ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

 

 

 

 

 


 


மறுவாசிப்பு- தர்பாரி ராகம்
ஶ்ரீலால் சுக்ல
தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத்
நேஷனல் புக் ட்ரஸ்ட்

அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம்.

நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன.

சிவபால்கஞ்ச் எனும் கிராமம். இதுதான் தொன்மை இந்தியா. நவீன இந்தியா. அல்லது எதிர்கால இந்தியா என வைத்துக்கொள்ளலாம். அக்கிராமம், அங்குள்ள சங்காமல் என்ற பள்ளி, கூட்டுறவு நிறுவனம் அதை வைத்து அங்கு உருவாகிற அழுக்கான அரசியல், அந்த கிராமத்து மனிதர்களின் சாமியார்த்தனம், கல்வியறிவின்மை, பங்கி பானத்திற்கு அடிமையாகி உரிமைகளை இழந்து அடிமையாகி வாழ்கிற அவலம், மூடநம்பிக்கைக்கு தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை விட்டுக்கொடுக்கிற தன்மை, பூசாரிகளின் மாய்மாலம், அரசியல்வாதிகளின் பொய்கள், பிரசங்கங்கள் என அனைத்துமே இந்தியா முழுமைக்கும் பொருந்துகிறது. எழுதப்பட்ட காலம் மட்டுமல்ல இதோ இன்றைக்கும் பொருந்தும் நாளைக்கும் கூட பொருந்தும். வெளியில் கட்டிடங்கள், கையாளும் தொழில்நுட்பங்கள் என மாறினாலும் மனதளவில் எதுவுமே இங்கு மாறப்போவதில்லை அல்லவா?. கதையை தொடக்கத்தில் படித்தபோது, ஒரு கதையாகவே படித்தேன். ஆனால் அதிலுள்ள அங்கதம் பற்றி பெரிதாக உணரவில்லை. ஆனால், சில ஆண்டுகள் இடைவெளியில் படித்தபோது நிறைய விஷயங்கள் தென்பட்டன. குறிப்பாக, ஈர்த்தன என்று கூட கூறலாம். இந்தியா, அதிலுள்ள மக்கள், மக்களின் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தவறு என கூறும் நபர்கள், அரசியல்வாதிகள், குண்டர்கள், அரசு, அரசு அதிகாரிகள் என யாரையும் எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல விட்டு வைக்கவில்லை. அத்தனை பேரையும் தனது அங்கத எழுத்துக்களால் நையப் புடைக்கிறார். இறுதியாக அனைத்து உண்மைகளை அறிந்து, ரங்கநாத் ஏதும்செய்ய முடியாமல் இருக்கிறார். மனசாட்சி அவரை ஊரைவிட்டு வெளியேறு என கூறும்போது வரும் உரையாடல், சிறந்த முடிவை அளிக்கிறது. இரு குரங்குகளை வைத்து ஒருவன் ஆட்டம் காட்டுகிறான். அதைப் பார்க்க கிராமத்து மக்கள் கூடுகிறார்கள்.
இதுதான் நாவலின் முடிவு.
பார்ப்பன வைத்தியர், அவரது இரு மகன்கள் பயில்வான் பத்ரி, இளையவன் ரூப்பன். அடுத்து வைத்தியரின் சகோதரி மகன் ரங்கநாத், ஊரிலுள்ள வணிகர் கயாதீன், உரையாடல்களில் மட்டுமே வரும் அவரது ஒரே மகள் பேலா. பத்ரியின் சீடப்பிள்ளை சின்ன வஸ்தாது, பஞ்சாயத்து தலைவர் சனிஸ்வரன் (எ) மங்கள பிரசாத், பள்ளி முதல்வர், கன்னா மாஸ்டர்,மாளவியா, வயல் பத்திர நகலை வாங்க அலையும் நொண்டி பிரசாத், குடிநோயாளி ஜோக்நாத். அபின் விற்கும் ராமாதீன். இவர்கள்தான் தர்பாரி ராகத்தின் முதன்மை பாத்திரங்கள்.

இந்த நூலில் முழு இந்தியாவுமே அங்கதத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இதை வாசிக்கும் ஒருவருக்கு புன்னகையும், பிறகு வேதனையும் ஒன்றுவது இயல்பான ஒன்று. எழுத்தாளர் சுக்லவின் எழுத்து அப்படியான இயல்பைக் கொண்டுள்ளது. அரசியல்வாதிகள் பிரசங்கம் செய்வது பற்றி நிறைய இடங்களில் பகடி செய்யப்படுகிறது. குறிப்பாக, அரசியல்வாதி மக்களுக்காக சேவை செய்யவேண்டி கிராமத்தில் இருந்து நகரத்திற்கு சென்று வீடு கட்டிக்கொள்கிறார். அவருடைய வாழ்க்கை என்பது வெற்றுப் பேச்சு மட்டுமே. தனக்கு மூளையில் தோன்றியதை எல்லாம் பிரசங்கம் செய்கிறார். சங்காமல் கல்லூரியில் அப்படித்தான் கல்லூரி முடிந்தபிறகும் பிரசங்கம் செய்து கல்வித்துறை மீது புகார் கூறி, பேச்சளவில் வருந்துகிறார். அவர் காரில் வரும்போது, விவசாயிகள் முன்னேறியதற்கு தன்னுடைய பேச்சு காரணம் என எண்ணுகிறார். அதேசமயம். அவர்கள் இன்னும் விவசாயம்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் முன்னேறவில்லை என வருத்தமும் படுகிறார்.

