இழந்த தாய்நிலத்தை மீட்க போராடத் தூண்டும் கவிதைகள்!

 



 

பலஸ்தீன கவிதைகள்
தமிழில் நுஃமான்
நூலகம்

இது, சிறிய கவிதை நூல். மொத்தம் ஒன்பது பலஸ்தீன கவிஞர்கள் எழுதிய முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது. பலஸ்தீனம், இனப்படுகொலைக்கு உள்ளாகி மெல்ல அழிந்து வருகிறது. இன்று அமெரிக்கா, அழிந்த பலஸ்தீனத்தில் சொகுசு விடுதிகள், ஆடம்பர இல்லங்கள் கட்டினால் சிறப்பாக இருக்கும் என எகத்தாளமாக இனப்படுகொலையை ஆதரித்து பேசி வருகிறது.

இப்படியான சூழலில் இக்கவிதைகளை நாம் வாசித்தோம் என்றால், அதன் அழுத்ததை புரிந்துகொள்ள முடியும். இனப்படுகொலை, தடுப்புக்காவல், சித்திரவதை, சிறை, பசி, பட்டினி, கல்வியின்மை, எதிர்காலம் பற்றிய இலக்கின்மை, வறுமை, போரில் மரணமடைந்த வீரர்கள், பலஸ்தீனியர்களுக்குள் உள்ள துரோகிகளால் வீழும் மக்கள் என நிறைய விஷயங்களை கவிதைகள் அழுத்தமாக பல்வேறு உருவகங்களை முன்வைத்து பேசுகிறது. பெரும்பாலும் அவற்றை ஒருமுறை வாசிக்கும்போதே முழு அரசியல், சமூக, பொருளாதார சூழலை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.

பேரினவாதம் பேசுவோர், எதிரினத்தை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என வன்ம வாதத்தை முன்வைப்பார்கள். அப்படியான கருத்தில் மஹ்மூத் தார்விஷ் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். ரொட்டித்துண்டுக்கோ, வாசிக்கும் நூலுக்கோ கூட பணிய மாட்டேன். முழந்தாளிட மாட்டேன் என்கிறார். அப்படியான கவிஞரின் நெஞ்சுரம் ஆச்சரியமூட்டுகிறது. பசிக்கொடுமையைப் பற்றி ஓரிடத்தில் தன்னிடம் கொள்ளையிட்டவன் தசையினை புசிப்பேன் என ஆக்ரோஷம் காட்டுகிறார். இப்படி கூறும் வரிகளுக்கு முந்தைய வரிகளில் வெறுப்பு காட்டியவனில்லை, கொள்ளை அடித்தவனில்லை என்று சொல்லியிருக்கிறார். எவ்வளவு தூரம் அநீதிகள் ஒருவர் பொறுத்துக்கொள்ள முடியும் என்ற வகையில் இக்கவிதையை நாம் புரிந்துகொள்ளலாம்.

போருக்குச் சென்ற மகன் இறந்துபோனது தெரியாமல், அவன் வருவான் என தினமும் காத்திருக்கும் தாயைப் பற்றிய கவிதை, வாசிப்போரை கரைய வைத்துவிடுகிறது.

றஷீத் ஹூசைனின் கவிதையில், பலஸ்தீனியர்களுக்குளே இருந்து இனப்படுகொலைகாரர்களுக்கு ஆதரவாக உள்ள துரோகிகளை சாடி ஒரு கவிதை உள்ளது. காலம் கடந்தும் கூட பிழைப்புவாதிகளின் மனதில் தைக்கும் சொற்கள் அதில் உண்டு.  தூக்குமேடை தயாரிப்புக்கான பொருட்களைக் கேட்டு பிறகு, அவர்கள் செய்த குற்றங்களை பட்டியலிடுகிறார்.

சலீப் ஜூப்றானின் கவிதையில், தூக்கிலிடப்பட்டு இறந்துபோன அராபியன் யார் எனக்கேட்டு கவிதை வளர்கிறது. இஸ்ரேலியர்கள்தான் அவனை கொன்றனர். அப்படி கொல்லப்படுவதற்கு அவன் ஜெர்மனியில் பிறந்த யூதன் அல்ல என யூதர்களுக்கு நடந்த கொடூரத்தை நினைவுறுத்துகிற கவிதை.

தௌபீக் சையத், கவிதை வழியாக தனது நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என பிடிவாதமாக மறுக்கிறார். பலஸ்தீன நிலம் தன்னுடைய வேர், அங்குதான் தான் வாழ்வதாக உறுதியாக கூறுகிறார். பலஸ்தீனியர்களை விரட்டும் இஸ்ரேலியர்களை எச்சரிக்க சுவர், கண்ணாடித் துண்டு, கள்ளி முள், எரியும் தழல் என பல்வேறு உருவகங்களைப் பயன்படுத்துகிறார். தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள இயற்கை வாழ்வினைக் கொண்டாடும் தன்மை கொண்ட கவிதைகள் இவருடையது.

அந்தொய்னே ஜபாறாவின் கவிதைகள், ஐ நா சபைக்கான முறையீடு. ஆனால், அதில் எதார்த்தமான காட்சிகள் சித்திரிப்புகள் உள்ளன. துப்பாக்கியும் உள்ளது. ஆலிவ் மரத்தின் கிளையும் உள்ளது. ஆலிவ் மரத்தின் கிளையை கீழே போட சொல்லி நிர்பந்தம் செய்யாதீர்கள் என்கிறார். கவிதையில் ஓரிடத்தில் பேச்சுக்களை விட துப்பாக்கிகளே சத்தமாக ஒலிக்கின்றன எனவும் கூறுகிறார்.

பத்வா துகான் கவிதைகளை படிக்கும் யாவருமே பலஸ்தீனத்தை திரும்ப கட்டுமானம் செய்ய, போரிட, இஸ்ரேலியர்களை அழிக்க உறுதி பூணுவார்கள். அந்தளவுக்கு கிளர்ச்சி உணர்வை வாசிக்கும் ஒவ்வொரு சொற்களிலும் ஊட்டுகிறார். சமீஹ் அல் காசிமின் கவிதைகளில் துரோகத்தை அடையாளம் கண்டு அதை எதிர்க்கும் ஆவேசம் வெளிப்படுகிறது. விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதையே முக்கிய அம்சமாக வெளிப்படுத்துகிறார். அதிலும் எட்டு வயது சிறுமியை இஸ்ரேலியர்கள் கைது செய்யும் கவிதை ஒன்றுள்ளது. ஐ.நா பேச்சுகளில் களைத்துப்போன மனதும் கவிஞருக்கு இருந்திருக்கிறது. அதையும் விரக்தியாக எழுதியுள்ளார். மூயின் பசைசோ, மக்கள் படுகொலை செய்யப்பட்டு அந்த ரத்தம் பார்த்தாவது எங்களைப் பற்றி உலகம் தெரிந்துகொள்ளட்டும் என கவிதையில் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய எதிர்த்துநில் என்ற கவிதை அற்புதமானது.

கோமாளிமேடை குழு


நன்றி
இளங்கோ டிசே
நூலகம்.ஆர்க்
மொழிபெயர்ப்பாளர் நுஃமான்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்