சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம்?

 

 

 

 


 

 

 

அடிப்படையில் ஒரு மனிதர் வேலை செய்து ஒன்றை உருவாக்குகிறார். அதை அவர் முழுக்க சமூகத்தின் உதவியின்றி உருவாக்கினார் என்று கூற முடியாது அல்லவா? அப்படி உருவாக்கியது சமூகத்தைச் சேர்ந்தது. அதை தனது சொத்து என கூறக்கூடாது. எனவே, அப்படி உருவாக்கிய பொருள் சமூகத்திற்கான சொத்து.

நூல், வைரம், உடை ஆகியவற்றை உருவாக்கியவர்களுக்கு முக்கியமானதாக மதிப்புக்குரியதாக தோன்றலாம். மற்றவர்களுக்கு அதில் மதிப்பு இருக்காமல் இருக்கலாம். பசி நேரத்தில் ஒற்றை ரொட்டித்துண்டின் மதிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்? வைரமோ, தங்கத்தைவிட அதிகமாகத்தானே? பத்து ரொட்டிப் பாக்கெட்டுகளை இரண்டுபேர் வாங்க காத்திருக்கிறார்கள். எனில், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. இரண்டு பாக்கெட்டுகளுக்கு பத்துபேர் காத்திருந்தால் விலை அதிகரிக்கும். இதெல்லாம் விநியோகம், தேவையை அடிப்படையாக கொண்ட கணக்கு. ஒருவரின் உழைப்பை எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.அதற்கான அளவுகோலை பாரபட்சமில்லாமல் உருவாக்குவது எளிதான காரியமல்ல.

லாபம், அதீத லாபம், குறைந்த கூலி என பாதையில் வேகமெடுத்தால் அதுதான் முதலாளித்துவப்பாதை. அங்கு, குறைந்த முதலீடு அதிக லாபம் என்பது மட்டுமே இலக்காக உள்ளது. அனைத்துமே சந்தைக்கு ஏற்றபடி கட்டண சேவைதான். தொழிலாளி உருவாக்கும் பொருளை, இன்னொருவர் கட்டணமின்றி தேவைக்காக இன்னொரு பொருளைக் கொடுத்து பெறுகிறார். பகிர்ந்துகொள்கிறார். இங்கு லாபம் இல்லை. பொருளுக்கான விலை இல்லை. தேவை மட்டுமே உள்ளது. பொருளுக்கான உரிமை என்பது கூட பகிரப்படுகிறது. இணைந்து பயன்படுத்துகிறார்கள். இதை கம்யூனிசம் என்று கூறலாம்.

பிறரை விட திறமை குறைந்த மனிதர் இருக்கிறார். அவருக்கு மூளை இறுக்கம் அல்லது கை, கால்களில் ஊனம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இதற்காக அவருக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் பாரபட்சம் அல்லது புறக்கணிப்பை காட்டலாமா? அடிப்படையாக ஒரு மனிதருக்கு தேவையானவற்றை அவருக்கு அளிப்பதே நீதி. இன்றைய உலக பொருளாதாரத்தில் அடிப்படை தேவைகள் என்பது மிகச்சிறிய அம்சம். அப்படியானால் சோம்பேறியாக இருப்பவர்களுக்கு உழைக்கும் மனிதர்கள் பெறும் வசதிகளைக் கொடுக்கவேண்டுமா என்று கூட சிலர் கேட்பார்கள். உலகில் திறமையற்றவர்கள், சோம்பேறி என யாருமே கிடையாது. தனக்கு பிடித்த வேலையை தேர்வு செய்யும் வாய்ப்புள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். தச்சனாக வரவேண்டியவன், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறான். மருத்துவனாக வேண்டியவன், வலை வீசி மீன்பிடித்துக்கொண்டிருக்கிறான். இதற்கு அவரவர் சூழல் அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம். சிலருக்கு குடும்ப செழிப்பு காரணமாக படிக்கும் வாய்ப்பு நுழைவுத்தேர்வு பயிற்சி எல்லாம் கிடைக்கிறது. இன்னொரு புறம், பிழைப்புக்கான வேலை பார்த்தே தன்னை வருத்தி உழைத்து படித்து மேலே செல்பவர்களும் உள்ளனர்.

விருப்பமில்லாத வேலையை ஏற்று செய்பவர்கள் அதில் பெரிதாக முன்னேற்றம் காண்பிக்க மாட்டார்கள். ஏனோதானோவென செய்வார்கள். அதை குறை சொல்ல ஏதுமில்லை. விபத்துகள் நேரும் முன்னர், அவர்களை சரியான சூழ்நிலைக்கு மாற்றிவிட்டால் சோம்பேறித்தனம் மாறிவிடும். அதை சோம்பேறித்தனம் என்று கூட கூறமுடியாது. ஒருவித சொல்ல முடியாத கோபம் என்று கூறலாம். நீங்கள் தெருவில் சந்திக்கும் முதல் நூறு பேரை நீங்கள் விரும்பிய வேலை என்ன, அதைத்தான் செய்கிறீர்களா என்று கேட்டாலே உண்மை தெரிந்துவிடும். பெரும்பாலானவர்கள் விரும்பியதை தொடரமுடியவில்லை. கிடைக்கவில்லை என்று கூறுவார்கள். தவறான இடத்தில் சரியான மனிதர்கள் என்றுதான் இதைக் கூறவேண்டியதிருக்கிறது.

