வன்முறைதான் எங்கள் மொழி!
வன்முறை ஒரு தொடர்சங்கிலியைப் போல சமூகத்தை இணைத்துள்ளது. வன்முறைக்கு ஆதாரமே, அரசுதான். சட்டப்பூர்வமாக வன்முறையை அனைவரும் ஏற்கும்படியாக மாற்றுகிறது. அமைதியாக போராடுபவர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது, லத்தியால் அடித்து துன்புறுத்துவது என அரசு இயங்குகிறது.
மக்கள் அதிகாரம் என்பது பலாத்காரம், வலுக்கட்டாயம் இல்லாத அரசில்லாத சமூகம். அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மக்கள் சுதந்திரமாக, விடுதலையாக இருக்கலாம். ஒருநாள் நீங்கள் காலையில் எழும்போது உங்கள் நாட்டில் அரசு அமைப்பு இல்லையென்று தெரிகிறது. உடனே என்ன தோன்றும்? அதுநாள் வரை கொல்லலாம் என்று நினைத்த சித்தப்பா மகனை உடனே கொன்று போடலாம் என்றா? இல்லை அது மனச்சிதைவுக்கு உள்ளானவர்களின் செய்கை. இயல்பான மனிதர்கள் அப்படி இயங்க மாட்டார்கள். அரசு இல்லையென்றால், நிறைய கொள்ளை, கொலை நடக்குமோ என்று கூறுவார்கள். கொள்ளை, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள். அதைச் செய்யும்போது ஒருவகை மகிழ்ச்சியை உணர்கிறார்கள். எனவே, அத்தகைய செயல்களை செய்கிறார்கள். அரசு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை என்பது நடந்துகொண்டேதான் இருக்கும்.
தினசரி வாழ்க்கையில் அரசு என்ன செய்கிறது என்று பார்த்தால் பெரிதாக எந்த செயலையும் செய்வதாக இருக்காது. ஆனால் அரசு ஒருவரின் வாழ்க்கையில் தலையிட்டு விதியை கடைபிடிக்க கூறலாம். அதை மீறியதற்காக கைது செய்யலாம். ஒருவரை தன் விருப்பப்படி ராணுவ சேவைக்கு கட்டாயமாக அனுப்பலாம். நீங்கள் விரும்பியோ இல்லையோ கட்டாயமாக வரியை செலுத்த உந்தலாம். உங்களை தேச துரோகி என முத்திரை குத்தலாம். நாடு கடத்தலாம். சொத்துக்களை கைப்பற்றலாம். உங்களுக்கு கடையில் கிடைக்கும் சமையல் பொருட்களை கட்டுப்படுத்தலாம். வாங்கும்படியும் சூழல் உருவாக்கமுடியும். வாங்க முடியாதபடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தலாம். விலைவாசியை நினைத்தபடி ஏற்றி இறக்க முடியும். அரசு நினைத்தால், தனது அதிகாரத்தின் கீழ் ஒருவரை ஒன்றுமில்லாதவராக மாற்றிவிட முடியும்.
வேலை இருக்கிறவனை இப்படி சமாளிக்கலாம். வேலை இல்லாதவன் திருடக்கூடாது. குற்றம் செய்யக்கூடாது என கண்காணித்து தடுக்கவே ஏராளமான அரசு அமைப்புகள் உள்ளன. காசில்லாதவனுக்கு அரசு மருத்துவமனைகள் ஓரளவுக்கு உதவி செய்கின்றன. இப்போது அங்கும் பல்வேறு சோதனைகளுக்கு காசு வாங்குகிறார்கள். அங்குள்ள பணியாளர்களுக்கு கொடுக்கும் கையூட்டு என பெரிய தொகையை அவன் சேமிப்பில் இருந்து எடுத்து கையில் வைத்திருக்கவேண்டும். இல்லையெனில் அரசு அவனுக்கு அளிக்கும் மருத்துவ சிகிச்சையை ஒருவன் பெறவே முடியாது. அரசு கொடுக்கும் வீட்டில் ஒருவன் நிம்மதியாக படுத்துறங்கி எழுந்து அடுத்தநாள் உயிரோடு இருந்தாலே பெரிய விஷயம். அந்தளவு தரமாக கான்க்ரீட்டுகள் பெயர்ந்து, கம்பிகளை எண்ணிவிடும் தரத்தில் வீடுகள் இருக்கும்.