காந்தி, நேரு என நவீனகால இந்திய சிற்பிகளும் கூட பகடியில் தப்பிக்க முடியவில்லை. சிலருக்கு இந்த நூலை வாசிக்கும்போது அங்கதமான பகுதிகள், கோபத்தை உண்டாக்கலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் நடைமுறை நூலை விட கொடூரமாக உள்ளது. ரங்கநாத், வேலையில்லாத பட்டதாரி. வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற பார்ப்பனர். அவர் வரலாறு சார்ந்து ஆராய்ச்சி செய்ய முயல்கிறார். அப்போது அவருக்கு சிவபால்கஞ்சில் உள்ள தேவிகோவில் நினைவுக்கு வருகிறது. அங்கு அவரது மாமா வைத்தியர் மகன் ரூப்பனுடன் செல்கிறார். தேவி சிலை என்பது உண்மையில் தேவி அல்ல. போர்வீரர் ஒருவரின் மார்பளவு சிலை. அதை பெண் தெய்வம் என்று சொல்லி முழு ஊரையே பூசாரி ஏமாற்றி சம்பாதிக்கிறான். அதைப் பற்றி கேள்வி கேட்கும் ரங்கநாத்தின் அடையாளம் கேள்வி கேட்கப்படுகிறது. நம்பிக்கையின் முன் உண்மை தேவைப்படுவதில்லை. அதை ஒருவர் உணர்ந்தாலும் கூட எத்தனை மூடர்களோடு மோதி வெல்ல முடியும்?

நூலில் தேர்தலில் வெல்வதற்கான மூன்று உத்திகள் கூறப்படுகின்றன. இந்த உத்திகளுக்கான மதிப்பு இன்றைக்கும் உள்ளது. உயர்சாதியாக மேல்தட்டில் உள்ள பார்ப்பனர்கள் ஆட்சியைப் பிடித்துவருகிற நிலையில், நூலில் உள்ள அத்தனை தேர்தல் உத்திகளையும் சூழலுக்கு ஏற்ப, நிலப்பரப்பிற்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அதில், வாக்களிக்க விடாமல் தடுப்பதை இன்றும் மதவாத கட்சி தனது குண்டர்களை வைத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதை வைத்துதான் வைத்தியர், கூட்டுறவு சங்கத்தின் அதிகாரம், கல்லூரியின் மேலாளர் ஆகிய பதவிகளைக் காப்பாற்றிக்கொள்கிறார். எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்லவின் சிந்தனை, எப்படி உருவாகியிருக்கும் என ஆச்சரியப்படுத்துகிறது. அவரது கருத்துகள் இன்றைக்குமே கூட பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் தலையில் பிறந்தவர்கள், பாதத்தை புறக்கணிக்கிறார்கள். சிலர் அதிகார வெறியில் வெட்டியே எறிகிறார்கள். பார்ப்பனர், தான் தேர்தலில் வெல்ல சாமியாரை கூட்டி வந்து தெய்வ பஜனைகளை பாட வைத்து அதன் வழியாக பார்ப்பனரை ஆதரிக்க கோருகிறார். அந்த வழிமுறை ஏற்கெனவே அதை பின்பற்றிய, மூடநம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளது. கூடுதாக கஞ்சா கலந்த பானம் வேறு புத்தியை மழுங்க வைக்கிறது. அப்புறம் என்ன தலையில் பிறந்தவர்கள் வெல்கிறார்கள். பாதத்தில் பிறந்தவர்கள் பியூன் வேலைக்கு தள்ளப்படுகிறார்கள். இப்படியான தர்மயுத்தம் நடத்தப்படுகிறது. தனித்துவமான இந்திய நீதி நிலைநாட்டப்படுகிறது.

