உங்களது கிரியேட்டிவிட்டியை வளர்க்க உதவும் அற்புத நூல்!
ஸ்டீல் லைக் என் ஆர்டிஸ்ட்
ஆஸ்டின் கிளியோன்
வொர்க்மேன் பதிப்பகம்
இது ஒரு சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால், கார்ட்டூன் கலைஞர் எழுதியிருக்கிறார். அதனால் நூலை வாசிக்கும்போது, படங்கள் அதிகமாகவும் எழுத்து குறைவாகவும் உள்ளது. வாசிக்க அதுவே ஆர்வம் தருவதாகவும் அமைவது ஆச்சரியம்தான்.
பொதுவாக படம் வரைபவர்கள், அதாவது கார்ட்டூன் போடுபவர்களால் எழுதவும் முடியும். அதற்கு அவர்கள் சற்று நூல்களை படித்து பயிற்சி செய்யவேண்டும். அவ்வளவேதான். அந்தவகையில் ஆஸ்டின், தன்னுடைய அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். நூல் முழுக்க புகைப்படங்கள், எழுத்துகள் என அவரது கைவண்ணம் அழகாக உள்ளது.
ஒருவர் தன்னுடைய திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என எளிதாக கற்றுக்கொடுக்கிறார். அனைத்துமே எளிமையான சின்ன சின்ன விஷயங்கள்தான். குறிப்பாக, தினசரி நடக்கும் அனுபவங்களை நோட்டில் எழுதுவது, வேலை செய்யும் இடங்களை டிஜிட்டல் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என சிலவற்றை செய்தாலே நிறைய வேறுபாடுகளை பார்க்கமுடியும் என விளக்கிக் கூறுகிறார். கூடுதலாக நிறைய எழுத்தாளர்கள். ஓவியர்கள், ஓவியக்கலைஞர்களின் மேற்கோள்களும் ஏராளமாக உள்ளன. அவை சொல்லும் கருத்துக்கு வலு சேர்ப்பவையாக உள்ளன.
நூல் நிறைவுபெறும்போது, ஏறத்தாழ வாசிக்கவ வேண்டிய பத்து நூல்களை வேறு பரிந்துரை செய்கிறார். நூலில் ஆஸ்டின் இதுபற்றியும் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். நீங்கள் ஒருவரை பின்பற்றினால், அவர் பின்பற்றும் சிலரை, நூல்களை வாசிக்கவேண்டும் என்கிறார். கூடவே நூலுக்காக எடுத்து வைத்து எழுதாத சில விஷயங்களையும் வரைந்த படங்களாக கொடுத்திருக்கிறார்.
நூல் நூற்றி இருபத்தாறு பக்கங்களைக் கொண்டது. ஆனால், சொல்லும் விஷயங்கள் ஏராளம். ஆஸ்டின் கிளியோன் சொல்லும் விஷயங்கள் எல்லாமே அவரது சொந்த வாழ்க்கையில் அடையாளம் கண்ட விஷயங்கள். அவை அனைத்துமே வாசகர்கள் அனைவருக்கும் பொருந்தாது. என்னதான் விஷயங்கள் அட சொல்ல வைத்தாலும் ஆஸ்டினுடைய வாழ்க்கை அனுபவம்தான் அது. வாசகர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். நூல் வாசிப்பு, குறிப்புகள் எடுப்பது, வேறு இடங்களுக்கு பயணம் செல்வது என நிறைய விஷயங்களை நாம் கருத்தில் கொள்ளலாம். பின்பற்றவும் முயலலாம். நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள ஊக்கமும் உற்சாகவும் அளிக்கிற நூல். அதில் எவ்வித சந்தேகமுமில்லை.
கோமாளிமேடை குழு
நன்றி - எழுத்தாளர் செல்வேந்திரன்
www.astinkleon.com
கருத்துகள்
கருத்துரையிடுக