வன்முறையைப் பயன்படுத்தி மக்களை பணிய வைக்கும் சாமர்த்தியம்!
மேலாதிக்க சாதியினர், கையில் பத்திரிகைகளை கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களை நடத்துகிறார்கள். அரசிடம் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்கள் அதிகாரத்தை வலியுறுத்துபவர்களை வெடிகுண்டு வீசுபவர்கள், ஒழுங்கின்மை கொண்டவர்கள், பேரிடரை விளைவிப்பவர்கள் என வசைபாடி தவறான கருத்துகளை முன்முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள்.
முதலாளித்துவத்தைக் கொண்டுள்ள அரசு, தன்னைக் காத்துக்கொள்ள பேரிடரை ஏற்படுத்துகிறது. வன்முறையை கைக்கொள்கிறது. மக்கள் அதிகாரம், இதற்கு எதிரான இயல்பைக் கொண்டுள்ளது. அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி என இரண்டையும் உருவாக்க முனைகிறது.
ஜனநாயகவாதி, முடியரசு விசுவாசி, சோசலிசவாதி, போல்ஸ்விக், மக்கள் அதிகாரர்கள் என எவரும் கூட வெடிகுண்டுகளை வீசலாம். வன்முறையைக் கையில் எடுக்கலாம். இன்றைய சூழலில் வன்முறை ஒருவரின் கையில் திணிக்கப்படுகிறது. அதை மக்கள் எவரும் வேண்டுமென தேர்ந்தெடுக்கவில்லை. ப்ரூடஸ் தனது நண்பனான அரசன் சீசரைக் கொன்றான். அவனுக்கு தனது நண்பன் குடியரசுக்கு துரோகம் செய்துவிடுவானோ என்ற பயம் இருந்தது. ப்ரூடஸ் நண்பனை விட ரோமை அதிகம் நேசித்தான் என்று கூறமுடியாது. வில்லியம் டெல் தனது நாட்டை ஆண்ட சர்வாதிகாரியை சுட்டுக்கொன்றான். அவனுக்கு மக்கள் அதிகாரம் பற்றியெல்லாம் தெரியாது. சர்வாதிகார கொடுமைகளை எதிர்த்து இளைஞர்கள் புரட்சி செய்கிறார்கள். அச்சூழலில் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். அதை அவர்கள் முதன்மைத் தேர்வாக கருதுவதில்லை. இந்த வகையில் தேசப்பற்றுள்ளவர்கள், ஜனநாயகவாதிகள், குடியரசுவாதிகள், சோசலிசவாதிகள், மக்கள் அதிகாரர்கள் என பலரும் இப்படி செயல்பட்டிருக்கிறார்கள்.
இன்றும் பெண்ணின் யோனியில் இரும்பு குழாயை சொருகியவர்களை காவல்துறை கண்டுபிடித்து சுட்டுக்கொல்வது நடக்கிறது. ஆனால், அதை மக்கள் வெளிப்படையாக எதிர்ப்பதில்லை. உள்ளுக்குள் மகிழ்ச்சி கொண்டாலும் சட்டப்பூர்வ அடிப்படையில் அதை ஏற்கமுடியாது. உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மன் கைசரை கொல்ல அமெரிக்க இளைஞர்கள் பல்லாயிரம் பேர் முன்வந்தது எப்படி, தெற்கு ரஷ்யாவில் வாழ்ந்த யூதர்களைக் கொன்றழித்த பெட்லுராவை படுகொலை செய்தவரை பிரெஞ்சு நீதிமன்றம் சட்டப்பூர்வமாக தண்டித்தது எதற்காக?
உலக நாடுகளில் சர்வாதிகாரிகள் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற, அல்லது கொல்ல நாட்டு மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். வரலாற்றில் சர்வாதிகாரம், அதற்கு எதிரான போராட்டம் சுழற்சி போல திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருப்பதுதான். அது ஒன்றும் புதிதல்ல.
சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் மக்கள் எவரும் குறிப்பிட்ட கட்சி சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சர்வாதிகாரத்தைப் பிடிக்கவில்லை அவ்வளவுதான். சிலசமயங்களில் அவர்கள் மதவாதிகளாக இருப்பார்கள். அதுவும் கூட தற்செயலானதே. அமெரிக்க அதிபர்களில் மூன்று பேர் தனிப்பட்ட மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்ப்போம். 1865ஆம் ஆண்டு லிங்கனை ஜான் வில்கிஸ் பூத் என்பவர் சுட்டுக்கொன்றார். இவர் அமெரிக்காவின் தென்பகுதி ஜனநாயகவாதி. 1888ஆம் ஆண்டு, கார்பீல்டு என்பவரை சார்லஸ் ஜூல்ஸ் கிட்டேயு என குடியரசுவாதி சுட்டார். 1901ஆம் ஆண்டு, மெக்கின்லியை லியோன் ஸோல்கோஸ் என்பவர் படுகொலை செய்தார். இவர். மக்கள் அதிகார தத்துவவாதி.
