சமூகப் புரட்சியில் அறிவுஜீவிகளுக்கு உள்ள பங்கு!

 


அரசியல் ரீதியான புரட்சிக்கும் சமூகத்தை அடிப்படையாக மாற்றும் புரட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அரசியல் புரட்சியை ஒருவகையில் ரகசியமாக ஏகபோகமாக கூட நடத்திக் காட்டிவிட முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் என இருதரப்பும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை என்ற இரண்டு அம்சங்களிலும் கூட இருபிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் முக்கியம். இவர்கள் இல்லாமல் எந்த சமூக மாற்றங்களும் நடைபெறாது. இணையம் வந்தபிறகு போராட்டங்களை ஒருங்கிணைப்பு வேறு ஒரு தளத்திற்கு மாறியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பவர்கள், போராட்டங்களை எளிதாக தடுத்து நீக்க முடியும். எனவே, அவை இல்லாமலும் மக்கள் ஒன்றாக இணைந்து களத்தில் செயல்பட முயலவேண்டும். முதலாளிகளைப் பொறுத்தவரை லாபம் வந்தால்தான் ஒரு பொருளை நிர்வாகம் செய்வார். அரசு எதிர்த்தால், தொழில் இழப்பை சந்தித்தால், அதை எதிர்கொள்ளும்படி நிறைய கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்கிக்கொள்வார். அரசுகளின் கருத்தியலுக்கு ஏற்றபடி அல்காரிதங்களை கூட தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றியமைப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம்.

உடல் உழைப்பு, மூளை உழைப்பு என இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதை செய்பவர்களுக்கும் மனதில் தங்களைப் பற்றி பிறரைப் பற்றி ஏராளமான கருத்துகள் உள்ளன. அதெல்லாம் கடந்து உடல் உழைப்பு தொழிலாளர்களும், மூளை உழைப்பாளர்களும் ஒன்றாக இணைந்து நிற்கவேண்டும். ஒன்று இல்லாமல் ஒன்றில்லை என்பதை வேகமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்போதுதான் அடக்குமுறை எழும்போது, அதை எதிர்த்து போராட முடியும். கைகளும், மூளையும் இணைந்து வேலை செய்யவேண்டும் என்று கூறுவார்களே அதேதான். எடுத்துக்காட்டாக, செங்கல் சூளை தொழிலாளர் நன்றாக வேலை செய்தால்தான் பொறியாளர் அக்கற்களைப் பயன்படுத்தி வலுவான கட்டுமானங்களை உருவாக்க முடியும். உற்பத்தி, விநியோகம் என இரண்டு தரப்புமே அதனளவில் முக்கியமானவைதான். இதில் எதையும் மேல் கீழ் என்று பிரிக்க முடியாது.

தொழிலாளர்களின் உற்பத்தியோடு மருத்துவர், கல்வியாளர், அறுவை சிகிச்சை வல்லுநர் ஆகியோரை ஒப்பிட்டால் என்னாகும்? கல்வியாளரோ, மருத்துவரோ அந்தளவில் பொருட்படுத்த தகுந்தவர் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால் குடிமைச்சமூகத்தில் அவர்களுக்கான தேவை இன்றியமையாத ஒன்று. தொழிலாளர்கள், அறிவுஜீவிகளுக்கு இடையில் சிலர் நின்று அவர்களின் இணைப்பைத் தடுத்துக்கொண்டிருப்பதும் நடக்கிறது. குறுகிய எண்ணம், முன்முடிவுகள், புரிந்துகொள்ளும் தன்மை இன்மை ஆகிய சிக்கல்கள் உருவாவதால்தான் பிரிவினை உருவாகிறது. இதனால் நட்புறவு கெட்டு கூட்டுறவு தடுக்கப்படுகிறது.

சோவியத் யூனியனின் அதிபரான லெனில் மேற்சொன்ன பிரச்னைகளை எளிதாகவே புரிந்துகொண்டு நடவடிக்கை எடுத்து நாட்டை மாற்றிக்காட்டினார். பிற மனிதர்களைப் புரிந்துகொள்வதும், கூட்டுறவைக் கைக்கொள்வதும் இச்செயல்பாட்டில் முக்கியமானது. அறிவுஜீவிகள் எப்போதுமே நசுக்கப்படும், அடக்குமுறைக்கு உள்ளாகும் இனக்குழுக்களைப் பற்றி பொது மக்களிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டை பல நூறு ஆண்டுகளின் வரலாற்றை தேடினாலே கிடைத்துவிடும். சுதந்திரமோ, போராட்டமோ அறிவுஜீவிகள் எப்போதுமே தங்கள் குரலை மக்களுக்காக ஒலிக்க தவறியதில்லை. அவர்களின் எழுத்துகள் வழியாக பெருமளவு மக்களுக்கு தேவையான செய்திகள் கிடைத்து கிளர்ந்தெழச் செய்துள்ளன.

போரை சந்தித்து, சர்வாதிகாரத்தை கண்டு மீண்ட நாடுகளில் பொதுநலனை முன்னிட்டு போராடிய பல்வேறு மக்கள் இனக்குழுக்களைக் கண்டறிய முடியும். களத்தில் போராடுவது, அறிவுத்தளத்தில் போராடுவது என இரண்டு வகையான போராட்டங்களைக் கூறலாம். எந்த வித பாகுபாடும் இல்லாமல், இரு தரப்புமே நாட்டிற்கு முக்கியம்தான். சிலர், இரு தரப்பையும் ஏதாவது இழிவான காரணங்களைச் சொல்லி பிரிக்க முயன்று கொண்டே இருக்கிறார்கள். அறிவுஜீவிகள், தொழிலாளர்கள் என இருதரப்புமே சமூக மாற்றங்களுக்கு முக்கியமானவர்கள்தான்.

ஒரு நாட்டின் கலாசாரம், பண்பாடு, நிலப்பரப்பு என பல்வேறு விஷயங்கள் சமூக புரட்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. உளவியல், பழக்கவழக்கம், தொன்மையான மரபு என்று கூட கூறலாம். சமூக புரட்சி என்பது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரிதான். அரசு, சமத்துவமின்மையை ஒழித்துவிட்டு, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை சமூக அளவில் பரவலாக்குதல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள். தொடக்கத்தில் வன்முறை, பலவந்தம் கூட இருக்கலாம். அது அப்படியே தொடராது. ஒழுங்கின்மை, ஊழல், அவமானம், அநீதி ஆகியவை பல்லாண்டுகளாக தொடரும்போது மக்கள் கொதித்தெழுந்து திடீரென வன்முறையில் இறங்குகிறார்கள்.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்