நூல்வெளி2: நம் காலத்து நாயகன்

நம் காலத்துக்கு நாயகன்
மி.யூ. லேர்மன்தவ்
தமிழில்: பூ.சோமசுந்தரம்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.80 










போர்படையில் குறிப்பிட்ட பதவி வகிக்கும் ஒருவர் தன் பயண வழியில் படைப்பிரிவில் முக்கியமான பதவி வகிக்கும் மக்ஸீம் மக்ஸீமிச் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மெல்ல தன் வாழ்க்கையை போர்ப்படை வீரரிடம் கூறுகிறார். அப்போதுதான் பிச்சோரின் என்னும் மனிதரைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார். இந்நாவலின் நாயகனும் பிச்சோரின்தான். ஆனால் உண்மையில் இவனை நீங்கள் ஏற்றுக்கொள்வது என்பது மிக கடினமான ஒன்றே. ஆனால் நாயகர்கள் எல்லோரும் உண்மையில் அகம் புறம் இருபத்திநான்கு மணி நேரமும், ஏழு நாட்களும் எப்படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வரும் பிச்சோரின் செய்வதையெல்லாம் பார்த்தால்.

கதையில் வரும் மக்ஸீம் பிச்சோரின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். ஆனால் பிச்சோரின் அவரைச் சந்தித்தாலும் முடிந்தவரை அவரைத் தவிர்த்து விட்டு கிளம்பவே விரும்புகிறான். அவன் எழுதிய குறிப்புகளை தன் வண்டிக்குள் வைத்திருக்கிற மக்ஸீம், அதை தனது பயண வழி நண்பரிடம் கொடுக்க மக்ஸீம் சொல்லி முடித்தவரையிலான கதை மெல்ல பிச்சோரின் எழுதி வைத்த குறிப்புகளை பயணவழி வீரர் வாசிப்பதன் வழியாக கதை வளருகிறது.

குறுமன்னன் ஒருவனின் மகளை வசீகரித்து மணமுடிக்க பிச்சோரின் செய்யும் தந்திரங்கள் காஸ்பிச் என்பவனின் திட்டங்களையே முறியடித்துவிடுகிறது என்றாலும் அப்படிப்பெற்ற வாழ்வும் பிச்சோரினுக்கு கடும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இடையறாது காட்டில் வேட்டையில் ஈடுபடுகிறான். அது மட்டுமே அவனுக்கு மனதில் நிம்மதியை ஏற்படுத்துகிறது. பேலாவும் தனது குடும்பத்தினரைப் பார்க்க ஏங்கி தன்னை அங்கே சென்று வர பிச்சோரினிடம் கோருகிறாள். ஆனால் அதற்கு அவன் மறுத்துவிடுகிறான். பேலாவை இழந்ததோடு தன் அற்புதமான குதிரையை இழந்துவிடுவதற்கு காரணமான பிச்சோரினை பழிதீர்க்கும் திட்டத்துடன் இருக்கும் காஸ்பிச் என்பவனின் வாளால் பேலாவுக்கு முடிவு நேருகிறது.

அடுத்த காதலும் பிச்சோரினின் வாழ்க்கையில் வருகிறது இளவரசி மேரியின் வழியாக. ஆனால் அது நண்பர்கள் உள்பட பலரின் எதிர்ப்பு, பொறாமைகளுக்கு இடையை நிகழ்கிறது என்றாலும் இறுதியில் வெற்றி பெறுவது பிச்சோரின்தான்.

இந்நாவல் பிச்சோரினின் வாழ்வை நடுவிலிருந்து முன் பின்னாக அணுகி நிறைய விஷயங்களைப் பேசுகிறது. சற்று கவனமாக ஆழமாக படித்தால் இதில் எழுதியிருப்பது தாண்டி இன்னும் பல விஷயங்கள் புரியவரும். இதை எழுதியுள்ள எழுத்தாளரும் எதிர்ப்பார்ப்பது அதுதான். மொழிபெயர்ப்பாளரின் உழைப்பு இந்நூலில் அதிகம்தான். சரியாகவே தன் உழைப்பைச் செய்திருக்கிறார் என்று கூறவேண்டும். தேசத்தைக் காப்பாற்றும் வழக்கமான கதைகளுக்கு இடையில் இது தனிமனித சுதந்திரத்தை வலுவான குரலில் வெளிப்படுத்தும் நேர்மையான நூல் என்று கூறலாம்.