தச்சர், குறிப்பிட்ட மரப்பொருளை உருவாக்குகிறார். சிறிய வில் ஒன்றை உருவாக்குகிறா். அதை அவர் படம் வரைந்து நுணுக்கமாக உருவாக்கிறார். தனக்கெனவே செய்கிறார். அது பின்னாளில் நாட்டின் ராணுவம் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். அப்படி செய்யும்போது அதில் தச்சருக்கு அளவில்லாத மகிழ்ச்சி கிடைக்கிறது. அப்படியான ஆளை, எந்திரத் தொழிற்சாலையில் கொண்டு வந்து நிறுத்தும்போது அவருக்கு என்ன கிடைக்கும்? அவருக்கு உயிர் உள்ளது. இதயம் துடிக்கிறது. எந்திரத்திற்கு அது இல்லை. பொருட்கள் வேகமாக செய்யப்பட்டு குவிகி்ன்றன. தச்சருக்கு மாத சம்பளம்.பொருளின் லாபம், எந்திரத்தை நிறுவிய உரிமையாளருக்கு. அந்த வேலையில் தச்சர் பணியாளர் மட்டுமே. அதில் ஆர்வம் காட்ட என்ன அவசியம் வந்தது?

மக்கள் அதிகாரத்தில், மக்கள் தங்களுக்கு என்ன தேவையோ, எதை செய்யவேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கலாம். இதில் எந்த கட்டாயமும் அச்சுறுத்தலும் இல்லை. துப்புரவுப் பணியாளர்களின் பணி நகரங்களுக்கு முக்கியமானது. அவர்கள் பணியை நிறுத்திவிட்டால், காலரா, மலேரியா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், பிளேக் என பல வியாதிகள் மக்களைத் துரத்தும். இப்படியான பணி செய்பவர்களுக்கு போராட்டம் நடத்தாமல் சம்பளம் உயர்வு தரப்படுவதில்லை. துப்புரவு பணியாளர்கள் செய்யும் பணி என்பது அதிக ஊதியம் பெறும் மருத்துவர், பொறியாளர், பிற துறை வல்லுநர்களுக்கு குறைந்தது கிடையாது. ஆனால், எங்கே பாகுபாடு உருவாகிறது. இரு தரப்பினர் பெறும் ஊதியம்தான் பெரிய இடைவெளியைக் கொண்டதாக உள்ளது. மருத்துவர் ஓராண்டில் பெறும் ஊதியத்தை, துப்புரவு பணியாளர் ஆயுள் முழுக்க உழைத்தாலும் பெற முடியாத சூழல் உள்ளது. ஒருவர் நோயை வரும் முன்னரே தடுக்கிறார். மற்றொருவர் வந்தபிறகு அதை தீர்த்து வைக்கிறார். இரண்டாவதில் நோய் தீருகிறது. அல்லது நோயாளியே தீருகிறார். ஆனால் முடிவு நிச்சயம் தெரிந்துவிடும்.

இன்று தொழிலாளர்கள் வழியாக தொழில்நுட்பம் ஏற்பட பெரிய வாய்ப்பில்லை. அனைத்தும் எந்திரங்கள் ஆகிவிட்டன. அப்படியும் கூட தொழிலாளர்களை வருத்தி பனிரெண்டு மணிநேரங்கள் உழைத்து சுரண்ட முதலாளித்துவ தொழிலதிபர்கள் முயல்கிறார்கள். இதற்கு சாதி,மதம், இனம், தேசப்பற்று என பல்வேறு பூச்சாண்டித்தனங்கள அரசுகள் காட்டுகின்றன. ஒரு காலத்தில் பனிரெண்டு நேரமாக இருந்து குறைக்கப்பட்ட தொழிலாளர்களின் வேலை நேரம் திரும்ப சம்பளம் உயராமல் அதிக வேலை நேரத்தோடு உழைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பதிலாக அவர்களின் உழைப்பில் உருவாகும் பொருட்களை பெறுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். பொருட்களை வாங்க வைக்க பல்வேறு நிபுணர்கள் பட்டாளம் வந்து குவிந்து கிடக்கிறது. உங்களை பொருட்களை வாங்க வைத்தே தீருவது என அவர்கள் முனைப்போடு போராடி வருகிறார்கள்.

