உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்!
பாயும் பொருளாதாரம்
உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்!
இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நிதி அறிக்கையில் வருமானம் இருந்தால் பனிரெண்டு லட்சம் வரையில் சம்பாதிப்பவர்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. கேட்க நன்றாக இருப்பதெல்லாம் நடைமுறையில் பெரிய பயனைத் தருவதில்லை. உலகமயமாக்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தின் நூல்களை படித்து முழுமையாக புரிந்துகொள்ளலாம். நாம் இங்கு அதைப்பற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறோம். உலகமயம் என்பது அனைத்து நாடுகளையும் இணைத்து செய்யும் பெரிய வணிக சங்கிலி என்றுகூறலாம்.
உலகமயத்திற்கு பெரிய பயன்பாடாக கன்டெய்னர் அமைந்தது. நிலம், நீர் என இரண்டிலும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல முடியும். கப்பல் மூலம் கன்டெய்னர்களை கடலில் கொண்டு செல்கிறார்கள். நிலத்தில் வாகனங்கள், ரயில் மூலம் கன்டெய்னர்களைக் கொண்டு செல்லலாம். இந்த வகையில்தான் 1954ஆம் ஆண்டு 57 பில்லியன் டாலர்களாக இருந்த கன்டெய்னர் வணிகம், 2018ஆம் ஆண்டில் 18 டிரில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது. இதில் வணிகம் சார்ந்த ஆதரவு தொழில்நுட்பமாக இணையம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆப்கள் ஆகியவற்றை உதாரணமாக காட்டலாம்.
தொழில் மட்டும் என்ன இன்று உலக அரசியலே எக்ஸ் தளத்திற்கு வந்துவிட்டது. அதில்தான் முக்கியமான அறிவிப்புகளைக் கூட அரசியல்வாதிகள், நாட்டின் தலைவர்கள் வெளியிடுகிறார்கள். இத்தனைக்கும் அது அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் கிடையாது. தனியார் நிறுவனம்தான் நடத்துகிறது. ஆனாலும் உலகின் பேரளவு மக்கள் அதில் இருக்கிறார்கள். அவர்களை செய்தி சென்று சேரவேண்டும். நல்ல செய்தியோ, போலிச்செய்தியோ உடனே மக்களின் தகவல் தொடர்பு சாதனங்களில் சென்று சேர்ந்துவிடுகிறது.
உலகமயம் என்பது சுதந்திர வணிகத்தை அடிப்படையாக கொண்டது. அனைத்து நாடுகளும் பிற நாடுகளின் வணிக விதிகளை மதித்து ஏற்கவேண்டும். அப்படியில்லை. தற்சார்பு, உள்ளூர் வணிகத்தை காப்பாற்றுகிறேன் என கிளம்பினால், வணிகத்தை நிறுத்திவிடுவார்கள். இதனால் மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களைக் கூட பெற முடியாது. இப்போது சீனாவை எடுத்துக்கொள்வோம். பெரும்பாலான வளர்ந்த நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட பல்வேறு மருந்துகள், வாகனங்கள், கணினிகள் என பலவற்றுக்கும் சீனாவைச் சார்ந்தே இயங்குகிறது. என்னதான் சீனாவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையில் புழுங்கினாலும் வேறுவழியில்லை. அந்த நாட்டை கைவிட்டால் அடிப்படையாக மூலப்பொருட்களுக்கே பெரிய செலவு செய்யும் நிலை ஏற்பட்டுவிடும்.
ஏழை எளிய நாடுகளில் பொருளாதாரம் சரிந்தாலும் கூட மக்கள்தொகை அதிகரித்தே வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களுக்கான பொருட்களை உலகமயமாக்கம் மூலம் பெற்றுத்தர முடியும்.
சீனா, கல்வி ஆராய்ச்சியில் கவனம் வைத்து ஆழமாக தேடு என்ற நோக்கில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கிறது. இன்னொருபுறம் ஏழை நாடான இந்தியா, ஆழமாக தோண்டு என்ற லட்சியத்தில் பின்வாங்காமல் சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களின் நிலங்களைத் தோண்டி வருகிறது. போலி அறிவியலைக் கைக்கொண்ட நாடு, எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைத்துவிட முடியும் என்று தெரியவில்லை. உலகமயமாக்கம் என்பதில் தொழில்நுட்பம் வேகமாக பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்து, மேற்கு நாடுகளை சென்று சேர முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் இன்று டீப்சீக் ஏஐ, எவ்வளவு எளிதாக மேற்கு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தேசப்பாதுகாப்பு என்ற வயிற்றெரிச்சலின் பெயரில் தடை செய்யப்படும்வரை நம்மால் அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
சீனா, டீப்சீக் ஏஐயை கண்டுபிடித்துவிட்டது. எனவே இந்தியா அத்தொழில்நுட்பத்தை அப்படியே வைத்துக்கொண்டு பெயரை மட்டும் வடமொழியில் வைத்தால் போதும். அது உடனே இ்ந்தியத் தயாரிப்பாக மாறிவிடும். இந்தியா முழுக்க குஜராத் வணிகர்களின் கையில் போய்விட்டது. புதிய கண்டுபிடிப்புகளை விட தரகு வேலை பார்த்து வணிகம் செய்வது எளிது.
உலகமயம் என்பது சுதந்திரமான சிறிய நாடுகளுக்கு சிக்கலாகவே இருக்கும். ஏனெனில் அவர்களின் வணிகசட்டங்களை பன்னாட்டு நிறுவனங்களால் பின்பற்ற முடியாது. அரசுக்கு இதன் வழியாக எதிர்பார்த்த வரி வருமானமும் கிடைக்காது. சிலசமயம், பணியாளர்கள் வேலையை இழப்பார்கள். உலகளவில் சீனா, குறைந்த கூலிக்கு பணிகளை செய்து தருகிறது. எனவே, ஆப்பிள், மைக்ரோசாப்ட் என மனிதநேயத்தை அதிகம் பேசும் அமெரிக்க நிறுவனங்கள் கூட அங்கு தம் ஆர்டர்களை வழங்குகின்றன. சீனாவில் செ்யது வாங்கிய பொருட்களை அசெம்பிள் செய்து அமெரிக்க தயாரிப்பு என்று சொல்லி விற்றுவிடலாம். முழு உலகமும் அரசியல்பேச்சுகளைக் கடந்து மறைமுகமாக இப்படித்தான் இயங்குகிறது.
குறிப்பிட்ட நாடு இரண்டு அல்லது மூன்று பொருட்களை மட்டும்தான் விற்கிறது எனக் கொள்வோம். அதை வாங்குகிற மக்களின் தேர்வு மாறினால், அல்லது பொருளாதார பிரச்னைகள், மந்தநிலை ஏற்பட்டால் அந்த நாட்டின் ஏற்றுமதி கீழே வீழும். வணிகம் சிறப்பாக நடைபெற்றால் விற்கும், பொருளை வாங்கும் நாடுகள் என இரண்டுமே பயன்பெறும். இது நட்பாக மாறி, இரு நாடுகளும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்றாக செயல்பட வாய்ப்புள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக