தில் குழந்தைகளின் தந்தை கூட இது போன்ற மனிதர்களில் ஒருவர்தான். தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் ஸ்டோர்க் படத்தில் அகதிகள் குழுவின் மீது கவனத்தை குவித்துள்ளீர்கள்.

      குடியேற்றம் தங்களுடைய நாட்டினை விட்டுவிட்டு குடியேறுவது நாட்டின் எல்லைகளைக் கடந்து குடியிருப்புகளை அமைப்பது என நம் காலத்தில் அதிகமாகி வரும் சமூக பிரச்சினை இது என்று கூறலாம். பழமையான கருத்தியலின் முறிவு அல்லது நெறிகளின் போதாமை என ரகசியமான காரணம் அல்லது இலக்கு என இது போன்ற குடியேற்றங்கள் பிரிந்து சென்று நிகழ்கின்றன. நெறிமுறைகளின் அதிகாரம் கொண்டவர் என்று கொள்ளலாம். படத்தில் அவர் காணாமல் போவது என்பது நெறிமுறை முற்றிலும் தவறி வேறுவிதமாக மாறுகிறது. இது செயல் குறித்து கருத்து என்பதல்ல. இது ஓர் உண்மை அவ்வளவுதான். இன்றைய சினிமா வெளிப்படையாக தெரியும் இந்த சீழ்வழியும் புண்ணை கண்டுகொள்ளாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறது. எ.கா: உலகம் கலைஞர்களை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலிப்பது உள்ளிட்ட கதைகள் என்பதைக் கூறலாம். கலைஞன் மற்றும் அவனது மாதிரி குறித்து எடுக்கப்படும் படமானது, ப்ரெஞ்ச் பார்வையில் உலகத்தைக் காண்பது போல் இருக்கும். இன்று அமெரிக்கர்கள் கூட சமூகம், அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

நாம் நமது தாய்நாட்டிலேயே ஏறக்குறைய சிறிய அல்லது பெரும் அகதிகள் கூட்டமாகத்தான் வாழ்ந்து வருகிறோம் என்று கூறுகிறீர்களா?

      ஆமாம். நாம் அனைவருமே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள்தான். உங்களிடம் ஒரு உண்மையைக் கூறட்டுமா, எனது நாட்டிலேயே நான் என்னை ஒரு அகதி போலவே உணர்கிறேன். சில சமயங்களில் படத்தில் மாஸ்ட்ரோய்யன்னி கூறுவது போல தாய்நாட்டிலேயே அரசியல் அகதியாக இருக்கிறேன் என்று சொல்லக்கூட தோன்றுகிறது.