காவல்துறை, நீதிமன்றம், வழக்குரைஞர்கள், அரசு அதிகாரிகள் என அனைவருமே குளத்தில் ஊறிய மட்டைகள் போல இருப்பார்கள். லஞ்சம், கொள்ளை எல்லாமே இன்று சமதர்மாக்கப்பட்டுவிட்டது என தர்பாரி ராகம் நூலில் ஶ்ரீலால் சுகல் எழுதியிருப்பார். அதேதான், நீதிபதி பதவியில் இருப்பவர்கள், மதரீதியான தீவிரவாத அமைப்பின் மாணவர்கள் அல்லது ஆதரவாளர்கள்தான். அங்கே இருந்து கொண்டு அவர்கள் விடும் பிதற்றலைக் கேட்டால் அந்த இடத்திலேயே தலை கிறுகிறுக்கத் தொடங்கும். முன்முடிவுகளோடு, சாதி, மத, இன வெறுப்பை, வன்மத்தை தீர்ப்பாக கக்குவார்கள். எனவே, இந்த அரசு அமைப்புகள் மூலமாகவெல்லாம் மனிதர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. மறுபிறவியில் நம்பிக்கை உள்ளவர்கள் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டலாம்.
குற்றங்களை நடக்கும் முன்னரே தடுப்பது அரசின் கடமை. ஆனால் இங்கோ குற்றம் நடந்தபிறகு சாவகாசமாக குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள். அதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? ஏற்கெனவே மக்கள் குற்றத்தால் பாதிக்கப்பட்டு விட்டார்கள். குற்றவாளிகளை பிடித்து அவர்களுக்கென உள்ள வகுப்பில் அடைத்து வைப்பதால், யாருக்கு என்ன நன்மை? குற்றத்தின் மூலாதாரத்தை விஷசெடியின் வேரை தேடி அழிப்பதுபோல அழிக்கவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் வளராது. வறுமையும், கல்வியின்மையும், வேலைவாய்ப்பின்மையும் குற்றங்களை அதிகரிக்கிறது. இதெல்லாம் அரசு செய்யும் குற்றங்கள். இதற்கு யாரும் அரசை தண்டிக்க முடியாது. மேற்சொன்னவற்றின்படி மனிதர்கள் குற்றசெயல்களை செய்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
சரி, தவறு, நீதி, அநீதி எல்லாம் ஒருவர் வாழ்ந்து வளர்ந்து வரும் சூழல்களைப் பொறுத்து அமையும். வீட்டை விட்டு வெளியே வந்து அலைந்து திரியத் தொடங்கினால் சமூக எதார்த்தம் புரியத் தொடங்கிவிடும். இந்த வகையில் பொதுநீதி என்பதை ஒருவர் எளிதாக கண்டுபிடித்துக்கொள்ள முடியும். தான் கண்டுபிடித்த உண்மைக்காக பல அறிவியலாளர்கள், மெய்யியல் சாதகர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் பிரசங்கம் செய்த, எழுதிய உண்மைகளை மூடர் கூடமாக மக்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு நிலைமை மாறியது. உண்மைகளை மக்கள் புரிந்துகொண்டனர். அநீதி களையப்பட்டது. நீதி நிலைநாட்டப்பெற்றது.
மக்கள அதிகாரத்தில் தனியார் சொத்துக்கள், ஏகபோகம் ஏதும் இருக்காது. அப்படி இருந்தால் அனைவருக்கும் முன்னேற வாய்ப்புகள் கிடைக்காது. அனைவரும் சுதந்திரமாக விடுதலை பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதே அடிப்படை நாட்டின் நலத்தில் அனைவரும் ஒன்றுகூட உழைக்கவேண்டும். இதில் எந்த பாகுபாடும் கிடையாது.
மக்கள் அதிகாரத்தில் தனிப்பட்ட உழைப்பு, அதன் மதிப்பு என மதிப்பிடுவதில்லை. அனைவரும் சமூகத்திற்காக உழைக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே உழைப்பை அனுபவிக்க உரிமையுண்டு. மருத்துவர் ஒரு மணிநேரம் செலவிட்டு ஒரு உயிரைக் காப்பாற்றுகிறார். அதே சமயம், தச்சர் மூன்று மணிநேரம் செலவிட்டு நாற்காலியை உருவாக்குகிறார். இதில் எதில் மதிப்பு வாய்ந்தது? அதனளவில் அனைத்துமே மதிப்பு மிகுந்ததுதான். நேர அளவில் பார்த்தால் தச்சர் அதிகநேரம் உழைத்திருக்கிறார் என்று கூற முடியாது அல்லவா?
கருத்துகள்
கருத்துரையிடுக