பெண்களை சக மனிதர்களாக நடத்தாத ஒரு போக்கும் நூலில் பதிவுசெய்யப்படுகிறது. வணிகர் காயாதீனின்  வீட்டில் திருட்டு நடக்கிறது. அதைக் கண்டறிய வந்த காவல்துறையும், வீட்டில் இருந்த வணிகரின் தங்கை, மகள் மீதே சந்தேகப்படுகிறது. அதாவது அவர்களுடைய நடத்தை தவறானது என நம்புகின்றனர். இதேபோல, ஊரிலுள்ள பிறரும் நம்புவதற்கு விரும்புகிறார்கள். உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்படியே நம்புவோம் என முயல்கிறார்கள். இதன் நீட்சியாக நீதிமன்றத்தில் சின்ன வஸ்தாது, குற்றம் சாட்டப்பட்ட ஜோக்நாத்துடன் வணிகர் மகள் பேலாவுக்கு தவறான தொடர்பிருந்ததாக உறுதியாகவும் அலட்சியத்துடனும் கூறுகிறான். அவனுக்கு அப்பெண் மீது குற்றம் சாட்டுவது பற்றி எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. இந்த வினோத போக்கு, சிவபால் கஞ்சில் உள்ள பலரிடமும் உள்ளது. பயில்வான் பத்ரிக்கு, தான் திருமணம் செய்யப்போகும் பெண் என்ற வகையில் பேலா மீதான அவதூறுக்கு கோபம் கொள்கிறான்.அவ்வளவுதான். வைத்தியர் தீவிரமான சாதி வெறி கொண்டவர். அவரது தீவிரப்போக்கை, அநீதியை முற்றாக உணர்ந்த ஒரே பாத்திரமாக வணிகர் காயாதீன் இருக்கிறார். அவருக்கு பள்ளி ஆசிரியர் கன்னா, மாளவியா ஆகியோர் செய்யும் போராட்டத்தில் வெல்ல முடியாது என்பது முன்னரே தெரிந்துவிடுகிறது. அவர் சொல்வது பின்னர் அப்படியே உண்மையாகிறது. ஒட்டுமொத்த நூலிலும் துறவி போல அமைதியாக அனைத்தையும் கேட்டு உறுதியான கசப்பான உண்மைகளை கூறுபவர் காயாதீன் மட்டுமே. அவர் யாரையும் பேச்சில் காயப்படுத்துவது இல்லை. யார் பேச வந்தாலும் அமைதியாக கூற வருபவர்கள் கூறுவதை முதலில் கேட்கிறார். பிறகு தன்னுடைய கருத்தை கேட்கும்போது மட்டுமே பேசுகிறார். தர்பாரி ராகத்தில் பெண்கள் பற்றி அதிகம் பேசப்படவில்லை. முழுக்க ஊழல், லஞ்சம், வன்முறை என அனைத்துமே ஆண்களின் உலகமாக இருக்கிறது என காட்ட நினைத்தாரா என்று தெரியவில்லை. விலைமாது ஒருத்தியைப் பற்றி தேவி கோவிலுக்கு ரங்கநாத் சென்று திரும்பும்போதும், பேலா பற்றி ரங்கநாத், ரூப்பன், பத்ரி ஆகியோர் உரையாடல்களிலும் பேசப்படுகிறது.

பிறர் வாழ்க்கை அழிப்பவர்களும், அநீதி செய்பவர்களும் இடையறாது கடவுளை வணங்கியபடி இருக்கிறார்கள். குறிப்பாக வைத்தியர். அவர் நகரத்திற்கு ரூப்பன், பள்ளி முதல்வர் ஆகியோரோடு சென்று திரும்பும்போது கோஇல் ஒன்றில் அவர் செய்வது முழுக்க எதிரிகளை முற்றாக அழிக்க செய்யும் பிரார்த்தனைதான். தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பலருக்கும் லஞ்சம் ஊழல் கொடுக்கிறார். சூழ்ச்சி, சதி, உடல் வலிமை, பணம் ஆகியவற்றை வைத்தே அனைத்து விஷயங்களையும் செய்து ஊரை பின்தங்கிய நிலையில் வைத்து தன்னை உயர்த்திக்கொள்கிறார். பணத்தை கொள்ளையடித்துச் சென்ற திருடரை விட்டுவிட்டு, மத்திய அரசிடம் இருந்து மீண்டும் பணம் வாங்க முயலும் இடம் எல்லாம் சாமர்த்திய சிகரம் என சொல்லலாம். தர்பாரி ராகம் நூலை வாசிக்கும் ஒருவர், இந்தியராக உள்ள பட்சத்தில் பல்வேறு விஷயங்களை நினைத்து பார்த்து வருந்துவார் என்பது நிச்சயம். அந்தளவு அங்கதம் குரூரமாக வாசிப்பு வழியாக மனதில் இறங்கி நம்மை வதைக்கிறது. எதுவுமே மாறவில்லை என்பதுதான் நூலை வாசித்து நிறைவு செய்யும்போது தெரிய வரும் உண்மை. இருட்டில் நிற்கும் நம்மை வதைத்து வெளிச்சத்தை நோக்கி திரும்ப வைப்பதும் கூட அதுதான்.

கோமாளிமேடை குழு

https://archive.org/details/DarbariRagamShukla







 









 







 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்