தொழிற்சாலைகள் எப்போதும் ஆபத்தானவைகள்தான். அங்கு நிறைய விபத்துகள் நேர்ந்து வந்தன. இப்போதும் பெரிய முன்னேற்றமில்லை. அதை மேம்படுத்தினால் ஏதாவது லாபம் கிடைக்குமா என முதலாளித்துவ தொழிலதிபர்கள் யோசிக்கிறார்கள். அப்படி இருந்தால் மட்டுமே நிலைமை மாறுகிறது. அடிப்படை தேவைகளுக்கே சீனா, இந்தியா போன்ற நாடுகள் போராடி முதுகெலும்பு தேய உழைத்து வருகிறார்கள். நூற்று நாற்பது கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில் மூன்று கோடிப்பேர் மட்டுமே வரி கட்டுகிறார்கள் என்பது சரியான இயல்பா, அதுதான் நீதியா. எதற்காக ஒட்டுமொத்த நாட்டுக்காக சிறுபகுதி மக்கள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டும்? பிறரின நலத்துக்காக இன்னொருவர் தன் வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டுமா?

சமத்துவம் என்பது சமமான வாய்ப்புகள். தாவரமோ, இறைச்சியோ உணவு உண்ணுவது அவரவர் உரிமை. அதற்கான வாய்ப்புகளை நாம் அவர்களுக்கு வழங்குகிறோம். அதை உள்ளே புகுந்து தட்டிப்பறிப்பதில்லை. ஒருவர் மூன்று வேளை சாப்பிடுகிறார். இன்னொருவர் ஆறு வேளை சாப்பிடுகிறார். இதெல்லாம் அவரது உடல் சார்ந்த தேவை. அவர் எப்படி, எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதில் பிறர் தலையிடமுடியாது.

மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உணவுகளை சாப்பிடலாம், விரும்பிய வேலைகளை செய்யலாம். விரும்பிய உடைகளை உடுத்தலாம். இங்கு சுதந்திரம்தான் முக்கியம். சமத்துவம், சமானத்துவம் என்பது அனைவரும் ஒன்றுபோல என்ற அர்த்தத்தில் இல்லை. அதாவது பள்ளி சீருடை போன்றதல்ல மனிதர்களின் வாழ்க்கை. ஒருவர் குழந்தையாக இருக்கும்போது செய்யும் செயல்களுக்கு நோக்கம் இருப்பதில்லை. பட்டாம்பூச்சியைக் கூட துரத்திக்கொண்டு செல்லமுடியும். எதற்காக அந்த செயலை குழந்தை செய்கிறது. அதற்கு அந்த வயதில் நோக்கம் தேவையில்லை. அச்செயலை செய்யும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. அதே குழந்தை வயது வந்தபிறகு, உலகமே அவன் செய்யும் ஒவ்வொன்றுக்கும் நோக்கம் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் சாதனைகளை செய்யவேண்டுமென அச்சுறுத்துகிறது. பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், ஒருவரை மிரட்டி அச்சுறுத்தி மனதில் உள்ள எதிர்ப்புத்தன்மையை அழித்து விடுகிறார்கள். இதனால்தான், ஒருவர் பள்ளி கல்லூரி, அலுவலகம் என கீழ்ப்படிந்த தன்மையில் ஆன்மா அழிந்த நிலையில் பணியாற்றுகிறார். மேலாதிக்கத்தில் உள்ளவர்கள் சொன்னால் அதை உடனே ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

ஒரு மனிதர் சுதந்திரமாக சூழல் அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் அவரால் எதையும் யோசிக்க முடியும். அப்படியான சூழலில் அவர் இயல்பான முறையில் பிரச்னைகளை சமாளிக்க சரியான முடிவுகளை எடுப்பார். அல்லது எடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதை பயன்படுத்திக்கொள்வது அவருக்குள் உள்ள திறமையைப் பொறுத்தது. மனிதர்கள் தங்கள் வாழ்வை தேர்ந்தெடுத்த விருப்பங்களுடன் கொண்டாட வேண்டும். பொறுப்புகளை ஏற்பதை அவர்களாகவே விரும்பி செய்யவேண்டும். ஒருவரை கட்டாயப்படுத்தி ஏற்கச்செய்யக்கூடாது. தேவையற்ற சுமைகள், ஒருவரின் செயல்பாடுகளை முடக்குகின்றன. அவரது மகிழ்ச்சி இதனால் பறிபோகிறது. இதனால்தான் போதைப்பொருட்களை பயன்படுத்தியபடி செக்குமாடு போல சில வேலைகளை பிழைப்புக்காக செய்யவேண்டியிருக்கிறது. பிழைப்புக்காக செய்யும் வேலைகளை ஒருவர், சொந்த வாழ்க்கையின் உள்ளே கொண்டு வரும் அவசியமில்லை. இரண்டும் வேறுவேறு தளங்களைக் கொண்டவை.
 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்