நூல்வெளி2: வாழ்க்கைக்கான மருந்து இது

மருந்தென வேண்டாவாம்
மருத்துவர் கு. சிவராமன்
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்









       மருத்துவர் கு. சிவராமன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய  இந்நூல் ஈரோடு புத்தகச்சந்தையில் கூட 'டாக்டரு புதுசா சீசனுக்கு எழுதியிருக்காரு போல' என்று மக்களால் பரபரப்பாக வாங்கப்படும் உணவு குறித்த முக்கியமான நூல்தான். ஐந்தாம் பதிப்பு விரைவில் காணும் என்று நினைக்கிறேன். குமுதம் சிநேகிதியில் தொடராக வெளிவந்து பின் லோகத்தின்ட தோஸ்த் நிறுவனத்தினால் புத்தகமாக போடப்பட்டுள்ளது. 

        இந்நூலில் மரு. சிவராமன் தமிழ்நாட்டு பருவநிலைக்கு ஏற்றபடியான உணவுவகைகளை ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதாமல் நமது நண்பர் ஒருவர் மருத்துவமும் தெரிந்திருந்தால் எப்படி நமக்கு அந்த மருந்துகள் குறித்து கூறுவாரோ அதுபோல மிக எளிமையான எழுத்துக்களால் பகிர்கிறார். இந்நூலை வெறும் உணவு குறித்த நூல் என்று எண்ணிப் படிக்கத்தொடங்கும் ஒருவரை கட்டிப்போட்டு வசீகரிப்பதும் அதுதான்.  

       கொள்ளு, வாழை, வெங்காயம், மிளகு குறித்து கூறும் தகவல்களோடு அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சில உணவு முறைகளை எழுதியுள்ளார். அவை நிச்சயம் நகரத்தார் சமூகத்திற்கு பயன்படக்கூடியவையே.  நார் சத்து சார்ந்த உணவுகள் குறித்தும் ஆழமான மருத்துவ விவரங்களைப் பேசி களைப்படையச்செய்யாமல் எளிதாக யாருக்கும் புரியும் வண்ணம் அவ்வுணவுகளை எப்படி உணவில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருப்பது அழகு. குழந்தைகளுக்கு, முதியவர்களுக்கு என தனித்தனி அத்தியாயங்களில் எளிய உணவுகள் செரிமானத்திற்கும் மருந்தினைத் தேட வேண்டிய தயவில்லாமல் இருக்கவும் எழுதப்பட்டுள்ளது சிறப்பு. வேதிச்சேர்மானங்கள் போல சத்துக்களையும் , கலோரிகளையும்  தேடாமல் குறிப்பிட்ட பருவத்திற்கு என உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து உண்டாலே நோய்கள் வராது என்று உறுதியாக கூறும் நூல் இது. 

         கு.சிவராமன் தொடங்கி வைத்த இயற்கை உணவு முறையால் இயற்கை அங்காடிகள் வணிகம் சிறப்பாக வளரத்தொடங்கியுள்ளது. மேலும் இதில் சமைக்காத பழங்களை சில காய்கறிகளை உண்ணும் பழக்கம் குறித்த கேள்விக்கும் பதில் இந்நூலில் ஒரு அத்தியாயமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அது சில முரட்டு இயற்கை விரும்பிகளுக்கு உதவும் என்று நிச்சயம் நம்பலாம். 


          வெறும் மூலிகைகள், கற்பூராதி தைலங்கள், கடுக்காய் சூரணங்கள், கந்தக ரசாயனம் என்றெல்லாம் வறட்டுத்தனமாக பேசாமல் எளிமையாக வாழ்வில் நாம் சந்திக்கும் தருணங்களிலெல்லாம்  மருத்துவத்தை நுழைத்து மருந்தைக் காட்டிலும் மனிதர்கள் இருக்கும் சூழல் மிக முக்கியம். அன்பான வார்த்தைகள் அவசியம் என்று தன்மையாக பேசும் இடத்தில்தான் சிவராமன் அவர்களின் எழுத்தின் மேல் நம்பிக்கை பிறக்கிறது. அதனால்தான் புத்தகச்சந்தைக்கு செல்பவர்கள் சிவராமன் நூலைத் தேர்ந்து  வாங்குகிறார்கள். இந்த கட்டுரை மொழியை வளர்த்தெடுக்க குமுதம், ஆனந்தவிகடன் குழு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நிச்சயம் சிவராமன் அவர்களுக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். இப்போது பாருங்கள் நான் இதை எழுதும் வேளையில் கூட ஆனந்தவிகடனில் அடுத்த தொடரை சிவராமன் எழுதத் தொடங்கலாம். மருத்துவத்தை உணர்வும் நெகிழ்வுமாக எழுத ஆளேயில்லை. என்ன செய்வது? என்னதான் சொல்லுங்கள். நிகழ்காலத்தின் ட்ரெண்டிங் நாடி பிடித்து அடி கிளப்புகிறார் சிவராமன். இதுவும் மற்றொருமொரு சிறப்பான விற்பனை தரும் நூல் எனலாம்.