ஜார் மன்னர் காலத்தில் ரஷ்யாவில் அடிப்படை பேச்சுரிமை, கருத்துரிமை தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அதை எதிர்த்து மக்கள் போராடினர். வென்றனர். இப்படி போராடுபவர்கள் எல்லோருமே மக்களையும் நாட்டு சுதந்திரத்தையும் விரும்புவர்கள். வேறுவழியில்லாத நிலையில் துப்பாக்கி, வெடிகுண்டை கையில் எடுத்தனர். இவர்களை நிகிலிஸ்ட் என்று அழைக்கிறார்கள். இவர்களை மக்கள் அதிகாரர்கள் என்று கூற முடியாது.
ஆஸ்திரியாவின் மன்னர், செர்பிய நாட்டு குடிமகன் ஒருவரால் கொல்லப்பட்டு உலகப்போர் தொடங்கியது. செர்பிய நாட்டு்க்காரர், தனது நாட்டை நேசித்தார். இதன் விளைவாக அரசரை படுகொலை செய்யும் முடிவை எடுத்தார். அவருக்கு மக்கள் அதிகாரம் பற்றி ஏதும் தெரிந்திருக்காது என நம்பலாம். வன்முறையை கையில் எடுப்பது பற்றி இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கென தனிப்பார்வை இருக்கலாம். உலகளவில் வன்முறையை இயல்பாக பயன்படுத்தி மக்களுக்கு அச்சமூட்டுபவர்களில் இத்தாலியின் பாசிஸ்ட் கட்சி, அமெரிக்காவின் கு கிளக்ஸ் கிளான், மெக்சிகோவின் கத்தோலிக்க தேவாலயம் ஆகியோர் புகழ்பெற்றிருந்த காலம் ஒன்றுண்டு.
மக்கள் அதிகாரர்கள், அரசியல் வன்முறையை கருவியாக பயன்படுத்துபவர்கள் அல்ல. அதை ஏகபோகமாக்கி்க்கொள்பவர்களும் அல்ல. அமைதி, ஆக்கிரமிப்பற்ற தன்மை ஆகியவற்றை கடைபிடிப்பவர்கள்தான். ஆனால் அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழக்கூடியவர்கள். இதில் ஒருவர் வன்முறையைப் தேர்ந்தெடுப்பதற்கு தனிநபரே பொறுப்பு. அதற்கு தனி தத்துவம் ஏதும் ஆதரவாக இல்லை.
மதவாதத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கம், கலாசாரத்தை காக்கிறேன் என சிறுபான்மையினர் வீட்டை இடிக்கிறது. பெண்களை வல்லுறவு செய்கிறது. ஆண்களை பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது. நேரடியாக சுட்டுக்கொல்வதும் உண்டு. இவற்றை பொதுவான மக்கள் அதிகாரர்களி்ன் பாணி என்று கூறிவிட முடியாது. இதை அவர்கள் ஆதரிப்பதில்லை. குறிப்பாக அச்சத்தின் வழியாக செய்ய நினைப்பதை செய்வது. இப்போது வன்முறையைப் பற்றி பார்ப்போம்.
வன்முறையை மக்கள் பலரும் விரும்புகிறார்கள். அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள். அமைப்பு ரீதியாகவும் வன்முறை உள்ளது. வெளிப்படையாக பலருக்கும் தெரியாமல் இருக்கக்கூடும். அரசின் சட்டங்களை எடுத்துக்கொள்வோம். அதை மீறினால் காவல்துறை கைது செய்து லாக்கப்பில் வைத்து சித்திரவதை செய்யும். அதை தாண்டி உயிர் பிழைத்தால் சிறையில் தள்ளப்படுவீர்கள். சட்டத்திற்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். இல்லையெனில் அரசு உங்களை தனது ஆட்களை வைத்து கட்டாயப்படுத்தும். தேவாலயமும், ஆன்மிக ரீதியில் இதே கட்டாயத்தை முன்வைக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவருமே ஞாயிறன்று இறைவனின் சந்நிதானத்தை வந்தடைய வேண்டும். இதை பாதிரியார் வலியுறுத்துகிறார். கிறிஸ்துவின் தொன்மை நூல்களுக்கு எதிராக பேசுபவர்கள், மத எதிரிகள். அவர்களை தாக்குவதற்கு மத வெறியர்கள் பாய்கிறார்கள்.
சிறுவயதில் குழந்தையை தான் நினைத்ததை செய்யவைக்க பெற்றோர் வன்முறையை கையாள்வதும் உண்டு. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் அங்குள்ள விதியை சட்டத்தை பின்பற்றி கீழ்ப்படியவேண்டும். இல்லையெனில் தண்டனை உண்டு. சம்பளம் வாங்க உரிமையாளர் சொல்லும் கிறுக்குத்தனங்களை கீழ்ப்படிந்து செய்யவேண்டியிருக்கிறது. மதத்தைப் பொறுத்தவரை ஒரே கடவுள், சொர்க்கம் நரகம் என உளவியல் கற்ற பாதிரிமார்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒருவரின் வாழ்க்கை முழுக்க பயம் மட்டுமே சங்கிலி போல தொடர்கிறது. அதிகாரம், தண்டனை, கீழ்ப்படிதல், வன்முறை இல்லாமல் வாழ்கையே நடப்பதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக